பஷார் அல் அசாத்- ஒரு கண் மருத்துவர் சிரியாவின் சர்வாதிகார அதிபர் ஆனது எப்படி?
சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்கள் உள்ளன. ஆனால் அவற்றுள் அவர் வாழ்ந்த இடத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்த கார் விபத்துதான் அதிமுக்கியமானது.
தனது தந்தையிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்று நாட்டை வழிநடத்துவதற்கு பஷார் அல் அசாத்திற்கு ஆரம்பத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. அவரது மூத்த சகோதரர் பஸாலுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது.
கடந்த 1994ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டமாஸ்கஸ் அருகே நடந்த ஒரு கார் விபத்தில் பஸால் உயிரிழந்தார். அப்போது பஷார் லண்டனில் கண் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார்.
பஸாலின் மரணத்தைத் தொடர்ந்து, சிரியாவின் அதிபராவதற்கு பஷார் தயார்படுத்தப்பட்டார். தற்போது அவர் நூறாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற, லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த ஒரு மோசமான அதிபராக இருக்கிறார்.
விளம்பரம்
ஆனால், கண் மருத்துவராக இருந்த பஷார் அல் அசாத், போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ஒரு சர்வாதிகாரத் தலைவராக எப்படி மாறினார்?
தந்தையின் வழியில் நடந்தார்
பஷார் அல் அசாத் 1965ஆம் ஆண்டு, ஹபீஸ் அல்-அசாத், அனிசா மக்லூஃப் ஆகியோருக்குப் பிறந்தார்.
அவர் பிறந்தபோது, சிரியா, மத்திய கிழக்கு மற்றும் இதர பிராந்தியங்களில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அந்த நேரத்தில், அப்பகுதிகளில் உள்ள அரசியலில் அரபு தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தியது. சிரியாவிலும் அதே நிலைதான்.
எகிப்துக்கும் சிரியாவுக்கும் (1958-1961) இடையிலான குறுகிய கால கூட்டுறவு, தோல்வியில் முடிந்த பிறகு பாத் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியும் அரபு தேசியவாத கருத்தை ஊக்குவித்தது. அன்றைய பெரும்பாலான அரபு நாடுகளைப் போலவே, சிரியாவும் ஒரு ஜனநாயக நாடாக இல்லை மற்றும் பல கட்சிகளை உள்ளடக்கிய தேர்தல் முறை அங்கு இல்லை.
பஷார் அல் அசாத்தின் குடும்பம் அலாவைட் எனப்படும் சிரியாவை சேர்ந்த ஒரு பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த பிரிவைச் சேர்ந்த பலர் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டின் ராணுவத்தில் சேர்ந்தனர்.
அசாத்தின் தந்தை ஹஃபீஸ் சுமார் முப்பது ஆண்டுகள் சிரியாவின் அதிபராக இருந்தார்
அப்போது ஹபீஸ் அல் அசாத் ஒரு ராணுவ அதிகாரியாகவும், பாத் கட்சியின் தீவிர ஆதரவாளராகவும் பிரபலமடைந்தார். அவர் 1966ஆம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சரானார்.
தனது அதிகாரத்தைப் பலப்படுத்தி 1971ஆம் ஆண்டு ஹபீஸ் அல் அசாத் சிரியாவின் அதிபரானார். 2000ஆம் ஆண்டு, அவர் இறந்துபோகும் வரை அவர் அதிபராகவே பதவி வகித்தார்.
அவரது ஆட்சிக்காலம் சிரியாவின் சுதந்திரத்திற்குப் பின்பு உள்ள வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, ஜனநாயக தேர்தல்களை நிராகரித்து அவர் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார்.
அவர் சோவியத் ஒன்றியத்துடன் இணைந்து செயல்பட்டார். ஆனால் 1991 வளைகுடா போரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இணைந்தார்.
பஷார் அல் அசாத் அரசியல் மற்றும் ராணுவத்தில் இருந்து வெகு தொலைவில் வேறுபட்ட பாதையைத் தேர்வு செய்தார். அவர் மருத்துவராகப் பணியாற்ற முடிவு செய்தார்.
டமாஸ்கஸ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, அவர் 1992ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள வெஸ்டர்ன் ஐ மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற பிரிட்டன் சென்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான A Dangerous Dynasty: The Assads என்ற பிபிசி ஆவணப்படத்தின்படி, லண்டனில் உள்ள வாழ்க்கையை பஷார் மிகவும் விரும்பினார். லண்டனில்தான் பஷார் தனது வருங்கால மனைவி அஸ்மா அல்-அக்ராஸை சந்தித்தார்.
