செபோர்ஹெக் டெர்மடிடிஸ் தோல் பாதிப்புக்கு சிகிச்சை
21 Jan,2025
எம்மில் சிலருக்கு அவர்களுடைய முகத்தின் சில பகுதிகளில் பரு போல் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதனை மருத்துவ மொழியில் செபோர்ஹெக் டெர்மடிடிஸ் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
உச்சந்தலை, புருவங்கள், தாடி, மீசை, முகம், மூக்கின் பக்கவாட்டு பகுதி, காது, கண் இமைகள், மார்பு, அக்குள் , இடுப்பு போன்ற பகுதிகளில் தோல் உரிவதை போல் பொடுகு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சிலருக்கு இத்தகைய பாதிப்பில் செதில் செதிலாக தோல் உரிந்திருக்கும். அந்த இடத்தில் சிலருக்கு தோலில் நிறமாற்றம் ஏற்பட்டிருக்கும். இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவதானிக்கலாம்.
மன அழுத்தம், அதீத சோர்வு, சருமத்தில் இயல்பான அளவைவிட கூடுதலான எண்ணெய் பசை, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சீரற்ற தன்மை, பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகள் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்றால், அவர்களை தோல் வைத்திய நிபுணர்கள் தோல் திசு பரிசோதனையை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
அதனுடன் முடி மற்றும் தோல் பராமரிப்பிற்காக கிறீம், களிம்பு , ஷாம்பூ உள்ளிட்ட சிலவற்றை பாவிக்க வேண்டும் என பரிந்துரைப்பார்கள். இதனை தொடர்ச்சியாக மேற்கொண்டால் இத்தகை பாதிப்பிலிருந்து விடுபடுவதுடன் மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.