இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சூரியன் - தனுசு ராசி செவ்வாய் - கடக ராசி புதன் - விருச்சிக - தனுசு ராசி குரு - ரிஷப ராசி சுக்கிரன் - கும்ப ராசி சனி - கும்ப ராசி ராகு - மீன ராசி கேது - கன்னி ராசி
மேஷம்
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே... நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். எந்த விஷயத்திலும் குறிப்பறிந்து நடந்து கொள்ளுங்கள். குதர்க்கமாக பேசாதீர்கள். பொண்டாட்டி சண்டை போட்டு பிறந்த வீட்டுக்கு போய் விடுவாள். சந்திரனின் நகர்வுகள் உயர்வான பலன்களை தரும். உறவுகள் மேம்பட விட்டுக் கொடுத்துப் போவீர்கள். செவ்வாய் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். குவாரி தொடங்குவதற்காக நண்பரோடு சேர்ந்து திட்டம் தீட்டுவீர்கள். புதன் 8, 9 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளின் படிப்புக்கு இடையூறு உண்டாகலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை அழுத்தும். குரு 2 ஆம் இடத்தில் இருக்கிறார். கொடுத்த கடனை திருப்பி கேட்டால் பகைவரும். சுக்கிரன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். உங்கள் சந்தோஷத்தை கெடுப்பதற்காகவே உறவினர் ஒருவர் வீட்டிற்கு வருவார். சனி 11 ஆம் வீட்டில் இருக்கிறார். கடுமையாக உழைத்து கணிசமாக லாபம் பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். ராகு 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். இஷ்டப்பட்டு கடன் கொடுத்து கஷ்டப்பட்டு வாங்குவீர்கள். கேது 6 ஆம் இடத்தில் இருக்கிறார். வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள் தலை தூக்கி தலைவலியை கொடுக்கும்.
ரிஷபம்
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே.... சூரிய பகவான் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். ஒரு பிரச்சனையை முடித்தால் இன்னொரு பிரச்சனை தலை தூக்கி நிற்கும். உங்கள் மனதை புரிய வைக்க மனைவியிடம் மல்லுக் கட்டுவீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சிகள் தொழிலுக்கு உதவியாக இருக்கின்றன. ஆன்லைன் வர்த்தகங்கள் லாபம் தரும். செவ்வாய் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து வர வேண்டிய நல்ல செய்தி தாமதமாகும். அலைச்சலால் உடல் சோர்வு உண்டாகும். புதன் 7,8 ஆம் இடத்தில் இருக்கிறார். திட்டம் போட்டு சேமிப்பை உயர்த்துவீர்கள். வியாபாரிகள் புதிய சாதனை படைப்பார்கள். குரு 1 ஆம் வீட்டில் இருக்கிறார். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். போட்டி பந்தயங்கள் சாதகமாக அமையும். சுக்கிரன் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். மழலைச் செல்வம் வீட்டில் தவழும். பிரிந்து போன உறவுகள் ஒட்டி வரும். சனி 10 ஆம் இடத்தில் இருக்கிறார். தந்தையாருக்கு உடல்நிலை கோளாறு ஏற்படலாம். ராகு 11-ஆம் இடத்தில் இருக்கிறார். குலதெய்வ நேர்த்திக்கடனை செலுத்துவீர்கள். கேது 5 ஆம் இடத்தில் இருக்கிறார். துணிச்சலுடன் காரியத்தில் இறங்கி வெற்றி பெறுவீர்கள்
மிதுனம்
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... சூரிய பகவான் 7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். போலி மருத்துவர்கள் அரசாங்கத்தால் கைது செய்யப்படுவார்கள். வழக்கறிஞர்களின் வாதத்திறமை புகழைக் கொண்டு வந்து சேர்க்கும். சந்திரனின் சஞ்சாரம் தொழிலில் ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்கும். உறவினர்கள் குடும்பத்துக்குள் கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். செவ்வாய் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்பட்டு நீதிமன்றம் செல்வீர்கள். புதன் 6 ஆம் இடத்தில் இருக்கிறார் சில நேரங்களில் கூட இருப்பவர்களே உங்களுக்கு எதிராக நடக்கலாம். அதிரடியான முடிவுகளை எடுக்க தயங்க மாட்டீர்கள். குரு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டுவீர்கள். சுக்கிரன் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தை விட்டு வெளியூர் பயணம் செல்வீர்கள். பிள்ளைகளால் சில பிரச்சனைகள் உண்டாகும். சனி 9 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவியின் பேச்சுக்கு மறு பேச்சு ஆகவே ஆகாது. ராகு 10-ஆம் இடத்தில் இருக்கிறார். ஆன்மீகப் பெரியோர்களின் ஆதரவால் வீட்டில் நல்ல காரியம் நடக்கும். கேது 4 ஆம் வீட்டில் இருக்கிறார். தாய்மாமன் வகையில் சில சச்சரவுகள் உண்டாகும். 1,2ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.
