ஐரோப்பிய சகாக்களை பாதுகாப்பதற்காக அணுவாயுதங்களை பயன்படுத்துவது குறித்து ஆராய தயார் - பிரான்ஸ் ஜனாதிபதி
07 Mar,2025
அணுவாயுதங்களை பயன்படுத்தி தனது ஐரோப்பிய சகாக்களை பாதுகாப்பது குறித்து ஆராயவுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஸ்ய போரில் அமெரிக்கா ஐரோப்பாவின் பக்கம் இல்லாத நிலையை எதிர்கொள்வதற்கு ஐரோப்பா தயாராகவேண்டும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய கண்டத்தில் எமது நட்புநாடுகளை பாதுகாப்பது குறித்த மூலோபாய விவாதத்தை ஆரம்பிப்பதற்கு நான் தீர்மானித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி எங்கள் அணுசக்தி பாதுகாப்பு எங்களை பாதுகாக்கின்றது அது முழுமையான இறையாண்மை என தெரிவித்துள்ளார்.எங்கள் அயலவர்களை விட பிரான்சின் அணுவாயுதங்களே எங்களை பாதுகாக்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பா புதிய யுகத்திற்குள் நுழைகின்றது ரஸ்யாவின் அச்சுறுத்தலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது முட்டாள்தனம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எங்களின் நெருங்கிய சகாவான அமெரிக்கா திடீர் என உக்ரைன் யுத்தத்திற்கான ஆதரவிலிருந்து மாறியுள்ளது, உக்ரைனிற்கான ஆதரவை குறைத்துள்ளது என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி அமெரிக்கா எங்கள் பக்கம் நிற்கவேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ஆனால் ஆனால் அது இடம்பெறாவிட்டால் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராகயிருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ரஸ்யா இமானுவேல் மக்ரோன் ரஸ்யாவிற்கு நேரடி அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி ரஸ்யாவை ஒரு ஆபத்தாக கருதுகின்றார்,ஐரோப்பிய நாடுகளினதும் பிரிட்டனினதும் முப்படை பிரதானிகளை அழைத்து அணுவாயுதங்களை பயன்படுத்தவேண்டிய தேவையுள்ளது,ரஸ்யாவிற்கு எதிராக அணுவாயுதங்களை தயாரியுங்கள் என தெரிவிக்கின்றார் இது நிச்சயம் மிரட்டலே என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்கேய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.