பனிக்குட நீர் குறைப்பாடு பிரச்சனைக்கான சிகிச்சை
07 Mar,2025
எம்முடைய பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கருத்தரித்திருக்கும் தருணத்தில் அவர்களுடைய கருப்பையில் கருவைச் சுற்றிலும் அம்னோடிக் திரவம் எனப்படும் பனிக்குட நீர் உற்பத்தியாகும்.
இந்த நீர் கருவை பாதுகாக்கும் பிரத்யேக திரவ பொருளாகும். கருவுற்றிருக்கும் தருணத்தில் பெண்மணிகளுக்கு இத்தகைய நீரின் உற்பத்தி சீரானதாக இருக்க வேண்டும். இயல்பான அளவை விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் கருவின் வளர்ச்சியும், பிரசவமும் சிக்கல் நிறைந்ததாக இருக்கும்.
இந்த தருணத்தில் இத்தகைய பிரத்யேக திரவத்தின் அளவு இயல்பான அளவைவிட குறைவாக இருந்தால் அதனை மருத்துவ மொழியில் ஒலிகோஹைட்ராம்னியோஸ் என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய குறைபாடு நிகழாமல் இருப்பதற்கு கருவுற்றிருக்கும் பெண்மணிகள் மகப்பேறு வைத்திய நிபுணர்களிடம் முறையான பரிசோதனையும், ஆலோசனையும் அதற்குரிய சிகிச்சையும் பெற வேண்டும் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்த அம்னோடிக் திரவம் - கருவின் உடல் வெப்பநிலையை சீராக்குகிறது. அதன் நோய் எதிர்ப்பு திறனை வலுப்படுத்துகிறது. தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. கருவின் தசைகள், எலும்புகள் ஆகியவை வளர்வதற்கு உதவி புரிகிறது. தொப்புள் கொடியின் அழுத்தத்தில் இருந்தும் பாதுகாக்கிறது. கருவின் செரிமான மற்றும் சுவாச அமைப்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
இப்படி கருவின் வளர்ச்சிக்கு இன்றியமையாத அளவில் உதவி புரியும் இத்தகைய திரவம் இயல்பான அளவைவிட குறைவாக சுரந்தால் கருச்சிதைவு ஏற்படுவதற்கும், கருவின் உடலில் குறைபாடுகள் ஏற்படுவதற்கும், திட்டமிட்ட திகதிக்கு முன்னரே பிரசவம் நிகழ்வதற்கும் சாத்தியக்கூறு அதிகம். வேறு சிலருக்கு தொப்புள்கொடி சுருக்கம் அல்லது கருப்பையகத்தின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும். இதனால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவுடன் வைத்தியர்களிடம் பரிசோதனை செய்து கொண்டு அவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
உங்களுடைய மகப்பேறு வைத்திய நிபுணர் இத்தகைய அம்னோடிக் திரவம் ஆரோக்கியமாக இருக்கிறதா? போதுமான அளவு இருக்கிறதா? என்பதற்கான அறிகுறிகளை பிரத்யேக அளவிடும் மூலம் கணக்கிடுவார். அதனைத் தொடர்ந்து அவர் பரிந்துரைக்கும் உணவு முறை, வாழ்க்கை நடைமுறையை உறுதியாக கடைப்பிடித்தால் இத்தகைய பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.