கடுங்கோபத்தில் ஐரோப்பிய நாடுகள்! மொத்தமாக மாறும் உலக அரசியல்
08 Mar,2025
அமெரிக்காவின் தலையீட்டிற்குப் பிறகு ரஷ்யா உக்ரைன் இடையே போர் நிறுத்தம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையே உக்ரைன் உடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் சொல்லி இருக்கிறது. ஆனால், அது ஒரே ஒரு முக்கிய கண்டிஷனையும் வைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
போர் நிறுத்தம் போர் நிறுத்தத்தை ஏற்க ரஷ்யா சில நிபந்தனைகளை விதிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே உக்ரைன் அந்த நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என டிரம்ப் தரப்பு அழுத்தம் கொடுத்து வந்தது.. அதாவது இத்தனை காலம் பைடன் இருந்த வரை உக்ரைன் போர் விவகாரத்தில் உக்ரைனுக்கே அமெரிக்கா முழு ஆதரவு கொடுத்து வந்தது. ஆனால், டிரம்ப் வந்த பிறகு அந்த நிலைமை மாறி, ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமெரிக்கா நடந்து கொள்ளத் தொடங்கியது. சமீபத்தில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும்போது கூட,
"நாங்கள் ரஷ்யாவுடன் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறோம்.. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் உக்ரைனைக் கையாள்வது தான் எனக்கு மிகவும் கடினமாக உள்ளது" என்றார். மிக முக்கிய தடை நீக்கம் இது மட்டுமின்றி ரஷ்யா தனது தாக்குதலை ஆரம்பித்த சமயத்தில் அமெரிக்கா ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்து இருந்தது. அந்த பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது குறித்தும் கூட டிரம்ப் தரப்பு ஆலோசனை செய்து வருகிறதாம். ரஷ்யாவின் முக்கிய வருமானமாக எண்ணெய் வர்த்தகம் உள்ள நிலையில், அதன் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கூட டிரம்ப் தரப்பு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே சவுதியில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது, உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் உளவுத் துறை ரீதியான உதவிகளை அமெரிக்கா மீண்டும் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
ரஷ்யா போடும் கண்டிஷன்
முன்னதாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா அதிகாரிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் குறுகிய கால போர் நிறுத்தத்தைப் பரிசீலிக்க ரஷ்ய அதிகாரிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். முதலில் குறுகியகால போர் நிறுத்தம், அதன் பிறகே ஒப்பந்தங்களை இறுதியான பிறகு நிரந்த போர் நிறுத்தம் என்பதில் ரஷ்யா தெளிவாக இருக்கிறது. இறுதி ஒப்பந்தத்தில் எல்லை எது, பாதுகாக்கப்போவது எந்த நாடு என அனைத்து விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும் என்பதே ரஷ்யாவின் கண்டிஷனாக உள்ளது.
ஐரோப்பிய நாடுகள்
அதேநேரம் ரஷ்யா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் சலுகை காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இது உக்ரைன் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ரஷ்யாவுக்கு டிரம்ப் அதிகமான தளர்வுகளைக் காட்டினால் நிச்சயம் ஐரோப்பிய நாடுகள் அதற்கு எதிர்வினையாற்றும் என்றே தெரிகிறது. ஆனால், டிரம்ப் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர் போர் நிறுத்தம் என்பதை மட்டும் உறுதியாகக் கொண்டு அதற்காகவே நடவடிக்கை எடுத்து வருகிறார்.