சீனாவில் ஒரு நிறுவனத்தில் கழிவறையை பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீறினால் ஊதியத்தில் அபராதம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் போஷான் நகரில் த்ரீ பிரதர்ஸ் மெஷின் மேனுஃபேக்சரிங் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த நிறுவனம்தான் இப்படி ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.
கடந்த ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தவும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும் கடந்த 11 ஆம் தேதி முதல் இந்த புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விதியின்படி, அங்கு பணிபுரியும் ஊழியர்கள், காலை 8 மணிக்கு முன்பும், காலை 10.30 மணி முதல் 10.40 மணி வரையிலும் நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் 3.40 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் கூடுதல் நேரம் வேலை செய்பவர்கள் இரவு 9 மணிக்கு பிறகு எவ்வளவு நேரமானாலும் கழிப்பிடங்களை பயன்படுத்தலாம்.
ஆனால் மற்ற நேரங்களில் கழிப்பறையை பயன்படுத்த வேண்டுமானால் 2 நிமிடம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு வேளை உடல்நல கோளாறுகள் இருந்தால் நிறுவனத்தின் HR- ரிடம் அனுமதி பெற்றுதான் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்.
அத்துடன் அந்த நிறுவனத்தில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி ஊழியர்களை கண்காணிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விதிகளை மீறும் ஊழியர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ 1200 அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறை இந்த மாத இறுதி வரை சோதனை ஓட்டமாக நடத்தப்படுகிறது. மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்த விதி முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப்படும்.
இது போல் கழிப்பிடம் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்தால் தேவையில்லாமல் உடல்நிலை பிரச்சினைகள்தான் ஏற்படும் என ஊழியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இது தனியுரிமையை பறிக்கும் செயல் என ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். அண்மையில் சீனாவில் ஒரு நிறுவனத்தில் கழிப்பறை செல்வோரை ரகசியமாக படம் பிடித்து, அவர்களில் நீண்ட நேரம் கழிப்பறையை பயன்படுத்தியவர்களுக்கு தண்டனையையும் ஒரு நிறுவனம் வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது போல் டோங்குவான் மாகாணத்தில் ஒரு நிறுவனத்தில் 8 மணி நேர வேலை நேரத்தில் ஒரு முறைக்கு மேல் கழிப்பறை சென்றதற்காக ரூ 240 அபராதம் விதித்தது. இதை ஊதியத்தில் பிடித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறுகையில், பணி நேரத்தில் மாற்றம், ஊதிய மாற்றம், ஓய்வு நேர மாற்றம், பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் ஊழியர்களிடம் அறிவிக்கப்பட வேண்டும். ஊழியர்களும் அவர்களுடைய நலனுக்காக இது போன்ற புதிய நடைமுறைகளை எதிர்க்க உரிமை உள்ளது என தெரிவிக்கிறார்கள். நிறுவனத்தின் திறனை அதிகரிக்கவும் ஒழுக்கத்தை ஏற்படுத்தவும் இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும் தொழிலாளர் உரிமை என இருப்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்கிறார்கள். மேலும் கேமரா வைத்து கழிப்பறையில் கண்காணிப்பதெல்லாம் அதிர்ச்சியளிக்கும் செயல் என்கிறார்கள். இது போன்ற விதிமுறை திணிப்புகளால் பணியாட்களுக்கு வெறுப்பு தட்டி வேலை மீதான கவனம் இல்லாமல் போய்விடும் என்றும் சில குரல்கள் எழுகின்றன.