விந்தணுவில் விஷம்.. மிரள வைத்த ஆய்வாளர்கள்
18 Jan,2025
மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நோய் பரவுவதைக் குறைக்கவும் தொடர்ச்சியாக உலகெங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது. அதில் பல முக்கிய கண்டுபிடிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே விஷம் கலந்து விந்தணுக்களைக் கொண்டு செல்லும் ஒரு வித கொசுக்களை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த காலத்தில் திடீர் திடீரென புதிது புதிதாக நோய்கள் பரவி வருகிறது. குறிப்பாக வெப்ப மண்டல பகுதிகளில் கொசுக்களில் பல வித நோய்ப் பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதனால் உலகெங்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது. சமீபத்தில் கூட ஹெச்எம்பி வைரஸ் இதுபோல சீனாவில் பரவியிருந்தது. இதுபோன்ற நோய்ப் பாதிப்புகள் மனிதர்களிடையே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் நோய்கள் குறித்தும் அதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். விந்தணுவில் விஷம் இதற்கிடையே விஞ்ஞானிகள் ஒரு புதுவித கொசுக்களை உருவாக்கியுள்ளனர். மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட இந்த கொசுக்களின் விந்தணு நச்சுத்தன்மை கொண்டதாக இருக்குமாம்.
வெப்பமண்டலத்தில் பரவும் பல வித நோய்களைத் தடுக்க இந்த வகை கொசுக்கள் ஆயுதமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் அடுத்தகட்ட முயற்சியைத் தொடங்கவுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதாவது ஆய்வாளர்கள் உருவாக்கும் ஆண் கொசுக்களின் விந்தணுவில் நச்சு இருக்கும். அது பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும் போது விஷம் இருக்கும் விந்து பெண் கொசுக்களின் உடலுக்குச் சென்றுவிடும். இதனால் இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் கொசுக்கள் உயிரிழந்துவிடுமாம். பெண் கொசுக்களைக் கொல்லும்:
அது ஏன் பெண் கொசுக்களை மட்டும் கொல்லும் வகையில் வடிவமைக்கிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஏனென்றால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடித்து ரத்தத்தைக் குடிக்கிறது. இதன் காரணமாகவே மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுகிறது. இதன் காரணமாகவே பெண் கொசுக்களைக் கொல்ல இந்த புது வகை கொசுக்களை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆய்வாளர்கள் சொல்வது என்ன: இது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்வாரி பல்கலைக்கழக ஆய்வாளர் சாம் பீச் கூறுகையில்,
"கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் போது கொசுக்கள் மட்டுமின்றி, நமக்குப் பயனுள்ள உயிரினங்களுக்கும் கூட செத்துவிடும். ஆனால், இந்த முறையில் பயனுள்ள உயிரினங்களுக்கு எதுவும் ஆகாது. கொசுக்களை மட்டும் குறிவைத்து காலி செய்துவிடலாம். இந்த புதுமையான ஒரு தீர்வு.. பூச்சிகளை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதையே இது மொத்தமாக மாற்றி அமைத்துள்ளது. இது ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கவும் நமக்கு உதவுகிறது" என்றார்.
முதற்கட்ட சோதனை வெற்றி:
முதற்கட்டமாகப் பழங்களை குறிவைக்கும் fruit flies மீது இதைச் சோதனை முறையில் பயன்படுத்தியுள்ளனர். அதில் சாதகமான முடிவே வந்ததாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது பெண் ஃப்ரூட் ஃப்ளைக்கள் விஷம் கொண்ட விந்தணு வைத்துள்ள ஆண் ஃப்ரூட் ஃப்ளைக்களுடன் இனப்பெருக்கம் செய்கிறது. இதனால் அதன் ஆயுட்காலம் குறைவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது தொடர்பாக ஆய்வாளர் மயிஜ் கூறுகையில், "ஃப்ரூட் ஃப்ளைக்களில் நடத்தப்பட்டு ஆய்வு வெற்றிகரமாகவே முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக அதைக் கொசுக்களில் சோதிக்கவுள்ளோம். மனிதர்கள் அல்லது பிற உயிரினங்களுக்கு இது எந்தவொரு ஆபத்தையும் விளைவிப்பதில்லை என்பதை உறுதி செய்யப் பல கடுமையான சோதனைகளை நடத்த வேண்டி இருக்கிறது" என்றார்.