10வது நாளாக சிகிச்சை போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: ஆரம்ப கட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு
25 Feb,2025
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்னையால் கடந்த 14ம் தேதி, இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால் ரத்த மாற்று சிகிச்சையும் அளிக்கப்பட்டது. சுவாசப் பிரச்னை காரணமாக அதிக அளவு செயற்கை சுவாசம் (ஆக்ஸிஜன்) வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 10வது நாளாக நேற்றும் போப் பிரான்ஸ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல் நிலை குறித்து வாடிகன் வெளியிட்ட அறிக்கையில், ‘போப் பிரான்சிசுக்கு எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனைகள் முடிவுகளின்படி அவருக்கு சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அது கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். போப் தொடர்ந்து ஆபத்தான கட்டத்திலேயே இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். ஆனாலும், சனிக்கிழமை முதல் அவருக்கு எந்த சுவாச பிரச்னையும் இல்லை. அவர் இரவில் நன்றாக உறங்கினார்’ என கூறப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் நலம் பெற உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதே சமயம், பிரான்சிஸ் சுயநினைவை இழந்தாலோ அல்லது வேறு விதமான இயலாமை ஏற்பட்டாலோ போப் பதவியை ராஜினாமா செய்யலாம் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.