லாட்டரியில் ஒருமுறையாவது பணம் அடித்தால் போதும் பணக்காரன் ஆகிவிடுவேன என லாட்டரி பிரியர்கள் பகல் கனவு கொண்டு இருப்பார்கள். ஆனால், 12 கோடி ரூபாய் பரிசு அடித்தும் அதை பெற முடியாமல் மோசடியாளர்களால் படாத பாடுபட்டிருக்கிறார் சீனாவை சேர்ந்த நபர் ஒருவர்.. அதிர்ஷ்டத்தையும் விடாத துரதிர்ஷ்டம் இதுதான் போல..
லாட்டரி என்பது சூதாட்டம்.. அதில் பணம் சம்பாதிப்பவர்களை விட பணத்தை இழப்பவர்களே அதிகம் என்றாலும், லாட்டரி மீதான மோகம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. என்றாவது ஒரு நாள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட மாட்டமோ என எண்ணி பலரும் லாட்டரியை வாங்குகிறார்கள். லாட்டரியின் தீமை கருதி இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதற்கு தடை உள்ளது. ஆனாலும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி விற்பனை உள்ளது. அதேபோல வெளிநாடுகளிலும் சில இடங்களில் தடையும் சில இடங்களில் லாட்டரிக்கு அனுமதியும் உள்ளது. சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.. சீனாவில் தண்ணீர் கேன் வியாபாரம் செய்பவர் ஒருவருக்கு லாட்டரியில் இந்திய மதிப்பில் ரூ.12 கோடி பரிசாக விழுந்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை பரிசு அடித்தாலும் அவரால் அதை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் சீனாவை சேர்ந்த யாவோ என்பவர் லாட்டரி ஒன்றை வாங்கியுள்ளார். இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 10 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.11.5 கோடி) பரிசாக விழுந்துள்ளது. இவ்வளவு தொகை தனக்கு பரிசாக அடித்ததால்,.. மகிழ்ச்சியில் திளைத்த யாவோ.. கடவுள் கண்ணை திறந்துவிட்டாரப்பா.. எனக்கருதியுள்ளார்.
ஆனால், யாவோவிற்கு தெரிந்த நபரான வாங் என்பவர் பரிசுத்தொகையை ஏமாற்றி பெற்றுள்ளார். கோவா என்ற தனது உறவினருக்கு பரிசு அடித்து இருப்பதாகவும் அவருக்கு பதிலாக தான் பரிசை பெறுவதாக கூறி நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 9.2 கோடியை (வரிபிடித்தம் போக) பெற்றுள்ளார் வாங். அதேவேளையில், யாவோவிடம் நல்லவர் போல காட்டிக்கொண்டு, உங்களுக்கு விழுந்த பரிசு எண்ணை ஆன்லைனில் பார்த்தவர்கள் வேறு யாரோ வாங்கிவிட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
யாவோவிற்கு இழப்பீடாக வெறும் 17.25 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு சாட்டிங்க் ரெக்கார்டு எல்லாம் அழித்து விட வேண்டும் என நிபந்தனை போட்டுள்ளார். அதன்பிறகுதான் யாவோவிற்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஜியான் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் யாவோ, இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் யாவோவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. லாட்டரியில் விழுந்த பரிசுத்தொகையை கண்டிப்பாக வாங்க் மற்றும் கோவா திருப்பி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அவரது மேல் முறையீடும் 2024 ஜூலையில் நிராகரிக்கப்பட்டது.
இருந்த போதிலும் யாவோவிற்கு தற்போது வரை பணம் கிடைக்கவில்லை. அவர்களின் வங்கி கணக்கை நீதிமன்றம் முடக்கி விட்டது. ஆனாலும் அதில் பணம் இல்லாததால், தற்போது வரை ஒரு பைசா கூட தனக்கு வரவில்லை என்று யாவோ கூறியுள்ளார். வாங்க் மற்றும் கோவா ஆகியோரின் வீடுகளையும் ஏலத்தில் விட்டு இருக்கிறார்கள்.
ஆனால் ஒருவர் கூட வாங்க வரவில்லை. யாவோ வழக்கு செலவுகளுக்காக பெரும் தொகையை செலவழித்துவிட்டதால் தற்போது வேதனையில் உச்சத்தில் இருக்கிறாராம். இது குறித்து யாவோ கூறுகையில், " இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னாள் நான் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன்.
தற்போது எதிர்காலம் குறித்து கவலை அடைந்துள்ளேன்" என்றார். பரிசுத்தொகையை ஏமாற்றி பெற்றவர் அக்கவுண்டில் இருந்து பணம் மாயமானது குறித்து விசாரிக்க கோரி வழக்கு தொடர யாவோவின் வழக்கறிஞர் முடிவு செய்துள்ளார்.. லாட்டரியில் பணம் அடித்த போதும்,.. அவரால் பணத்தை பெற முடியாமல் செலவுகளை செய்ய வேண்டிய நிலைதான் ஏற்பட்டு இருக்கிறது. இதுதான் அதிர்ஷ்டத்திலும் துரதிஷ்டம் என நெட்டிசன் கள் கூறி வருகிறார்கள்.