வட கொரிய அதிபர் பிறப்பித்த புதிய உணவு கட்டுப்பாடுகள்-சாப்பிட்டா தேச துரோகம்
07 Jan,2025
வடகொரியாவில் அடிக்கடி சில வித்தியாசமான தண்டனைகள் அறிவிக்கப்படுகின்றன. புதிய சட்டங்கள், கொடுமையான தண்டனைகள் என மக்கள் பயந்துக்கொண்டிருக்கையில், ஹாட் டாக் சாப்பிட்டால் (Hot Dog) தேச துரோகம் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் எதுவும் நேரடியாக வடகொரியாவிலிருந்து வெளியே வரவில்லை. தென்கொரிய ஊடகங்கள் வழியாகத்தான் தெரிய வந்திருக்கிறது.
கிடைக்கப்பட்ட தகவலின்படி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கலாச்சாரத்தை வடகொரிய மக்கள் பின்பற்றுவதை அந்நாட்டு அதிபர் விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே அதற்கு எதிராக தொடர் பிரசாரங்கள் அரசு மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மறுபுறம், இந்த அறிவுறுத்தலை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் விதிக்கப்படுகின்றன.
இப்படி சமீபத்தில் வெளியான அறிவிப்பில் ஒன்றுதான் ஹாட் டாக் சாப்பிடக்கூடாது எனும் அறிவிப்பு. இந்த வகை உணவுகள் பெரும்பாலும் அமெரிக்க நாடுகளிலும், பிரிட்டனிலும் சாப்பிடப்படுகிறது. ரொட்டி துண்டுக்கு நடுவில் வறுத்த அல்லது வேகவைத்த இறைச்சி கொடுக்கப்படும். இதுதான் ஹாட் டாக். வடகொரியாவில் இதை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சமீபத்திய உத்தரவு தெரிவித்திருக்கிறது.
எதற்காக இந்த தடை உத்தரவு என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. பொதுவாக அமெரிக்க கலாச்சாரங்களை வடகொரியா ஏற்றுக்கொள்வதில்லை. ஹாட் டாக் தடை உத்தரவும் இதன் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. உணவு மட்டும் கிடையாது ஆடை விஷயத்தில் கூட வடகொரியா ஏற்கெனவே பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. குறிப்பாக பெண்கள் குட்டை பாவாடை அணிவதை இந்நாடு தடை செய்திருக்கிறது
இப்படி செய்வதன் மூலம் தங்களின் பாரம்பரிய ஆடை அணியும் பழக்கத்தை பாதுக்காக்க முடியும் என்று அந்நாடு நம்புகிறது. மட்டுமல்லாது பாலியல் தூண்டுதல்களை தடுக்க முடியும் என்றும் கூறுகிறது. குட்டை பாவாடை மட்டுமல்லாது, அமெரிக்க பிராண்ட் லோகோ பதிக்கப்பட்ட டீ-சர்ட் அணிவதையும் அந்நாடு தடை செய்திருக்கிறது. உதாரணமாக NIKE என்று பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் டீ-சர்ட்டை நீங்கள் வடகொரியாவில் அணிந்தால் உங்களுக்கு அபராதமோ, சிறை தண்டனையோ விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
அந்நாட்டின் ஆட்சியாளர்கள், இதுபோன்ற டீ-சர்ட்கள் முதலாளித்துவத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள். இன்னொரு விசித்திரமான சட்டம், ஹை ஹீல்ஸ் அணிவதை தடை செய்திருக்கிறது. உலகம் முழுவதும் பெரும் நகரங்களில் பெண்கள் ஹை ஹீல்ஸ் காலணிகளை அணிந்து வருகிறார்கள். ஏறத்தாழ இது ஒரு மாடலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் வடகொரியா இதனை தடை செய்திருக்கிறது. அதாவது ஹை ஹீல்ஸ் அணிவதன் மூலம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு பிரதிபலிக்கும் என்று இந்நாட்டு அரசு நம்புகிறது. ஹை ஹீல்ஸ் அந்தஸ்து மிக்கவர்களாகவும், அதை அணியாதவர்கள் அந்தஸ்து குறைந்தவர்களாகவும் பார்க்கப்படுவார்கள் என்பதால் இதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல பளபளப்பான மற்றும் அதிக பிரகாசமான வண்ணங்களில் உள்ள ஆடைகளை அணிவதற்கும் வட கொரிய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த ஆடைகள் வடகொரியாவின் கலாச்சாரத்திற்கு எதிரானதாக சொல்லப்படுகிறது. அத்துடன் ஜீன்ஸ் அணியவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் பெண்கள் என இருதரப்பினருக்கும் இந்த தடை பொருந்தும். ஜீன்ஸ் என்பது அமெரிக்க ஆதிக்கத்தின் அடையாளம். எனவேதான் தடைவிதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. என்ன மக்களே வடகொரியாவின் இந்த அறிவிப்புகளையெல்லாம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?