கடந்த 1994ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது மூத்த சகோதரரான பஸல் உயிரிழந்த பிறகு பஷாருடைய வாழ்க்கையின் போக்கு அடியோடு மாறியது. சிரியாவின் அடுத்த தலைவராக அவரைத் தயார் செய்வதற்காக உடனடியாக லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டார்.
அதன் பிறகு, பஷார் ராணுவத்தில் சேர்ந்தார், மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்கான பணிகளைத் தொடங்கினார்.
,அசாத் குடும்பம் சிரியாவை அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்து வருகிறது
ஹஃபீஸ் அல்-அசாத் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். அதையடுத்து, 34 வயதான பஷார் சிரியாவின் அதிபராக நியமிக்கப்பட்டார். இதற்காக சிரிய அரசியலமைப்பில் அதிபராவதற்கு குறைந்தபட்ச வயது தேவை 40இல் இருந்து குறைக்கப்பட்டது.
அவர் “வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம், வளர்ச்சி, நவீனமயமாக்கல், பொறுப்புக் கூறல் மற்றும் அரசு சார்ந்த சிந்தனை” போன்றவை குறித்துப் பேசினார்.
அதிபராகப் பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, பஷார் அஸ்மா அல்-அக்ராஸை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: ஹபீஸ், ஜீன் மற்றும் கரீம்.
தொடக்கத்தில், அரசியல் சீர்திருத்தம் மற்றும் ஊடக சுதந்திரம் பற்றிய பஷாரின் சொல்லாட்சி பல்வேறு சிரிய மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவரது தலைமை, மேற்கத்திய நாட்டில் கல்வி பயின்றது ஆகியன மாற்றத்துக்கான புதிய சகாப்தத்தைக் குறித்தது.
சிரியாவில் சிறிது காலத்திற்கு சிவில் விவாதம் மற்றும் “டமாஸ்கஸ் ஸ்பிரிங்” எனப்படும் கருத்து சுதந்திரத்தைப் பற்றிய விவாதமும் நடைபெற்றது. ஆனால் 2001ஆம் ஆண்டின்போது, பாதுகாப்புப் படையினர் மீண்டும் தங்களது ஒடுக்குமுறையைத் தொடங்கி, அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களைக் கைது செய்தனர்.
அதிபராகப் பொறுப்பேற்ற தொடக்கத்தில் தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை பஷார் அறிமுகப்படுத்திய அதே வேளையில், அவரது உறவினரான ராமி மக்லூப்ஃபின் எழுச்சியும் காணப்பட்டது. மக்லூஃப் ஒரு பரந்த பொருளாதார சாம்ராஜ்யத்தை நிறுவினார், இது செல்வமும், அதிகாரமும் இணைந்து செயல்படுவதைக் குறிப்பதாக விமர்சகர்கள் கூறினர்.
இராக் மற்றும் லெபனான்
லெபனானில் உள்ள ஒரு பாலத்தில் தொங்கவிடப்பட்ட ரஃபிக் ஹரிரியின் படம்
படக்குறிப்பு, லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபிக் ஹரிரியின் படுகொலை பஷார் அல் அசாத் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது.
கடந்த 2003ஆம் ஆண்டில் நடந்த இராக் போரால், பஷார் அல்-அசாத் மற்றும் மேற்கத்திய அரசுகளுக்கு இடையிலான உறவுகள் பெரும் சரிவைச் சந்தித்தது.
இராக் மீது அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை சிரியா அதிபர் எதிர்த்தார். அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளின் அடுத்த இலக்காக சிரியா இருக்கலாம் என்ற அவரது அச்சம் இதற்குக் காரணம் என்று சிலர் கூறினர்.
அதே 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இராக் தொடர்பான நடவடிக்கைகள், லெபனானில் சிரியாவின் இருப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா, சிரியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், லெபனானில் சிரியாவின் முக்கிய எதிரிகளில் ஒருவரான முன்னாள் லெபனான் பிரதமர் ரஃபிக் ஹரிரி பெய்ரூட்டில் ஒரு மிகப்பெரிய வெடிப்பு சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு சிரியா மற்றும் அதன் நட்பு நாடுகள்தான் காரணம் என்றும் குரல்கள் எழுந்தன.
