ஒரு விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, பூமியின் உட்புற மையக்கருவின் வடிவம் கடந்த 20 ஆண்டுகளில் மாறியிருக்கக் கூடும்.
பூமியின் நடுப்பகுதி ஒரு பந்து போன்ற வடிவில் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், அதன் ஓரங்கள் சில இடங்களில் 100 மீட்டர் உயரத்துக்கு உருக்குலைந்திருக்கலாம் என்பது அந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசியர் ஜான் விடாலின் கூற்று.
சூரியனின் கதிரியக்கத்தில் இருந்து பூமியில் வாழும் உயினங்களை காக்கும் காந்தப்புலத்தை உருவாக்கும் பூமியின் உட்புற மையக்கருவே நமது கிரகத்தின் துடிக்கும் இதயமாக இருக்கிறது.
பூமியோடு தொடர்பில்லாமல் உட்புற மையக்கரு, தனியாக சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சுழற்சி இல்லாவிட்டால், பூமி அழிந்து, பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தனது காந்தப் புலத்தை இழந்த செவ்வாயைப் போன்று வறண்டு போய்விடும்.
இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?
திடமான மையக்கருவின் ஓரம், மிகவும் சூடான திரவ நிலையில் உள்ள உலோக வெளிப்புற மையக்கருவை தொடும் இடத்தில் வடிவ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடும்.
நேச்சர் ஜியோசயின்ஸ் என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டில் பூமி சுழலும் வேகத்தை விட உட்புற மையக்கரு சுழலும் வேகம் குறைந்து பின்னர் மீண்டும் வேகமெடுத்ததற்கு என்ன காரணம் என்பதை அறிவதற்காகத்தான் விஞ்ஞானிகள் ஆய்வு செய்துகொண்டிருந்தனர்.
பூமியின் மையக்கரு எப்படி இருக்கும்?
பூமியை பாதுகாக்கும் காந்தப்புலத்தை புரிந்துகொள்ளவும் அது வலுவிழக்குமா அல்லது நின்றுவிடுமா என்பதை புரிந்துகொள்ளவும், பூமியின் மையக்கரு எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.
நமது பூமியின் உட்புறம் மிகவும் மர்மமான ஒரு பகுதியாகும். மையக்கரு பூமியின் மேற்பரப்பிலிருந்து 4,000 மைல் ஆழத்தில் உள்ளது. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் விஞ்ஞானிகளால் இதுவரை மையக்கருவை அடைய முடியவில்லை.
எனவே, அதன் ரகசியங்களை புரிந்துகொள்ள, நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வலைகள் பூமி முழுவதும் பரவும் போது அவற்றை கணக்கெடுக்கின்றனர் சில ஆய்வாளர்கள்.
இந்த அலைகள் பயணம் செய்யும் விதத்தைக் கொண்டு அவை பூமியின் உட்கரு உட்பட எந்த பொருட்களை கடந்துள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது நமது பூமிக்குக் கீழே இருப்பது என்ன என்பதை கண்டறிவதில் உதவியாக இருக்கும்.
வேகம் குறைந்த உட்புற மையக்கரு
1991 முதல் 2023வரை ஒரே இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் அதிர்வலைகளை இந்த புதிய ஆய்வு கணக்கில் எடுத்துக்கொண்டது. பூமியின் உட்புற மையக்கரு எப்படி காலப்போக்கில் மாறியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அது உதவியது.
அந்த காலகட்டத்தில் சுமார் 2010-ஆம் ஆண்டுவாக்கில் உட்புற மையக்கரு வேகம் குறைந்தது என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் கூடுதல் ஆதாரங்களை கண்டுபிடித்தவர் தெற்கு கலிஃபோர்னிய பல்கலைக் கழகத்தில் புவியியல் விஞ்ஞானியாக இருக்கும் பேராசிரியர் விடால்.
ஆனால், உட்புற மையக்கருவின் வடிவம் மாறுகிறது என்பதற்கான ஆதாரத்தையும் அவரது குழுவினர் கண்டுபிடித்தனர்.
இது உட்புறக்கரு மற்றும் வெளிப்புற கருவின் எல்லையில் உட்புற மையக்கரு உருகும் நிலையில் உள்ள இடத்தில் நிகழ்வதாக தெரிகிறது. வடிவ உருகுலைவுக்கு, வெளிப்புற மையக்கருவின் திரவ ஓட்டம் மற்றும் சமச்சீர் இல்லாத புவி ஈர்ப்பு விசையின் ஈர்ப்பு காரணமாக இருக்கலாம்.
இந்த ஆய்வில் பங்கேற்காத ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹர்வாயே டுகல்சி "மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய கருத்துரு," என இந்த ஆய்வு குறித்து குறிப்பிட்டுள்ளார்.
"நவீன அறிவியலில் அதிகம் அறியப்படாத உட்புற மையக்கருவின் பாகுத்தன்மை உள்ளிட்ட முக்கிய பருப்பொருள் குறித்த மதிப்பீடுகளைச் செய்ய இது விஞ்ஞானிகளுக்கு உதவக்கூடும்" என அவர் தெரிவித்தார்.
காலப்போக்கில் வெளிப்புற மையக்கரு, திடமான உட்புற மையக்கருவை போல் உறைந்துகொண்டிருக்கிறது. ஆனால் அது முழுமையாக திடமாக மாறுவதற்கு பல கோடி ஆண்டுகள் ஆகும்.
அது கிட்டத்தட்ட பூமியில் உயிரின் அழிவை காட்டும். ஆனால் அதற்குள் இந்த கிரகத்தையே சூரியன் விழுங்கியிருக்கக் கூடும்.
பூமியின் மையக்கருவில் என்ன நடக்கிறது?
பூமியின் மையக்கருவுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி உலகெங்கும் வல்லுநர்கள் நடத்தி வரும் ஆய்வின் ஒரு அங்கமாக பேராசிரியர் விடாலின் பணி உள்ளது.
"அறிவியலில், பொதுவாக ஒரு பொருளை புரிந்து கொள்ளும் வரை அவற்றை திரும்பத்திரும்ப பார்க்க முயற்சிப்போம்," என்கிறார் பேராசிரியர் விடால்.
"இந்த கண்டுபிடிப்பு ஒரு துளிகூட நமது வாழ்வை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. ஆனால் உண்மையில் பூமியின் மையக்கருவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்," என மேலும் சொல்கிறார்.
கடந்த சில பத்தாண்டுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் காந்த புலத்தில் திடீர் அதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. அதற்கும் உட்புற மையக்கரு எல்லையில் நாம் காண்பதற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்," என்றார்.
மையக்கரு சுழல்வதும் விரைவில் நின்றுவிடப் போகிறது என்பது போன்ற எண்ணங்களை ஏற்படுத்துவதை தவிர்ப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் விடால்.
இன்னமும் நிச்சயமற்ற பல விஷயங்கள் இருப்பதாக அவர் கூறினார்.
"இந்த முடிவுகளை நாம் சரியாக புரிந்து கொள்கிறோமா என்பதை 100% உறுதியாக எங்களால் சொல்லமுடியாது." என்றார் அவர்.
அறிவியல் அறிவின் எல்லைகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பல ஆய்வாளர்களைப் போல் தான் சொன்னதும் கடந்த காலத்தில் தவறாகியிருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் விடால்.