ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது சைபர் தாக்குதல்: விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் சிரமம்
26 Dec,2024
பரபரப்பான விமான போக்குவரத்தை கையாளும் ஜப்பான் ஏர்லைன்ஸ் மீதான சைபர் தாக்குதல் அதன் சேவையை பாதித்துள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இன்று காலை 7.30 மணி அளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவையை நிறுத்துவதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்தது. நிலைமை சீரானதும் அது குறித்த தகவலை பயணிகளுக்கு பகிர்கிறோம் என்றும், சிரமத்திற்கு வருந்துகிறோம் எனவும் ஜப்பான் ஏர்லைன்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. இதனால் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை தாமதமாகி உள்ளது. டிக்கெட் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். பிரச்சனை என்னவென்று அடையாளம் காணப்பட்டு ஒரு ரவுட்டரை shut down செய்துள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. ஜப்பானின் மற்றொரு முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ் தங்கள் அமைப்புகளில் சைபர் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று தெரிவித்துள்ளது. பரபரப்பான விமான போக்குவரத்தை கையாளும் ஜப்பான் ஏர்லைன்ஸில் ஏற்பட்டுள்ள இந்த சைபர் தாக்குதல் உலக அளவில் பேசும் பொருளாகியுள்ளது.