அமெரிக்க ராணுவத்துக்கு இனி எரிபொருள் இல்லை..
03 Mar,2025
வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அவமானப்படுத்தி அனுப்பிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு செக் வைத்துள்ளது நேட்டோ நாடான நார்வே நிறுவனம். உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா ராணுவத்துக்கு தேவையான எரிபொருள் சப்ளையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது.
3 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். முதற்கட்டமாக டொனால்ட் டிரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 2 நாளுக்கு முன்பு அமெரிக்க வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். டிரம்ப் அழைப்பை ஏற்று ஜெலன்ஸ்கி அங்கு சென்றார். அப்போது அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமெரிக்கா அதிபர்களை குற்றம்சாட்டுவதாக கூறி ஜெலன்ஸ்கி வெளியே அனுப்பி வைக்கப்பட்டார். ஜெலன்ஸ்கியை அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அவமானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் தொடக்கம் முதலே ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்கா உதவி செய்தது. தற்போது உக்ரைன் மற்றும் ஜெலன்ஸ்கி மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. இனி அமெரிக்காவின் உதவி உக்ரைனுக்கு கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.
இப்படியான சூழலில் தான் ஜெலன்ஸ்கியை அவமானப்படுத்திய அமெரிக்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்பட நேட்டோ நாடுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்துள்ளன. இதற்கிடையே தான் நேட்டோ படையில் உள்ள நார்வே நாட்டில் செயல்படும் நிறுவனம் அமெரிக்காவுக்கு செக் வைத்துள்ளது. அதாவது நார்வே என்பது ஐரோப்பிய நாடாகும். இந்த நாடு அமெரிக்கா உள்பட பிற நாடுகள் இருக்கும் நேட்டோ படையில் உறுப்பினராக உள்ளது. இந்த நார்வே நாட்டில்
‛ஹால்ட்பக் பங்கர்ஸ்' எனும் ஆயில் மற்றும் ஷிப்பிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் கன்னர் கிரான். இந்த நிறுவனம் சார்பில் அமெரிக்காவின் ராணுவத்துக்கு ஆண்டுக்கு 30 லட்சம் லிட்டர் எரிபொருள் அமெரிக்க ராணுவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அந்த நிறுவனம் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க ராணுவத்துக்கான எரிபொருள் சப்ளையை அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.
இதுதொடர்பாக ‛ஹாட்பக் பங்கர்ஸ்' நிறுவனம் சார்பில், ‛‛அமெரிக்க அதிபர், துணை அதிபர் ஆகியோர் தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பிய மோசமான நிகழ்ச்சியை நாங்கள் பார்த்தோம். அமெரிக்கா முதுகில் குத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியபோதும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்ததற்காக உக்ரைன் அதிபருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். இதனால் நார்வேயில் செயல்படும் எங்களின் நிறுவனத்தில் இருந்து அமெரிக்க படைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எரிபொருள் நிறுத்தப்படுகிறது. அதேவேளையில் நார்வேயில் உள்ள அமெரிக்க கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கப்படும்''
என்று கூறப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான கன்னர் கிரான் கூறுகையில், ‛‛டிரம்ப்பின் செயல்பாட்டால் இனி அமெரிக்கா ராணுவத்துக்கு ஒரு லிட்டர் எரிபொருள் கூட டெலிவரி செய்யப்படாது. எங்களை போல் நார்வே மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கையை எடுக்க வேண்டும். நாங்கள் உக்ரைனை ஆதரிக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் ஏராளமான உக்ரைன் பணியாளர்கள் உள்ளனர். போர் நடவடிக்கையால் உக்ரைன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.'' என்றார்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ஏற்கனவே ரஷ்யாவுக்கு அனுப்பி வந்த எரிபொருளை இந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது. இப்படியான சூழலில் தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அவமானப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா ராணுவத்துக்கான எரிபொருள் சப்ளையை நிறுத்தி உள்ளது நார்வே நிறுவனம். இது நேட்டோ நாடான நார்வேயில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் முடிவாகும். அதேவேளையில் இதுபற்றி நேட்டா நாடான நார்வேயின் நிலைப்பாடு பற்றி அந்த நாட்டின் பிரதமர் ஜோனாஸ் கஹர் ஸ்டோர் கூறுகையில், ‛‛டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று 6 வாரங்கள் மட்டுகே ஆகிறது. அவரது செயல்பாடு, அவர் பயன்படுத்தும் வார்த்தைகளின் விளைவுகளை புரிந்து கொள்ள இன்னும் அவருடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார்.