இதையடுத்து, லெபனானில் எதிர்ப்புகள் வெடித்தன. சிரியா மீது சர்வதேச அளவில் அழுத்தங்கள் எழுந்தன. இதனால் லெபனானில் சுமார் 30 ஆண்டுக்கால ஆக்கிரமிப்பிற்குப் பிறகு சிரியா வெளியேறியது.
அசாத் மற்றும் லெபனானில் அவரது முக்கியக் கூட்டாளியான ஹெஸ்பொலாவும், 2020ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் ஹெஸ்பொலா ஆயுதப் படையைச் சேர்ந்த ஒருவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்த போதிலும், ஹரிரியின் படுகொலையில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
அரபு வசந்தம்
எதிர்ப்பாளர்கள் அசாத் மற்றும் அவரது தந்தையின் சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர்
“அரபு வசந்தம்” எதிர்ப்புகள் 2011ஆம் ஆண்டு சிரியாவில் நடந்தது
பஷார் அல் அசாத் ஆட்சியின் முதல் பத்தாண்டு காலத்தில் இரானுடனான சிரியாவின் உறவு வலுப்பெற்றது. மேலும் கத்தார், துருக்கி ஆகிய இரு நாடுகளுடனும் சிரியா உறவுகளை வளர்க்கத் தொடங்கியது.
ஆரம்பத்தில், பஷாருக்கு ரியாத்தின் ஆதரவு இருந்தபோதிலும், சௌதி அரேபியாவுடனான உறவுகள் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தன.
ஒட்டுமொத்தமாக, வெளியுறவுக் கொள்கையில் பஷார் அல்-அசாத் தனது தந்தையின் வழியையே பின்பற்றினார். நேரடி ராணுவ மோதல்களைத் தவிர்த்து கவனமாக உத்திகளைக் கையாண்டார்.
கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அவரது மனைவி அஸ்மா அல்-அசாத் வோக் பத்திரிக்கைக்கு அளித்த ஒரு நேர்காணலில், அவர்களது நாடு “ஜனநாயக முறையில்” வழிநடத்தப்படுவதாக அவர் கூறினார்.
அதே நாளில், துனிசியாவை சேர்ந்த காய்கறி வியாபாரியான முகமது பௌசிஸி ஒரு பெண் காவலர் தன்னை அறைந்ததால் தீக்குளித்தார். இது துனிசியாவில் மக்கள் மத்தியில் ஒரு கடும் எதிர்ப்பைத் தூண்டியது, இதனால் அந்நாட்டின் அதிபர் ஜைன் எல் அபிடின் பென் அலியின் ஆட்சி கவிழ்ந்தது.
இந்த எழுச்சியால் எதிர்பாராதவிதமாக எகிப்து, லிபியா, ஏமன், பஹ்ரைன், சிரியா போன்ற அரபு உலக நாடுகள் முழுவதும் புரட்சிகர இயக்கங்கள் ஏற்பட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சிரியாவில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதை அடுத்து சில நாட்களுக்குப் பிறகு தெற்கு நகரமான தாராவிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. சுவர்களில் அதிபர் அசாத்தை எதிர்த்து வாசகங்களை எழுதியதற்காக குழந்தைகள் கைது செய்யப்பட்டனர்.
இதற்குப் பிறகு, சிரிய மக்களிடம் உரையாற்றுவதற்கு அசாத் இரண்டு வாரங்கள் காத்திருந்தார். நாடாளுமன்றத்தில், சிரியாவை குறிவைத்து நடத்தப்படும் “சதி” திட்டங்களை முறியடிப்பதாக உறுதியளித்தார், மேலும் பல்வேறு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார்.
தராவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால், ஆர்ப்பாட்டம் அதிகரித்து, சிரியாவின் பல்வேறு நகரங்களில் அசாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்தன.
சில மாதங்களுக்குள், நாடு முழுவதும் அரசாங்கத்திற்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
சர்வதேச தலையீடு, ஜிஹாதிகள் மற்றும் போர்க் குற்றங்கள்
ஜூன் 26, 2014 அன்று சிரியாவின் அலெப்போ நகரில் நடந்த வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இடிந்த கட்டடங்களை மக்கள் ஆய்வு செய்தனர்.
, சிரியாவின் பல்வேறு நகரங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரில் அழிந்துள்ளன.
