கழுத்து நரம்பு பாதிப்பு சிகிச்சை
16 Dec,2024
இன்றைய திகதியில் எம்முடைய வீடுகளில் இருக்கும் மூத்த குடும்ப உறுப்பினர்களின் பெரும்பாலானவர்களுக்கு கழுத்து பகுதியில் வலியுடன் கூடிய அசௌகரியம் ஏற்படும்.
இந்த பாதிப்பு தீவிரமடைந்தால் அவர்களுக்கு பிரத்யேக சத்திர சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கழுத்து வலி, கழுத்து விறைப்பு , அதாவது கழுத்தை இடது புறமாகவோ வலது புறமாகவோ அசைக்க இயலாத நிலை, கைகளிலும், தோள்களிலும் பலவீனத்தை உணர்தல், கைகளிலும் தோள்களிலும் மரத்துப் போவதை உணர்தல், பேனா, நாணயம் போன்றவற்றை கைகளால் கையாளும்போது தடுமாறுதல், நடக்கும் போது தடுமாற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்களுக்கு கழுத்துப் பகுதியில் உள்ள தண்டுவட பகுதி நரம்புகளில் அழுத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என பொருள் கொள்ளலாம் .
இதனை மருத்துவ மொழியில் செர்விகல் மைலோபதி என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பு தீவிரமடைந்து நாளாந்த வாழ்க்கையில் பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தினால் இதற்கு பிரத்யேக சத்திர சிகிச்சை மூலமே முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
கழுத்து பகுதியில் ஏற்படும் ரூமடாய்ட் ஒர்தரைடீஸ், தண்டுவட பகுதியில் ஏற்படும் தொற்று பாதிப்பு, கழுத்து மற்றும் கழுத்து தண்டுவட பகுதியில் ஏற்படும் காயங்கள் ஆகிய காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
கழுத்து வலி தாங்க இயலாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு எம் ஆர் ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். பிரத்யேக உறையை அணிதல் - மருந்தியல் சிகிச்சை - இயன்முறை சிகிச்சை - ஆகியவற்றை வழங்கி முதன்மையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
இதன் பின்னரும் பாதிப்பின் வீரியம் குறையவில்லை என்றால், மேலும் சில பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் பிறகு பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள். இதன் மூலம் நிவாரணத்தை அளிப்பார்கள்.