இரவு நேர தசை பிடிப்பு பாதிப்பிற்குரிய சிகிச்சை
14 Feb,2025
விளையாட்டு துறையின் உள்ளவர்களுக்கும் , வீட்டில் உள்ள முதியவர்களுக்கும் பல தருணங்களில் தசை பிடிப்பு பாதிப்பு ஏற்படும். இதற்காக அவர்கள் வைத்தியர்களை சந்தித்து பிரத்யேக சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் பெறுவார்கள். அதே தருணத்தில் வேறு சிலருக்கு இரவு நேரத்தில் தசை பிடிப்பு பாதிப்பு ஏற்படும். இதனால் அவர்களுடைய உறக்கம் கெடுவதற்கான வாய்ப்பு உண்டு. இதுபோல் இரவு நேரத்தில் தசை பிடிப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதனை மருத்துவ மொழியில் நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் என குறிப்பிடுகிறார்கள். இதற்கும் தற்போது எளிய முறையிலான சிகிச்சையின் மூலம் நிவாரணம் கிடைக்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
தசைப்பிடிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடும். ஆனால் சிலருக்கு இரவு நேரத்தில் அவர்களுடைய கெண்டைக்கால் பகுதியில் உள்ள தசையில் பிடிப்பு பாதிப்பு ஏற்பட்டு, வலி உண்டாகலாம். அதே தருணத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும் இரவு நேரத்தில் தசை பிடிப்பு பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் சிறுநீரக பாதிப்பு, நீர் சத்து குறைபாடு, நீரிழிவு, உயர் குருதி அழுத்த பாதிப்பு என பல்வேறு காரணங்களாலும் கூட இரவு நேரத்தில் தசை பிடிப்பு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதனை தவிர்ப்பதற்கு வைத்தியர்கள் பரிந்துரைத்த அளவில் குடிநீரை நாளாந்தம் அருந்த வேண்டும். இரவு நேரத்தில் தசைப்பிடிப்பு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் அவர்கள் இரவில் உறங்குவதற்கு முன் குடிநீரை அருந்தலாம். மேலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வைத்தியர்கள் அவர்களின் மருத்துவ வரலாறை ஆராய்ந்த பிறகு பிரத்யேக இயன்முறை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.
பல தருணங்களில் இரவு நேர தசை பிடிப்பு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். அதே தருணத்தில் விளையாட்டு துறையில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் நீர்ச்சத்து குறைபாட்டின் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தால்.. உடனடியாக வைத்தியர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் இயன்முறை சிகிச்சையை மேற்கொண்டால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.