சிரியாவில் மோதல் தீவிரமடைந்ததால், சர்வதேச சக்திகளின் தலையீட்டுக்கு மத்தியிலும், உயிரிழப்புகள் பல்லாயிரக்கணக்கில் இருந்து லட்சங்களாக உயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா, இரான் மற்றும் இரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் அசாத்தின் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. மற்றொருபுறம் துருக்கி மற்றும் வளைகுடா நாடுகள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களை ஆதரித்தன.
தொடக்கத்தில், அசாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயகம் மற்றும் அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாலும், விரைவில் அதில் மதம் சார்ந்த கோஷங்களும் எழத் தொடங்கின. மேலும் சன்னி முஸ்லிம்களின் பெரும்பான்மையைவிட அலாவைட் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் சாதகமாக இருப்பதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
பிராந்திய அளவிலான தலையீடு சமூக பிரிவினைவாதத்தை ஆழமாக்கியது. இஸ்லாமிய பிரிவுகள் அலாவைட் பிரிவுகளுக்கு எதிராக விரோதப் பேச்சுகளைத் தொடுத்தனர். ஹெஸ்பொலா தலைமையில் இயங்கும் இரானுக்கு விசுவாசமான ஷியா போராளிகள் அசாத்தின் அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக சிரியாவில் குவிந்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு, அசாத்தின் அரசாங்கம் சரிவின் விளிம்பில் இருப்பது போலத் தோன்றியது, அது நாட்டின் பல்வேறு பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இருப்பினும், ரஷ்யாவின் ராணுவத் தலையீட்டால் நிலைமை தலைகீழாக மாறியது, அசாத் முக்கியப் பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடு பெற முடிந்தது.
அசாத் ஆட்சியின் மூன்றாவது தசாப்தத்தில் சிரியாவில் மோசமான பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும், இந்த மிகப்பெரிய சவாலில் இருந்து அதிபர் தப்பியதாகத் தோன்றியது.
இருப்பினும், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதலைத் தொடங்கியது, இதனால் காஸா போர் ஏற்பட்டது. அதன் விளைவுகளை லெபனானும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. குறிப்பாக அசாத்தின் கூட்டாளியான ஹெஸ்பொலாவை இது பாதித்தது.
இந்தப் போர்ச் சூழல் ஹெஸ்பொலாவுக்கு அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் உள்படப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது.
லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த அதே நாளில், இஸ்லாமிய குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் சிரியாவில் திடீர் தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் இரண்டாவது நகரமான அலெப்போவை கைப்பற்றினர்.
தெற்குப் பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவியதை அடுத்து அவர்கள் ஹமா மற்றும் பிற நகரங்களையும் கைப்பற்றியுள்ளனர் .
சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளது. அதிபர் அசாத் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிபர் அசாத்திற்கு ஆதரவளித்த ரஷ்யா அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளது.
இதற்கிடையே சிரியாவில் இப்போது என்ன நடக்கிறது? உள்நாட்டுப் போர் முதல் தற்போது வரை அங்கு என்ன நடந்தது? முழு விவரங்களையும் இங்கு தெரிந்துகொள்வோம்.
சிரியாவில் என்ன நடந்தது?
பஷார் அல் அசாத் குடும்பம் சிரியாவை இரும்புக்கரம் கொண்டு 53 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இப்போது அது முடிவுக்கு வந்துவிட்டது.
அதிபர் பஷார் அல்-அசாத் 2000ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன்னதாக அவரின் தந்தை ஏறக்குறைய 30 ஆண்டுகள் சிரியாவை ஆட்சி செய்தார்.
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவர் நாட்டின் அமைதியான, ஜனநாயக சார்பு எழுச்சியைக் குலைத்தார். அது பேரழிவு தரும் உள்நாட்டுப் போராக மாறியது.
இதில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால் கடந்த புதன் கிழமை, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் எனப்படும் இஸ்லாமியவாத அரசாங்க எதிர்ப்புக் குழு வடமேற்கில் ஒரு பெரிய தாக்குதலை வெற்றிகரமாக வழிநடத்தியது.
கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றினர். பின்னர் சிரிய ராணுவம் வீழ்ச்சி அடைந்ததால், தலைநகர் டமாஸ்கஸுக்கு கிளர்ச்சிப் படை முன்னேறியது.
பல சிரியர்கள் தாங்கள் ஒரு புதிய சுதந்திர உணர்வை உணர்வதாகக் கூறுகிறார்கள். சிலர் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.
