சிட்டிங் டிஸீஸ் பாதிப்ற்கான சிகிச்சை
21 Jan,2025
இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவதை பாரிய அளவில் விரும்புகிறார்கள். மேலும் இந்தத் துறையில் நாளாந்தம் பத்து மணி தியாலத்திற்கும் அதிகமாக ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றவும் செய்கிறார்கள்.
இவர்களில் பலருக்கும் சிட்டிங் டிஸீஸ் என குறிப்பிடப்படும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இத்தகைய பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் சுகாதார வல்லுநர்கள் வழங்கி இருக்கிறார்கள்.
நாளாந்தம் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக ஆறு மணி தியாலத்திற்கு மேலாக பணியாற்றினால் அவர்களுக்கு சர்க்கரை நோய், இதய பாதிப்பு, ரத்தக் கொதிப்பு, பக்கவாதம் போன்ற உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் உண்டாகும் என்றும், பத்து மணி தியாலத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 65 சதவீதமாக இருக்கிறது என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவதால் உடல் உழைப்பு குறைகிறது. இதனால் செரிமான தொடர்பான கோளாறுகள் உண்டாகிறது. இதனால் ஒரே இடத்தில் நான்கு மணி தியாலத்திற்கும் மேலாக அமர்ந்து பணியாற்றுபவர்கள் நாளாந்தம் 45 நிமிடம் வரை உடற்பயிற்சி கட்டாயம் செய்திட வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
மேலும் இவர்கள் 30 வயதிற்கு மேல் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை கலந்து ஆலோசித்து அவர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி, நடை பயிற்சி, உணவு முறை ,உணவு கட்டுப்பாடு ,இயன்முறை பயிற்சி, வாழ்க்கை நடைமுறை , ஆகியவற்றை உறுதியாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் உங்களால் எழுபது வயது வரை ஆரோக்கிய பாதிப்பின்றி வாழ இயலும்.
நாளாந்தம் உடற்பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டால் வாரத்தில் ஐந்து நாட்களாவது நாளாந்தம் 30 நிமிடம் வரை உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும் அந்த 30 நிமிட உடற்பயிற்சியில் 15 நிமிடம் தீவிர நிலையிலான பயிற்சியாகவும், மீதமுள்ள 15 நிமிடங்கள் மிதமான பயிற்சியாகவும் இருக்கும் படி வரையறுத்துக் கொள்ளலாம்.
மேலும் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்கள் ஒரு நிமிடம் முதல் இரண்டு நிமிடம் வரை மைக்ரோ பிரேக் என குறிப்பிடும் வகையினதான சிறிய இடைவெளியை மேற்கொண்டு பத்து முதல் இருபது அடி நடக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.