அமெரிக்கா சொன்னா கேட்கனுமா? ஈரான்..
17 Mar,2025
ஈரான் ஆதரவில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளின் படை தளங்கள் மீது அமெரிக்கா நேற்று கொடூர தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹவுதிகள் செங்கடலில் அமெரிக்காவின் போர்க்கப்பலை நோக்கி ஏவுகணைகளை ஏவிய நிலையில் டொனால்ட் டிரம்ப் சொன்னால் நாங்கள் கேட்கனுமா? என்ற கேள்வியுடன் ஈரான் கடும் வார்னிங்கை கொடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு கடும் மோதல் உருவாகிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் நீண்ட காலமாக மோதல் உள்ளது.தற்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கும், ஈரானுக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சனை உள்ளது.
இப்படியான சூழலில் தான் இன்று அமெரிக்கா திடீரென்று ஏமன் நாட்டில் செயல்படும் ஹவுதி அமைப்பின் படை தளங்களின் மீது போர் விமானங்களை பயன்படுத்தி அதிரடி தாக்குதலை நடத்தியது. செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹாரி எஸ் ட்ரூமன் விமானம் தாங்கி போர்க்கப்பல் நின்றது. அதில் இருந்து பறந்து சென்ற அமெரிக்காவின் போர் விமானங்கள் ஏமன் தலைநகர் ஸனா மற்றும் வடக்கு சாடா பிராந்தியத்தை குறிவைத்து குண்டுகளை வீசியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 31 ஹவுதிகள் இறந்தனர். 100க்கும் அதிகமானவர்கள்
காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஹவுதி படை தளங்களில் இருந்த ரேடார், தளவாடங்கள் கருகிப்போகின. இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஹவுதிகள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வரும் கிளர்ச்சி படையினர் என்பது தான். அதுமட்டுமின்றி ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நடத்தும் போருக்கு அமெரிக்கா உதவியது. இதனால் இஸ்ரேல், அமெரிக்கா கப்பல்களை குறிவைத்து செங்கடல் பகுதியில் ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு தான் அமெரிக்கா இன்று பதிலடி கொடுத்துள்ளது.
இதுபற்றி டொனால்ட் டிரம்ப்,‛‛செங்கடலில் அமெரிக்க கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கும். ஹவுதிகளின் நேரம் முடிவுக்கு வந்துவிட்டது. உங்களின் தாக்குதலை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நரகத்தை பார்ப்பீர்கள். ஹவுதி படைக்கு ஈரான் அளித்து வரும் ஆதரவையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இனியும் அமெரிக்கா கப்பல், அதிபரை மிரட்ட வேண்டும். மீறினால் மோசமான விளைவை சந்திக்க நேரிடும். ஏனென்றால் அமெரிக்கா ஒருபோதும் உங்களை சும்மா விடாது'' என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் படை தளபதி ஹொசைன் சலாமி கூறுகையில், ‛‛ஏமனின் ஹவுதிகள் சுதந்திரமாக தங்களின்
ஆபரேஷன்களை வகுக்கிறார்கள். ஹவுதிகள் ஈரான் கட்டுப்பாட்டில் இல்லை. ஈரான் எப்போதும் போரை விரும்புவது இல்லை. இதனால் ஈரான் ஒருபோதும் போரை நடத்தாது. ஆனால் யாராவது அச்சுறுத்தினால் அதற்கு பொருத்தமான, தீர்க்கமான மற்றும் உறுதியான பதிலடியை ஈரான் அளிக்கும்'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சாய் அப்பாஸ் அரக்ச்சி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ அமெரிக்காவால் ஒருபோதும் ஈரானின் வெளியுறவு கொள்கையில் தலையிட முடியாது. அந்த அதிகாரம் எல்லாம் 1979 ம்ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அமெரிக்கா சொல்வது போல் வெளியுறவு கொள்கையை ஈரான் மாற்றாது. கடந்த ஆண்டு ஜோ பைடன் அரசு 23 பில்லியன் அமரிக்க டாலர்களை இனப்படுகொலைக்கு (காசா மீதான இஸ்ரேலின் போரை சொல்கிறார்) வழங்கி ஏமாற்றினார். 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் உலக நாடுகள் அமெரிக்காவை பொறுப்பேற்க வைக்கிறது. இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை மற்றும் அதன் பயங்கரவாதத்துக்கான ஆதரவை நிறுத்துங்கள் ஏமன் மக்களை கொல்வதை நிறுத்துங்கள்'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிப்பணியமாட்டோம் என்பதை ஈரான் படை தளபதி ஹொசைன் சலாமி மற்றும் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஹவுதிகள் அறிவித்து இருந்தன. அதன்படி ஹவுதிகள் மீது தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த செங்கடலில் உள்ள அமெரிக்காவின் ஹாரி எஸ் ட்ரூமன் விமானம் தாங்கி போர்க்கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதலை அதிரடியாக நடத்தி உள்ளது. வடக்கு செங்கடல் பகுதியில் வைத்து அமெரிக்காவின் போர் கப்பல் மீது பாலிஸ்ட்டிக் மற்றும் குரூஸ் வகையை சேர்ந்த 18 ஏவுகணைகளை வைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இருப்பினும் இந்த தாக்குதலில் அமெரிக்காவுக்கு சேதம் ஏற்பட்டதா? என்பது பற்றிய விபரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை.
இப்படி அமெரிக்கா, ஈரான், ஹவுதிகள் இடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பிராந்தியத்தில் விரைவில் பெரிய அளவில் மோதல் வெடிக்கிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.