துருக்கியில் விபத்துக்குள்ளான காவு உலங்குவானூர்தி,நால்வர் பரிதாபகரமாக பலி
22 Dec,2024
துருக்கியின் (Turkey) தென்மேற்கு முகலா மாகாணத்தில் நோயாளர் காவு உலங்குவானூர்தி ஒன்று மருத்துவமனை மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
முகலாவின் மென்டீஸ் மாவட்டத்தில் உள்ள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை கட்டிடத்தின் மீது குறித்த உலங்குவானூர்தி மோதியதில் இரண்டு விமானிகள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு சுகாதார பணியாளர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் பதிவாகியுள்ள காணொளி எக்ஸ் தளம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது.
இதன்போது, தீயணைப்பு, சுகாதாரம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் துருக்கியின் பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையத்தின் (AFAD) பணியாளர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியில் கடும் மூடுபனி நிலவுவவதாகவும் விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தின் காரணமாக குறித்த மருத்துவமனைக்குள் எவ்வித சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி Recep Tayyip Erdogan, நால்வின் உயிரிழப்பிற்கும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.