லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ.. கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்கள்.. அபாயத்தில் ஆஸ்கர் அரங்கம்!
10 Jan,2025
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வரும் சூழலில், அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் அதிகளவிலான குடியிருப்புகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள ஏராளமான பகுதிகள் காட்டுத் தீயால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் தொடங்கிய காட்டுத் தீ, அடுத்தடுத்து பலமான காற்று வீசியதால் வேகமாக மற்ற பகுதிகளுக்கு பரவ தொடங்கியது. அங்கு அமைந்திருந்த மலைப்பகுதிகளுக்கு காட்டுத் தீ பரவிய போது, அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. Also Read "நடுவானில் நெருப்பு 'கங்கு'.. அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா! 30,000 மக்களின் கதி என்ன? " இதன்பின் அப்பகுதியில் வசித்திருந்த மக்கள் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 250 குழுக்கள் உடனடியாக தீயை அணைக்க அழைத்து வரப்பட்டனர். முதலில் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் பலத்த காற்று மற்றும் அதிகளவிலான புகை எழுந்ததால், நிறுத்தப்பட்டது. இதன்பின் ஆயிரத்திற்கும் அதிகமான தீயணைப்புத் துறையினர் காட்டுத்தீயை அணைக்க போராடி வருகின்றனர். அமெரிக்கா வரலாற்றில், காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பேரழிவு என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த காட்டுத் தீ அடுத்தடுத்து ஹாலிவுட் ஹில்ஸ் பகுதிக்கும் பரவியதால், ஹாலிவுட் அடையாள சின்னங்கள் அழியும் அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது விழா நடக்கும் டோல்பி தியேட்டர் தீ-க்கு இரையாகும் அபாயத்தில் உள்ளது. ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சுமார் 20 கிமீ வரை பரவி இருப்பதால், பிரபலங்களிலும் வீடுகளும் தீயில் அழியும் அபாரம் ஏற்பட்டுள்ளது.
ஹாலிவுட் ஆம்பி தியேட்டர், ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் உள்ளிட்ட பிரபலமான அடையாளங்களும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதேபோல் பிரபல நடிகர்களான ஆடம் பிராசி, மீஸ்டர், அன்னா பாரிஸ் உள்ளிட்டோர் தங்களின் வீடுகளை இழந்ததாக சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். அதேபோல் காட்டுத் தீயால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கார்களில் வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், காட்டுத் தீயை அணைக்க முடியாததற்கு தண்ணீர் தட்டுப்பாடும் ஒரு காரணமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.