இத்தாலியில் வசிக்கும் பெண்ணொருவரின் வீடொன்றில் மோசடி : 6 பேர் கைது
08 Jan,2025
இத்தாலியில் வசிக்கும் பெண்ணொருவரின் சிலாபத்திலுள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டு பொதி செய்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சிலாபம் பகுதியிலுள்ள கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செரெப்புவத்தை பிரதேசத்தில் இந்த வீடு அமைந்துள்ளது.
இதன்போது 3 கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ கிராம் கஞ்சாவுடன் 6 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுற்றிவளைப்பு
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 06 ஆம் திகதி மாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனையின் போது, கஞ்சா பொதி செய்யப்பட்ட ஒரு வான் ஒன்று தயாராக இருந்தது. அந்த வானும் கைப்பற்றப்பட்டது.
இத்தாலியில் வசிக்கும் உரிமையாளரான பெண் தனது வீட்டை பராமரிப்பதற்காக தனது சகோதரருக்கு வழங்கியுள்ளார்.
வீட்டை கவனித்துக்கொள்வதற்காக ஒவ்வொரு மாதமும் தனது சகோதரருக்கு பணம் அனுப்புவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை
இந்நிலையில், அவரின் சகோதரர் ஏனையவர்களுடன் இணைந்து போதைப்பொருள் விற்பனைக்காக அந்த வீட்டினை பயன்படுத்தியுள்ளார்.
இத்தாலியில் வசிக்கும் பெண்ணொருவரின் வீடொன்றில் நடந்த மோசடி : 6 பேர் கைது | 6 Arrested At The Home Of A Woman Living In Italy
இந்த வர்த்தக நடவடிக்கை குறித்து இத்தாலியிலுள்ள வீட்டின் உரிமையாளரான பெண்ணுக்கு தெரியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கொண்டுவரப்பட்ட கஞ்சா கையிருப்பை இவர்களுக்கு வழங்க பன்னல பிரதேசத்தில் கடத்தல்காரர் ஒருவர் செயற்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
வென்னப்புவ சிந்தாத்திரிய, வாய்க்கலை, நீர்கொழும்பு, பெரியதுகல மற்றும் கட்டுவா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 22 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.