போப் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் நடந்த திடீர் அதிசயம்.
20 Feb,2025
.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் மேல் வானவில் தோன்றியிருப்பது, கிறிஸ்தவர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. கடவுள்தான் அதிசயத்தை நிகழ்த்தியிருப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். இந்த அதிசயம் போப்பின் உடலை சரியாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் தலைவராக போப் இருக்கிறார். ஆனால் இவருக்கு சமீபத்தில் உடல் நலக்கோளாறுகள் தீவிரமடைய தொடங்கின. எனவே, சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நீண்ட காலமாக வாட்டிகனுக்கு உள்ளேயே சிகிச்சை பெற்று வந்த அவரை, ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அவரது மருத்துவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், போப் அதை தீவிரமாக மறுத்து வந்தார். சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி காரணமாக அவர் தற்போது வாட்டிகனில் உள்ள ஜெமெல்லி பாலிகிளினிக்கில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் போப் மீண்டும் நலம் பெற்று வர வேண்டும் என்று வேண்டி வருகின்றனர். மூச்சுக்குழாய் அழற்சிக்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை இவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
நோயின் தன்மையையும், தீவிரத்தையும் புரிந்துக்கொண்ட அவர், இதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்துக்கொண்டாகவும் கூறியுள்ளார். நேற்று போப்பின் உடல்நலம் குறித்து மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஆனால் அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் மேல் தோன்றிய வானவில், கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. போப் மீண்டும் நலம் பெற்று திரும்பும் அதிசயம் நிகழ இருக்கிறது. அதற்கான அறிகுறிதான் இது என்று பலரும் கூறியுள்ளனர். இறைவன் வானவில் மூலமாக போப்பை ஆசிர்வதிக்கிறார் என்றும் சிலர் கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும்,
புகைப்படங்களும் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொடுப்பது நுரையீரல்தான். ஆனால், நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் செயல்பாடு குறைவானதாக இருக்கும். எனவே ஆக்சிஜனை அனைத்து பகுதிகளுக்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்படும். இதனால், இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், மூளை உள்ளிட்டவை செயலிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த சிக்கலில்தான் போப் இருக்கிறார். அவர் பூரணமாக குணமடைந்து வர வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் வேண்டி வருகின்றனர்.