பூமி மீது மோதும் விண்கல்.. தனி படையை உருவாக்கும் சீனா!
16 Feb,2025
பூமி மீது விண்கல் ஒன்று மோத உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர். இந்த பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற சீனா தனி படையை உருவாக்க தொடங்கியுள்ளது. 'planetary defence force' என்கிற பெயரில் இளைஞர்களையும், விஞ்ஞானிகளையும் வேலைக்கு அமர்த்த சீனா திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் விண்கல் மோதல் குறித்த துல்லியமான தகவல்களை முன்கூட்டியே பெற முடியும்.
சீனாவில் உள்ள தேசிய பாதுகாப்புக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை நிர்வாகம் (SASTIND), கிரக பாதுகாப்பு படைக்கு (planetary defence force) ஆட்களை எடுப்பதாக தெரிவித்திருக்கிறது. WeChat போன்ற சோஷியல் மீடியாக்களில் இது குறித்த விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 16 பதவிகளுக்கு ஆட்கள் தேவை என சொல்லப்பட்டிருக்கிறது. விண்வெளி பொறியியல், விண்கற்களை கண்டறிதல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற, 35 வயதுக்கு குறைவானர்கள் இந்த வேலைக்கு தேவை என சொல்லப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிப்பவர்கள் வானியற்பியல்(astrophysics), பூமி மற்றும் விண்வெளி ஆய்வு தொழில்நுட்பம் (earth and space exploration technology), விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (aerospace science and technology) போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். பூமிக்கு அருகே இருக்கும் விண்கற்களை கண்காணிப்பது, அதன் நகர்வுகள் குறித்து அறிக்கை கொடுப்பது ஆகியவைதான் இவர்களுக்கான வேலை. இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சீனா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கிறது.
பிரச்சனை என்ன? ஹவாயில் அமைந்திருக்கும் விண்வெளி ஆய்வு கூடத்திலிருந்து, கடந்த டிசம்பர் மாதம், '2024 YR4' எனும் விண்கல்லை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இது குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு சூரியனை சுற்றி வரும். தற்போது சூரியனை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு விலகி சென்றுக்கொண்டிருக்கிறது. மீண்டும் 2027ம் ஆண்டு இதேபோல சூரியனுக்கு நெருக்கமாக வரும். அப்போது பூமியிலிருந்து இதனை தெளிவாக பார்க்க முடியும். அதேபோல, 2032ல் மீண்டும் வரும். அந்த நேரத்தில் பூமி மீது மோதும்.
பூமி மீது மோதுவதற்கு வெறும் 1.1% தான் சான்ஸ் இருப்பதாக முதலில் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆய்வின்படி சுமார் 2.2% வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இது பூமியை தாக்க எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை சரியாக கணிக்கவும், பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்றவும் சீனா 'planetary defence force' என்கிற பெயரில் புதிய படையை உருவாக்கி வருகிறது. பாதிப்புகள் என்ன? '2024 YR4' விண்கல் 40-90 மீட்டர் அகலம் கொண்டிருக்கலாம் என்றும், இது பூமி மீது மோதினால், மோதிய இடத்திலிருந்து சுமார் 50 கி.மீ பரப்பளவுக்கு புல் பூண்டு கூட இருக்காது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மட்டுமல்லாது நிலநடுக்கமும், சுனாமியும் மற்ற இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். தவிர எரிமலை வெடிப்புக்கும் கூட வாய்ப்பு இருக்கிறது.
சில கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர் இனம் அழிந்ததும் இந்த விண்கல் வெடிப்பால்தான். 1 கி.மீ சைஸ் கொண்ட விண்கல் பூமி மீது மோதியதால், எரிமலைகள் வெடித்தன. அதனால் உருவான புகை, பூமியை சூழ்ந்தது. எனவே செடி, கொடி மரங்களும் பின்னர் அதை நம்பியிருந்த சைவ விலங்குகளும், இறுதியாக டைனோசர்களும் அழிந்தன. அப்படியொரு அழிவு இனி நமக்கு நடக்காது என்று நாம் நம்புவோமாக!