பெண் பயணியிடம் 10 பவுன் நகையை வழிப்பறி செய்ததாகக் கூறி தனது தந்தையை மகனே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், புதன் கிழமையன்று (டிசம்பர் 11) சென்னையில் நடந்துள்ளது.
ஆட்டோவில் திரையை வைத்து மறைத்து வேறு இடத்துக்கு கொண்டு சென்ற ஓட்டுநர்
திருச்சி மாவட்டம் குண்டூரில் வசித்து வரும் 80 வயதான வசந்தா மாரிக்கண்ணு, தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டு கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 11) விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துள்ளார்.
அங்கிருந்து தாம்பரம் சென்று திருச்சி செல்வதாக அவரது பயணத் திட்டம் இருந்தது. இதன்பிறகு நடந்த சம்பவங்களை பிபிசி தமிழிடம் விவரித்தார், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன்.
"காலை 9.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வசந்தா மாரிக்கண்ணு, அங்கு நின்றிருந்த ஆட்டோ மூலம் தாம்பரம் செல்வதற்காக ஏறியுள்ளார். வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டோவில் இரண்டு பக்கமும் இருந்த ஸ்க்ரீனை டிரைவர் இறக்கிவிட்டுள்ளார்."
ஆனால், ஆட்டோ தாம்பரம் செல்லாமல் குரோம்பேட்டை அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே திரும்பி, பச்சை மலை வழியாகச் சென்றுள்ளது," என்று தெரிவித்தார் உதவி ஆணையர் நெல்சன்.
அங்கு ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, வசந்தா மாரிக்கண்ணு அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை அந்த நபர் மிரட்டிப் பறித்ததோடு, அதன்பிறகு வசந்தாவை கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறினார்.
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வசந்தா மாரிக்கண்ணு, தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கணேசன் என்ற ஆட்டோ டிரைவரை அழைத்துக் கொண்டு அவரது மகன் ராமச்சந்திரன் வந்துள்ளார்.
இதுதொடர்பாக, தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தான் திருடிய நகைகளை விற்று குடும்பச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தனது மகளிடம் கணேசன் கூறியதாகவும், இதை அறிந்த அவரது மகன் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தனது தந்தையை ஆஜர் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வசந்தாவிடம் இருந்து திருடப்பட்டதாகச் சொல்லப்படும் பத்து பவுன் நகை மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தனது தந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமச்சந்திரன், "புதன்கிழமை காலையில வீட்டுக்கு வந்ததும் என் அப்பா நகைகளைக் காட்டினார். 'இந்த நகை எப்படி வந்தது?' எனக் கேட்டபோது, வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்ததாகச் சொன்னார்.
'நம்மை நம்பி ஆட்டோவில் ஏறும் ஒருவரிடம் இப்படியெல்லாம் செய்வது தவறு" எனக் கூறி வீட்டைவிட்டு வெளியே போகுமாறு சத்தம் போட்டேன். அவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்" என்றார்.
இதன்பிறகு கணேசனை பின்தொடர்ந்து சென்ற ராமச்சந்திரன், அவரை தாம்பரம் காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார்.
"காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாமென்று என் தந்தை கெஞ்சினார். அதைப் பொருட்படுத்தாமல் நான் கூட்டிப் போனேன்" என்றார், ராமச்சந்திரன்,
மேலும், குடிபோதையில் இப்படித் தொடர்ந்து செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர், "தவறுக்கு எப்போதும் உடன்பட மாட்டேன். அவர் செய்தது மிகத் தவறான காரியம் என்பதால் போலீசில் ஒப்படைத்தேன். அது என் தம்பி, தங்கையாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன்" என்றார்.
அதுகுறித்துப் பேசியவர், "கஞ்சாவை புகைத்துவிட்டுப் பலமுறை கணேசன் தகராறு செய்துள்ளதால், மறுவாழ்வு மையத்திலும் அவரைச் சேர்த்துள்ளோம். ஆனால், அங்கு முறையாக சிகிச்சை பெறாமல் திரும்பிவிட்டார்" என்றார்.
கணேசனின் மனைவி சிங்கப்பூரில் வீட்டு வேலைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைப்பதற்குப் பணம் தேவைப்பட்டுள்ளது.
"கணேசனின் மனைவியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு இந்த நகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது" என்கிறார் நெல்சன்.
இந்த வழக்கில் கணேசன் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 304(2)இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் உதவி ஆணையர் நெல்சன், "பொதுவெளியில் பயணிக்கும்போது வசந்தா மாரிக்கண்ணு எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வந்துள்ளதாகக் கூறினார். ஆனால், சம்பவம் நடந்த அன்று மழை பெய்ததால் அவர் கோட் அணிந்துள்ளார். 'இதனால் நகைகள் அணிந்திருப்பது வெளியில் தெரியாது' எனத் தான் அலட்சியமாக இருந்துவிட்டதாக" கூறுகிறார்.
விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் இருந்து வெளியே வரும் பயணிகள், மொபைல் செயலி மூலம் பதிவு செய்துவிட்டு வெளி வாகனங்களில் பயணித்தால் ஆட்டோ டிரைவரின் பெயர், வாகனம் ஆகியவற்றை அறிய முடியும்.
"அவ்வாறு இல்லாமல் தெருவில் செல்லும் எதாவது ஒரு வாகனத்தைத் தேர்வு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். தங்களது உறவினர்களுக்கு வாகனத்தின் எண், டிரைவரின் அடையாளம் ஆகியவற்றைத் தெரிவித்துவிட்டுப் பயணிப்பது நல்லது" என்று அறிவுறுத்துகிறார் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்வன்.