அமெரிக்கா சொல்றதை கேட்க முடியாது.. ரஷ்யா வைத்த பெரிய ட்விஸ்ட்
13 Mar,2025
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும் என்றால் அமெரிக்கா சொல்வதை எல்லாம் கேட்க முடியாது. போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது ரஷ்யா விருப்பப்படி இருக்க வேண்டும். போரை நிறத்தி அமைதி மற்றும் சமாதானத்துக்கான அனைத்து ஒப்பந்தமும் அமெரிக்காவின் விருப்பத்தின்படி இருக்காது. உண்மையான போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது இங்கு எழுதப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்காவும் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்'' என்று ரஷ்யா கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரேபியாவில் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையில் உக்ரைன் போர் நிறுத்தம் செய்ய சம்மதம் தெரிவித்த நிலையில் ரஷ்யா தரப்பில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டொனால்ட் டிரம்ப் என்ன செய்ய போகிறார்? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதனால் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோடு டொனால்ட் டிரம்புக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து போராடி வருகிறார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோரிடம் பேசியுள்ளனர். அதன்பிறகு இருநாடுகளின் பிரதிநிதிகளுடன் சவுதி அரேபியில் அமெரிக்கா பிரதிநிதிகள் பேசினர். நேற்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ,
அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் உள்ளிட்டவர்கள் உக்ரைன் பிரதிநிதிகளுடன் பேசினர். இந்த பேச்சுவார்த்தையின்போது முதற்கட்டமாக 30 நாட்கள் போரை நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்தது. இதுதொடர்பாக ரஷ்யாவிடம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தையின்போது மொத்தம் 5 முக்கிய டீல் பற்றி பேசப்பட்டது.
அதன்படி உக்ரைனுக்கான பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும். உளவு தகவல்கள் மற்றும் ஆயுத பகிர்வை வழங்க ஒப்புதல் செய்யப்பட்டது. 2வது டீல் என்பது 30 நாட்கள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக ரஷ்யாவுடன் பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டு இதனை செயல்படுத்த வேண்டும். 3வது டீல் எனப்து உக்ரைன் நாட்டு கைதிகள், பொதுமக்கள், குழந்தைகளை ரஷ்யா விடுவிக்க வேண்டும். 4வது டீல் என்பது போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பா ஒருபகுதியாக இருக்க வேண்டும். 5வது டீல் என்பது கனிமவள ஒப்புதல் தொடர்பாக ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும். இதன்மூமல் அமெரிக்கா - உக்ரைன் இடையே நீண்டகால உறவை பேண வேண்டும். உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி விரைவில் அமெரிக்கா சார்பில் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதில் உடன்பாடு எட்டப்படும் சூழலில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். ஆனால் இந்த டீல் அனைத்தும் அமெரிக்கா - உக்ரைன் இடையே தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு ரஷ்யா
ஒப்புக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி நேற்று இரவு முதல் ரஷ்யா தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாமல் இருந்தது. தற்போது முதல் முதலாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கமான தலைவர்களில் ஒருவராக அறியப்படும் கான்ஸ்டான்டின் கோசச்சேவ் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இந்த கான்ஸ்டான்டின் கோசச்சேவ் யார் என்றால் ரஷ்யா சார்பில் தூதரக அதிகாரியாக செயல்பட்டவர்.தற்போது. இப்போது ரஷ்யா மேல்சபை உறுப்பினராகவும், ரஷ்யாவின் மேல்சபையின் சர்வதேச வெளிவிவகாரம் சார்ந்த கமிட்டியின் தலைவராக உள்ளார். இதுபற்றி கான்ஸ்டான்டின் கோசச்சேவ் சார்பில்,
‛‛உக்ரைனில் ரஷ்யா முன்னேறி வருகிறது. எனவே ரஷ்யாவுக்கு இது வித்தியாசமான ஒன்றாக இருக்கும். போர் விஷயத்தில் அமைதி மற்றும் சமாதானத்துக்கான அனைத்து ஒப்பந்தமும் ரஷ்யாவின் விருப்பத்தின் படி இருக்க வேண்டும். இது அமெரிக்காவின் விருப்பத்தின்படி இருக்காது. இதனை பெருமைக்காக சொல்லவில்லை. உண்மையான போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது இங்கு எழுதப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவும் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார். முன்னதாக போர் நிறுத்தம் செய்ய உக்ரைன் சம்மதம் தெரிவித்த நிலையில் அதுபற்றி டிரம்ப் கருத்து தெரிவித்து இருந்தார்.
அப்போது ‛‛போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. அடுத்ததாக ரஷ்யாவிடம் பேசுவோம். விளாடிமிர் புதினும் போர் நிறுத்தம் செய்ய சம்மதம் தெரிவிப்பார்'' என்று நம்பிக்கையாக கூறியிருந்தார். ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா சொல்வதை தான் உக்ரைன், அமெரிக்கா கேட்க வேண்டும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போரை நிறுத்த ஆர்வம் காட்டும் அமெரிக்கா மற்றும் அதன் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் டிரம்பின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.