மீண்டும் பரவும் கொரோனா! இந்த தடவை வவ்வாலில் இருந்து.. அதென்ன HKU5?
22 Feb,2025
சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக அளவில் பொருளாதார ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது அதிலிருந்து மீண்டு சில ஆண்டுகள் கடந்து இருக்கும் நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்றை சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. இந்த முறை வவ்வாலில் இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது.
லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 2020 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2021 டிசம்பர் 31ம் தேதி இடையே கிட்டத்தட்ட 60 லட்சம் மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதற்குப் பிறகு ஒரு கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை இலட்சக்கணத்தை கடந்தது. இதனையடுத்து மத்திய அரசு சார்பில் கொரோனாவுக்கு கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மூன்று தவணைகளாக கொடுக்கப்பட்டது. சுமார் 200 கோடு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் வெளிநாட்டு பயணங்களின் போதும் இந்தியாவில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கியதை பெருமையாக கூறினார்.
தொடர்ந்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஓமிக்ரான் உள்ளிட்ட உருமாற்றங்களை சந்தித்தது. அதற்குப் பிறகு அவ்வப்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் புதிய வகை வவ்வால் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் நிபுணர் குழு அறிவித்துள்ளது. கோவிட்-19 போலவே இந்த வைரஸும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. சீன நச்சுயிரியல் வல்லுனரான ஷி ஷிங்லி தலைமையிலான
நிபுணர்கள் குழு தான் இந்த வைரஸை கண்டறிந்து இருக்கிறது. வூஹான் பல்கலைக்கழகம் மற்றும் வூஹான் நச்சு உயிரியல் மையத்தின் கீழ் இயங்கும் ஆங் சூ ஆய்வகம் மற்றும் ஆங் சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை வைரசுக்கு எச்கேயூ 5 என பெயரிடப்பட்டுள்ளது. இது ஜப்பானைச் சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வவ்வால்களில் இருப்பதாகவும் இந்த வைரஸ் கொரோனாவை போல சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் சார்ஸ் கோவிட் வைரஸ் போன்று ஏஸ்2 வகை ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
வவ்வால் மூலம் வைரஸ் பரவு, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தாவிட்டால் மேலும் பலருக்கும் பரவும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மனிதர்களின் சுவாச மற்றும் குடல் உறுப்புகளில் இந்த வைரஸ் பிரச்சினை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இந்த வைரஸ் எப்படி உருவானது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படும் நிலையில், இந்த வைரஸ் எப்படி உருவானது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சீனா வைரஸை பரப்பியதாக உலக நாடுகள் குற்றம் சாட்டின் நிலையில் அதனையும் ஷி ஷிங்லி மறுத்துள்ளார்.