கடகம்
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். மருத்துவர்கள் சீரிய முறையில் வைத்தியம் பார்த்து சிறப்பு பெறுவார்கள். வழக்கறிஞர்களுக்கும் இது வசந்த காலம். சந்திரனின் ராசி மாற்றங்கள் பல வகையான நன்மைகளை கொண்டு வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும். செவ்வாய் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். பள்ளிக்கூடம் கட்டுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். ஆடு மாடு வளர்ப்பில் அக்கறை காட்டுவீர்கள். புதன் 5,6 ஆம் ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பாராத இடத்திலிருந்து தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். குரு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள். சுக்கிரன் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளிவட்டார செல்வாக்கை வசீகரமான பேச்சால் உயர்த்திக் கொள்வீர்கள். சனி 8 ஆம் இடத்தில் இருக்கிறார். எல்லாம் தெரியும் என்று அள்ளி வீசாதீர்கள். வம்புச்சண்டை வலிய வந்து அவஸ்தைப்படுவீர்கள். ராகு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். கேது 3 ஆம் இடத்தில் இருக்கிறார். விரும்பிய வாகனத்தை வாங்கி வீட்டில் கொண்டு வந்த நிறுத்துவீர்கள். 3,4 5 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.
சிம்மம்
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே... உங்கள் ராசிநாதன் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். படிப்படியாக முன்னேற துடிப்பாக வேலை செய்வீர்கள்.தனியார் துறை ஊழியர்கள் சொத்து வாங்குவார்கள். அரசு வேலை தேடியவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். சந்திரனின் இடப்பெயர்ச்சியால் சில சங்கடங்கள் உருவாகும். செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். சிறு வியாபாரிகள், சில்லறை வணிகர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். புதன் 4,5 ஆம் ஆம் வீட்டில் இருக்கிறார். வெள்ளி பாத்திரங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியம் நடப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்வீர்கள். குரு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு விலகிச் செல்வீர்கள். சுக்ரன் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். காதல் கை கூடி வரும். சுற்றத்தாருடன் ஒற்றுமையை பேணுவீர்கள். சனி 7 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில் எதிர்ப்புகள் மறைந்து போகும். புதிய வாய்ப்புகள் கைகூடி வரும். ராகு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளியூர் பயணங்களின் போது எச்சரிக்கையாக இருங்கள். கேது 2 ஆம் இடத்தில் இருக்கிறார். சகோதரர்களின் தூண்டுதலால் சில அசம்பாவிதங்கள் நடக்கும். 5,6,7 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
கன்னி
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே... சூரியன் 4 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். முதலீடுகளை அதிகரித்து தொழிலில் துடிப்புடன் இறங்குவீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்த நண்பர்கள் உதவுகிறார்கள். சந்திரனின் நகர்வுகள் போட்டி பந்தயங்களுக்கு பாதகமாக அமையும். செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். மாமனார் வீட்டில் இருந்து எதிர்பார்த்த பணம் கிடைக்காது. புதன் 3,4 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் நகை வாங்கி கொடுப்பீர்கள். துணி வியாபாரிகள் அதிகப்படியான லாபம் பார்ப்பார்கள். குரு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சகோதரியின் திருமணத்தை பேசி முடிப்பீர்கள். தாயாரின் பேச்சைக் கேட்டு குடும்பத்தில் மனைவி பிரச்சனையை கிளப்புவார். சுக்ரன் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். தங்கு தடை இல்லாமல் பணம் வரும். மற்றவர்களின் சூழ்ச்சியை முறியடிப்பீர்கள். சனி 6 ஆம் இடத்தில் இருக்கிறார். பொறுப்பான சில காரியங்கள் உங்களைத் தேடி வரும். வெறுப்பை காட்டாமல் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ராகு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். கொட்டிக் கொடுத்தாலும் கெட்டவர் பேச்சை கேட்காதீர்கள். கேது 1 ஆம் இடத்தில் இருக்கிறார். கோள் சொல்லுகின்ற வேலையை அறவே நிறுத்திக் கொள்ளுங்கள். Advertisement 8,9 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.
