உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்துவதாக தொடர்ந்து கூறி வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்நிலையில் தான் போர் நிறுத்தத்துக்கு முன்பாக டொனால்ட் டிரம்ப் சார்பில் வழங்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை பார்த்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அதில் கையெழுத்திட மறுத்துள்ளார். அதோடு அந்த ஒப்பந்தத்தின் மூலம் உக்ரைனின் பெரும் வளங்களை ஆட்டையை போட அமெரிக்கா திட்டமிட்டுள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போரை தொடங்கியது.
இன்னும் சில நாட்கள் கடந்தால் இந்த போர் தொடங்கி 3 ஆண்டு நிறைவு பெறும். இந்த போரால் உக்ரைன் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான கட்டடங்கள் உருக்குலைந்துள்ளன. ரஷ்யாவுக்கும் இழப்பு, உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அது உக்ரைனை காட்டிலும் குறைவு என்று தான் சொல்லப்படுகிறது. இந்த போரை நிறுத்த இந்தியா உள்பட பல நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் இன்னும் போர் மட்டும் நிற்கவில்லை. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அதிபராகி உள்ள டொனால்ட் டிரம்ப் இந்த போரை நிறுத்துவதாக தொடர்ந்து கூறி வருகிறார்.
அதுமட்டுமின்றி போர் நிறுத்தம் தொடர்பான பணிகளை டிரம்ப் தொடங்கி உள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், அவர் தொலைபேசியில் பேசி உள்ளார். அதேபோல் ஜெலன்ஸ்கியிடமும் பேசி உள்ளார். அதுமட்டுமின்றி போர் நிறுத்தம் தொடர்பாக இருதரப்பிடமும் பேசுவதற்கு என்று தனிக்குழுவை டிரம்ப் அமைத்துள்ளார். முதற்கட்டமாக டிரம்பின் குழுவை சேர்ந்தவர்கள் சவூதி அரேபியாவில் வைத்து ரஷ்ய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ரஷ்யா சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிலையில் அமெரிக்கா குழுவில் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ,
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் சார்பில் யாரும் அழைக்கப்படவில்லை. இது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அதிருப்தியடைய வைத்துள்ளது. இப்படியான சூழலில் தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் உக்ரைன் மீதான போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முயன்று வருவதன் பின்னணி தான். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனை தடுத்து மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதை தாண்டி இதன் பின்னணியில் இன்னொரு மெகா பிளானை அமெரிக்கா வைத்துள்ளது.
அந்த பிளான் என்னவென்றால் உக்ரைனில் இருக்கும் கனிமவளங்களை அந்த நாட்டின் அனுமதியுடன் அமெரிக்காவுக்கு அள்ளி செல்வது தான். அதாவது உக்ரைனை எடுத்து கொண்டால் அங்கு அரியவகையான பல கனிமங்கள் புதைந்து கிடைக்கின்றன. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கனிமங்களின் புதையல் என்றே உக்ரைனை கூறலாம். அதாவது 2024 உலக பொருளாதார மன்ற அறிக்கையின்(2024 World Economic Forum Report) படி உக்ரைனில் பல அரிய வகை கனிமங்கள் நிறைந்துள்ளன.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உக்ரைனில்
பெர்லியம், மாங்கனீஸ், காலியம், யுரேனியம், ஜிர்கோனியம், கிராபைட், புளுரைட், நிக்கல் படிகங்கள் மட்டுமின்றி லித்தியம், டைட்டேனியம் உள்ளிட்டறை உக்ரைனில் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பாதுகாப்பு, டெக்னாலஜி, கிரீன் எனர்ஜி உள்ளிட்ட துறைக்கு தேவையான கனிமங்களாக உள்ளன. Advertisement இந்த கனிமங்களை ஆட்டையை போட அமெரிக்கா விரும்புகிறது. அதாவது டொனால்ட் டிரம்ப் முதலில் இருந்தே உக்ரைன், ரஷ்யாவுடன் மோதி இருக்க கூடாது. அமெரிக்காவின் பணம் பெருமளவுக்கு உக்ரைனுக்காக செலவிடப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்திலேயே கூறி வந்தார். அதோடு அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றதும் போரை நிறுத்துவேன் என்று சொன்ன டொனால்ட் டிரம்ப், நாங்கள் உக்ரைனுக்கு என்னவெல்லாம் கொடுத்தோமோ அதை எல்லாம் திரும்ப பெற விரும்புகிறேன். அவர்களிடம் இருக்கும் அரிய வகை கனிமங்களை எடுக்க விரும்புகிறோம். ரூ.43.33 லட்சம் கோடி மதிப்பிலான கனிமங்களை உக்ரைனில் இருந்து அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்று கூறியிருந்தார்.
இதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு ஒப்பந்தம் ஒன்றை தயார் செய்தது. இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு துறை சார்ந்த மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து கையெழுத்து வாங்க முயன்றார். அந்த ஒப்பந்தத்தை பார்த்து விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒரு நொடி உறைந்துபோய்விட்டார். இதற்கு முக்கிய காரணம் அந்த ஒப்பந்தத்தில் இருந்த தகவல் தான். அதாவது,
‛‛ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா உதவி செய்து வருகிறது. இதற்கு பல லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதனை திரும்ப செலுத்தும் வகையில் உக்ரைனில் உள்ள கனிமங்களில் 50 சதவீதத்தஅமெரிக்கா அள்ளி செல்ல அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து தான் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஷாக்கானார். அவர் கையெழுத்திட மறுத்தததோடு, தனது நாட்டு அமைச்சரவையும் இந்த ஒப்பந்தத்துக்கு உடன்படகூடாது என்று உத்தரவிட்டார். இது பேசும்பொருளாகி உள்ளது.
அதோடு இந்த விவகாரத்தில் அமெரிக்கா - உக்ரைன் இடையே பிரச்சனை என்பது ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை பகைத்தால் அது உக்ரைனுக்கு இன்னும் பிரச்சனையாக மாறலாம். அதாவது தற்போது ரஷ்யாவை எதிர்த்து போரிட வழங்கும் உதவிகளை அமெரிக்கா நிறுத்தலாம். இதனால் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தற்போது செய்வதறியாது நிற்கிறார். இதனால் தற்போது அந்த ஒப்பந்தத்தில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சங்களை சேர்க்க வேண்டும் என்று விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிடம் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் உக்ரைனின் மோசமான நிலை தான். அதோடு உக்ரைனும் தொடர் போரை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. தற்போது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தான் உதவி செய்து வருகின்றன. இதனால் உக்ரைனும் போர் நிறுத்தத்தை விரும்புகிறது. இதற்கு அமெரிக்கா உதவும். மாறாக போர் தொடர்ந்தாலும் கூட ரஷ்யாவை சமாளிக்க அமெரிக்கா உதவும் என்று விளாடிமிர் ஜெலன்ஸ்கி நினைக்கிறார். எது எப்படியோ முதலில் ரஷ்யாவிடம் இப்போது அமெரிக்காவிடம் என்று அடுத்தடுத்து 2 வல்லரசு நாடுகளுக்கு இடையே சிக்கிய உக்ரைன் சிக்கி சின்னாப்பின்னமாகி வருவது என்பது உண்மை தான் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.