சர்வாதிகாரிகள் பலம் வாய்ந்தவர்கள் காரணமாக மனித உரிமைகள் குறித்த உலகளாவிய கருத்து சிதைந்து வருகின்றது-
25 Feb,2025
மனித உரிமைகள் குறித்த உலகளாவிய ஒருமித்த கருத்து சிதைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலக போருக்கு பிந்தைய தசாப்தங்களில் கட்டமைக்கப்பட்ட உலகளாவிய பாதுகாப்பு அமைப்பு முன்னர் ஒருபோதும் இவ்வளவு நெருக்கடியை சந்தித்ததில்லை என தெரிவித்துள்ள அவர் அதனை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இல்லாவிட்டால் உலகம் கடந்தகாலத்தை போல அநீதிகளால் பாதிக்கப்படும் நிலையேற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வாதிகாரிகள் பலம் வாய்ந்தவர்கள் மற்றும் தன்னலக்குழுக்கள் காரணமாக மனித உரிமைகள் குறித்த உலகளாவிய கருத்து சிதைந்து வருகின்றது என அவர் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை சமூகங்கள் மற்றும் சர்வதேச உறவுகளிற்கு அடித்தளமாகயிருப்பதை உறுதி செய்வதற்காக அனைவரும் முயற்சி செய்வது அவசியம் என குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இல்லாவிட்டால் ஆபத்து என எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியிலும் துன்பம் தாங்கமுடியாததாக காணப்படுகின்றது,இஸ்ரேல் காசாமீது மேற்கொண்ட தாக்குதலின் போதும், ஹமாஸ் மற்றும் ஏனைய பாலஸ்தீன அமைப்புகளின்தாக்குதலின்போதும் இழைக்கப்பட்டசர்வதேச சட்ட மீறல்கள் குறித்து விசாரணைக்கு அழைப்புவிடுகின்றேன். என அவர் குறிப்பிட்டுள்ளார்
எந்தவொரு நிலையான தீர்வும் பொறுப்புக்கூறல்,நீதி சுயநிர்ணய உரிமை இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களிற்கான மனித உரிமை கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும்.மக்களை அவர்களின் நிலத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான எந்த யோசனையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்