துலாம்
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே... சூரியன் 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சிக்கலான வழக்குகளை கூட வழக்கறிஞர்கள் வாதத் திறமையால் சின்னா பின்னம் ஆக்கி விடுவார்கள். மருத்துவர்களின் மகத்துவம் அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். சந்திரனின் இடப்பெயர்ச்சிகள் தொழில் துறைக்கு மிகவும் உறுதுணையாக அமையும். ஆன்லைன் வர்த்தகங்களில் அலுப்பில்லாமல் ஈடுபடலாம். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவியின் தங்கையால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். அதற்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள். புதன் 2,3 ஆம் இடத்தில் இருக்கிறார். திடீரென்று வியாபாரத்திற்கு அரசாங்க வாய்ப்புகள் கிடைக்கும். அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். குரு 8 ஆம் இடத்தில் இருக்கிறார்.நீண்ட நாளாக தொந்தரவு செய்த நோய் அகலும். நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும். சுக்கிரன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். மங்கல நிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சனி 5 ஆம் வீட்டில் இருக்கிறார். அதிகமாக செலவு செய்து ஆடம்பரமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ராகு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். எலியும் பூனையுமாக இல்லற வாழ்க்கை நகரும். கேது 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். எந்த காரியத்தையும் யோசித்து செய்யுங்கள்.
விருச்சிகம்
போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே... சூரியன் 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அரசு அதிகாரிகள் மூலமாக சில இடையூறுகள் ஏற்படலாம். பொறுமையாக இருந்து அதை கடந்து வாருங்கள். இல்லை என்றால் தொழிலுக்கு இடையூறு ஏற்படும். சந்திரனின் சஞ்சாரங்கள் சில நன்மைகளை கொண்டு வரும். நீண்ட காலமாக வராத கடன் வசூலாகும். செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவியாலும் பிள்ளைகளாலும் சின்ன சின்ன பிரச்சனைகள் உண்டாகி மனதை காயப்படுத்தும். புதன் 1,2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வெளிநாட்டு பயணம் மேற்கொள்வீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக இருக்கும். குரு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். குழந்தை பாக்கியம் கிட்டும். சுக்கிரன் 4 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சுயமாக முடிவெடுத்து சிலர் காதல் திருமணம் செய்வார்கள். நிச்சயமான திருமணம் நின்று போகவும் வாய்ப்பு உண்டு. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி அதிகமாகும். சனி 4 ஆம் இடத்தில் இருக்கிறார் வியாபாரத்துக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிப் போகும். ராகு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். திடீரென்று பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கும். கேது 11 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள்.
தனுசு
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 1 ஆம் இடத்தில் இருக்கிறார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு காரியம் செய்யுங்கள். புதிய முதலீடுகள் வேண்டாம். சந்திரனின் நகர்வுகள் சாதகத்தை தந்தாலும் பொருளாதாரத் தடைகள் ஏற்படும். செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். இடம் வாங்கி விற்கும் தொழிலில் மிகுந்த ஏற்றம் பெறுவீர்கள். ரசனைக்கு ஏற்றவாறு வீட்டை மறு சீரமைப்பு செய்வீர்கள். புதன் 12,1 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் உள்ளவர்களே உங்கள் ஆலோசனையை கேட்க மாட்டார்கள். தேவையில்லாமல் அடுத்தவர் காரியங்களில் தலையிடாதீர்கள். குரு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். பொதுநல காரியங்களில் ஈடுபட்டு செல்வாக்கை உயர்த்தி கொள்வீர்கள். சுக்கிரன் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். காதலித்து திருமணம் செய்தவர்களில் சிலர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுவார்கள். சனி 3 ஆம் இடத்தில் இருக்கிறார். கடுமையான வார்த்தைகளை உபயோகித்தால் உறவுகள் சிதறிப் போகும். ராகு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். கேது 10 இடத்தில் இருக்கிறார். ஆன்மீகப் பெரியவர்களின் ஆலோசனை குடும்பத்தில் அமைதியை கொண்டு வரும்.
