சிறுவனை கொன்ற பட்டாம்பூச்சி? ஆடிப்போன பிரேசில்..
22 Feb,2025
பட்டாம்பூச்சியால் ஒருவரை கொல்ல முடியுமா?. கண்களை கவரும் விதமாக நம் வீட்டு தோட்டத்தில் அழகாக உலா வரும் பட்டாம்பூச்சி 14 வயது சிறுவனை கொன்று உள்ளது என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. இப்படியான சூழலில் தன் பட்டாம்பூச்சியால் மனிதனை கொல்ல முடியுமா? என்பது பற்றி எக்ஸ்பர்ட்ஸ் கூறியுள்ள கருத்து திடுக்கிட வைக்கின்றன. பட்டாம்பூச்சி.. நம் வீட்டு தோட்டங்களில் பல்வேறு வண்ணங்களை உடலில் சுமந்து அழகாக பறந்து வருவதை நாம் பார்த்து இருப்போம். இந்த பட்டாம்பூச்சி உருவத்தில் மிகவும் சிறியது. அதேபோல் அழுத்தமாக பிடித்தாலே அது இறந்துவிடும்.
ஆனால் இந்த பட்டாம்பூச்சியால் 14 வயது சிறுவனே இறந்து உள்ளான். அந்த சிறுவன் யார்? பட்டாம்பூச்சியால் அவனுக்கு எப்படி இறப்பு நேர்ந்தது? என்பது பற்றிய விபரம் வருமாறு: பிரேசில் நாட்டை சேர்ந்தவன் டேவி நுனிஸ் மொரைரா. இவனுக்கு 14 வயது ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவனுக்கு காலில் காயம் மற்றும் அலர்ஜி ஏற்பட்டு இருந்தது. அதன்பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டான். இதையடுத்து சிறுவனை அவரது தந்தை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகும் கூட சிறுவனின் உடல்நல பிரச்சனை சரியாகவில்லை. சிறுவனின் உடல்நலம் மோசமானது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக இன்னொரு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். இந்நிலையில் தான் சிறுவனின் இறப்பு பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தந்தையிடம் விளையாடும்போது காலில் காயம் ஏற்பட்டு விட்டது. இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதன்பிறகு தான் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிறுவனின் உடல்நலம் மோசமாகி வந்தது. இதனால் டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரிடம் என்ன நடந்தது? என்பது பற்றி கேட்டுள்ளனர். அப்போது அவன், சில நாட்களுக்கு முன்பு இறந்த பட்டாம்பூச்சியை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கலக்கி உள்ளார். அதன்பிறகு பட்டாம்பூச்சி உடல் கலந்த தண்ணீரை ஊசியில் எடுத்து அவன் தனது காலில் செலுத்தியதாக தெரிவித்துள்ளான். அதன்பிறகே தனது காலில் அலர்ஜி ஏற்பட்டு உடல்நல பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்தான். மேலும் சிறுவன் பயன்படுத்தும் தலையணையின் அடியில் இருந்து ஊசியும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் சிறுவன் விபரீத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதோடு சிறுவனின் இறப்புக்கு பட்டாம்பூச்சி தான் காரணமாக இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். பட்டாம்பூச்சியில் இருந்து ஏதேனும் உடலுக்கு ஒவ்வாத கிருமி சிறுவனின் உடலில் சென்று இருக்கலாம். இதனால் அவன் இறந்து இருக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள். அதோடு சிறுவனின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர் டாக்டர்கள். இதுபற்றி பிரேசில் பாஹியா போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஆன்லைன் சேலஞ்ச் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அதேபோல் போலீஸ் பிரிவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛சிறுவனின் இறப்புக்கான காரணம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலமாக தான் தெரியவரும்'' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் சிறுவனின் இறப்புக்கு பட்டாம்பூச்சி காரணமாக இருக்குமா? என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளது. இதுபற்றி பட்டாம்பூச்சி நிபுணரும் சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் விலங்கியல் அருங்காட்சியக இயக்குநருமான மார்செலோ டுவர்டே கூறுகையில், ‛‛பட்டாம்பூச்சியின் உடலில் திரவம் இருக்கும். இது அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் இந்த சிறுவனுக்கு உடலில் அலர்ஜி அதிகமாக இறந்து இருக்கலாம். பட்டாம்பூச்சிக்கு மனிதனின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்குமா? என்பது பற்றி விரிவான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை'' என்று கூறியுள்ளார். மேலும் பட்டாம்பூச்சி சார்ந்த ஆய்வை மேற்கொண்டு வரும் நிபுணர்கள் கூறுகையில், ‛‛பட்டாம்பூச்சியின் மீது சில திரவங்கள் உள்ளன. இந்த திரவங்கள் மனிதனின் உயிருக்கே உலை வைக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதேவேளையில் நாம் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
பட்டாம்பூச்சிகளில் பல வகைகள் உள்ளன. இதில் பல பட்டாம்பூச்சி இனங்கள் நச்சுத்தன்மை வாய்ந்த பால்வீட் தாவரங்களில் இருக்கும் கம்பளிபூச்சிகளை சாப்பிடுகின்றன. அத்தகைய பட்டாம்பூச்சிகளில் சிறியளவு நச்சுத்தன்மை கொண்ட விஷம் இருக்கலாம். இதன்மூலம் மனிதர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் உயிர் போகும் என்று கூறிவிட முடியாது'' என கூறியுள்ளனர். இதனால் பிரேசில் நாட்டின் சிறுவன் இறப்புக்கு பட்டாம்பூச்சி தான் காரணமா? இல்லையா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. அனைவரும் அந்த சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்நோக்கி காத்துள்ளனர்.