ராஜினாமா கடிதத்தை என்டரை’ தட்டி அலுவலகத்துக்கு அனுப்பிய பூனை
25 Jan,2025
சீனாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் பூனைகளை பராமரிக்க வேண்டும் என்பதற்காக ராஜினாமா கடிதத்தை லேப்டாப்பில் ‛டைப்' செய்து மனம்மாறி அனுப்பாமல் வைத்தார். ஆனால் அந்த கடிதத்தை அவர் வளர்த்த பூனை பாஸுக்கு அனுப்பி வைத்தது. இதனால் அந்த இளம்பெண் தனது பணியை பறிகொடுத்துள்ளார். சீனாவின் சோங்கிங் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர். இதனால் வீட்டில் 9 பூனைகளை வளர்த்து வருகிறார்.
l
இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வேலை பளுவால் தான் ஆசையாக வளர்த்து வரும் பூனைகளுக்கு தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று நினைத்தார். இதனால் அவர் தனது பணியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் தனது லேப்டாப்பில் ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை டைப் செய்தார். அதோடு அந்த கடிதத்தை அலுவலக பாஸுக்கு அனுப்ப முடிவு செய்து அவர்களின் இ-மெயில் முகவரியையும் தேர்வு செய்து வைத்திருந்தார். இந்த சமயத்தில் அவரது மனம் திடீரென்று மாறியது. அதாவது பூனைகள் மீது பாசம் காட்ட பணியை ராஜினாமா செய்தால் வாழ்வதற்கான செலவுக்கு என்ன செய்வது? என்று நினைத்தார். இதனால் அவர் அந்த ராஜினாமா கடிதத்ததை அனுப்பாமல் அப்படியே வைத்துவிட்டார். அதேபோல் லேப்டாப்பையும் அவர் ஆஃப் செய்யவில்லை. அப்போது திடீரென்று அவர் வளர்க்கும் பூனை ஒன்று மடிக்கணினி அருகே சென்று ‛என்டர்' பட்டனை அழுத்தி உள்ளது.
இதனால் அவரது ராஜினாமா கடிதம் அவர் பணியாற்றும் நிறுவன பாஸுக்கு சென்றுவிட்டது. அந்த கடிதத்தை பார்த்த பாஸ் அதனை ஏற்றுக்கொண்டார். இதுபற்றி அறிந்து அதிர்ச்சியான அந்த 25 வயது பெண், நடந்த சம்பவத்தை கூறி தன்னை மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளும்படி தனியார் நிறுவன பாஸிடம் கெஞ்சியுள்ளார்.
ஆனால் அந்த தனியார் நிறுவனத்தின் பாஸ் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இனி பணியில் சேர்க்க முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்.. இதனால் அந்த பெண் தற்போது புதிய பணியை தேடிவருகிறார். ஆசையாக வளர்த்த பூனைகளை கவனிக்க ராஜினாமா செய்ய முடிவு செய்த இளம்பெண் தான் வளர்க்கும் ஒரு பூனையாலேயே வேலையை இழந்துள்ள சம்பவம் தற்போது இணையதளத்தில் பேசும்பொருளாகி உள்ளது