மகரம்
வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே.... சூரியன் 12 ஆம் இடத்தில் நிற்கிறார். இரவு பகல் பாராமல் உழைத்து பணவரவை பெருக்குவீர்கள். எதிர்கால நன்மைக்காக பொருளாதார சேமிப்பை உயர்த்துவீர்கள். தங்க நகைகள் வாங்குவீர்கள். ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்வீர்கள். சந்திரனின் கிரக மாற்றங்கள் வியாபாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தும். செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். தாய் வழி சொத்து கைக்கு வருவது தள்ளி போகும். முன்பு வாங்கி போட்ட இடத்தை விற்று கடனை அழைப்பீர்கள். புதன் 11,12 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசாங்க ஒப்பந்தங்கள் மூலமாக புதிய வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள். குரு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசாங்கத் தேர்வில் வெற்றி பெற்று பதவியில் அமர்வீர்கள். தனியார் ஊழியர்கள் உழைப்பின் மகத்துவத்தை முதலாளிகளுக்கு உணர்த்துவார்கள். சுக்கிரன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். கலை துறையினர் மிகச் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவார்கள். சனி 2 ஆம் இடத்தில் இருக்கிறார். கட்டுமானத்துறை தொழிலாளர்கள் கொஞ்சம் சிரமத்தை எதிர் நோக்குவார்கள். ராகு 3 ஆம் இடத்தில் இருக்கிறார். நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் பாதிப்பை ஏற்படுத்தலாம். கேது 9 ஆம் இடத்தில் இருக்கிறார். ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்
கும்பம்
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
சூரியன் 11 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சிறியதாக தொடங்கிய தொழிலை பெரிய நிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்வீர்கள். அதற்காக நண்பர்கள் ஆதரவு தர தயாராக இருப்பார்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சி கமிஷன் வியாபாரத்தில் கால் பதிக்க உதவும். செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய வீடு கட்டி குடி செல்வீர்கள். சிலர் வேலை காரணமாக ஊர் விட்டு ஊர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். புதன் 10,11 ஆம் இடத்தில் இருக்கிறார். வழக்கறிஞர்கள் சிறப்பான இடத்தை பிடிப்பார்கள். மருத்துவர்கள் கடவுளாக மதிக்கப்படுவார்கள். குரு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பாராத வகையில் பணம் வந்து தொழிலுக்கு மேன்மையை ஏற்படுத்தும். சுக்கிரன் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். அலங்காரப் பொருட்கள் விற்பனை அதிக லாபத்தை கொடுக்கும். சனி 1 ஆம் இடத்தில் இருக்கிறார். விபத்துக்கள் ஏற்படலாம். பணம் காணாமல் போகலாம். எச்சரிக்கையாக இருங்கள். ராகு 2 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில் போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். கேது 8 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மீனம்
மீனம்
பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே....
சூரியன் 10 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அடுத்தவர்களுக்காக செய்கின்ற காரியம் உடனே நிறைவேறும். உங்களுக்காக செய்கின்ற காரியங்களில் சிறிய தடங்கல் ஏற்படும். சந்திரனின் கிரக மாற்றங்கள் எந்திரமாக வேலை பார்க்க வைக்கும். வெற்றி ஒன்றையே குறிக்கோளாக நினைத்து பாடுபடுவீர்கள். செவ்வாய் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிரிகளின் சூழ்ச்சி வலையை சின்னா பின்னம் ஆக்குவீர்கள். வியாபாரத்தில் உச்சம் தொடுவீர்கள். புதன் 9,10 ஆம் இடத்தில் இருக்கிறார். நினைத்த காரியத்தை நிறைவேற்ற புதிய பாதையில் இறங்குவீர்கள். குரு 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி மருத்துவமனைக்கு சென்ற சிலர் நல்ல பலன் பெறுவார்கள். சுக்கிரன் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். கலைத்துறையினர் வெளிநாடு செல்வார்கள். சனி 12 ஆம் இடத்தில் இருக்கிறார். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் எதிரிகளை திணறடிப்பீர்கள். ராகு 1 ஆம் இடத்தில் இருக்கிறார். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். கேது 7 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளியில் இருக்கும் மரியாதை வீட்டில் கிடைக்காது.