சிரியா யார் கட்டுப்பாட்டில் இருந்தது?
ரஷ்யா, இரான் மற்றும் இரானிய ஆதரவு ஆயுதக்குழுவின் உதவியுடன் அதிபர் அசாத் தலைமையிலான அரசு நாட்டின் பெரும்பாலான நகரங்களின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுத்த பிறகு, சிரியாவில் நீண்டகாலமாக நடந்து வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உணரப்பட்டது.
உள்நாட்டுப் போரின் மையமாக இருந்த பகுதிகள் பெரும்பாலும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன.
ஆனால், அமெரிக்கா மற்றும் சிரிய ஜனநாயகப் படையின் ஆதரவு பெற்ற குர்திஷ் இனக்குழு தலைமையிலான கூட்டணியால் கட்டுப்படுத்தப்பட்ட வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் உள்பட நாட்டின் பல பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.
அலெப்போ, இட்லிப் ஆகியவையே, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பகுதிகளாக இருந்தன. இவை, துருக்கி எல்லையில் அமைந்துள்ளன. அங்கு வசித்து வந்த 40 லட்சம் மக்களில் பலரும் இடம்பெயர்ந்தனர்.
இந்தப் பகுதிகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) ஆயுதக்குழுவின் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தன. ஆனால் பிற கிளர்ச்சிப் பிரிவுகளும் ஜிஹாதி குழுக்களும் அங்கு செயல்பட்டன. சிரிய தேசிய ராணுவம் (SNA) என அறியப்படும் துருக்கிய ஆதரவு கிளர்ச்சிப் பிரிவுகளும், அங்குள்ள சில பகுதிகளை துருக்கிய படைகளின் ஆதரவுடன் கட்டுப்படுத்தியது.
கடந்த 2011இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக ‘ஜபத் அல்-நுஸ்ரா’ (Jabhat al-Nusra) என்ற வேறொரு பெயரில் ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ அமைக்கப்பட்டது.
இஸ்லாமிய அரசு (IS) எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ரா குழுவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார்.
சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குழுவாக இது கருதப்பட்டது. ஆனால் அதன் புரட்சிகர கொள்கையைவிட, ‘ஜிஹாதி சித்தாந்தம்‘ அக்குழுவின் உந்து சக்தியாகக் கருதப்படுகிறது.
மேலும் அந்த நேரத்தில், “சுதந்திர சிரியா” எனும் பெயரில் இயங்கும் முக்கிய கிளர்ச்சிக் கூட்டணியுடன் இந்தக் குழு முரண்படுவதாகவும் அறியப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பை பகிரங்கமாகப் பிரித்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார்.
ஓராண்டு கழித்து, இதேபோன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ என்ற பெயரை இந்தக் குழு பெற்றது.
இருப்பினும், ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல நாடுகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பை அல்-கொய்தாவின் துணை அமைப்பாகக் கருதி, அல்-நுஸ்ரா முன்னணி என்று அடிக்கடி குறிப்பிடுகின்றன.
இதன் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானியை, பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்தது. அதோடு அவரைப் பிடிக்க வழிவகுக்கும் தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
அல்-கொய்தா, ஐஎஸ் அமைப்பு உள்பட அதன் எதிராளிகளை நசுக்குவதன் மூலம் இட்லிப் மற்றும் அலெப்போ மாகாணங்களில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தனது அதிகாரத்தைப் பலப்படுத்தியது.
இது இஸ்லாமிய சட்டத்தின்படி பிரதேசத்தை நிர்வகிப்பதற்கு `சிரிய இரட்சிப்பு அரசாங்கத்தை’ அமைத்தது.
ஜவ்லானி வெள்ளிக்கிழமை சிஎன்என் நேர்காணலில், “புரட்சியின் இலக்கு அசாத் ஆட்சியை அகற்றுவதே” என்றும், “அரசு நிறுவனங்கள் மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சில்” அடிப்படையிலான ஓர் அரசாங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.
பல ஆண்டுகளாக, சிரிய அரசாங்கப் படைகள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றதால், இட்லிப் போர்க்களமாகவே இருந்தது.
ஆனால் 2020இல், இட்லிப் நகரத்தை மீட்பதற்கான அரசின் உந்துதலை நிறுத்துவதற்காக துருக்கியும் ரஷ்யாவும் மத்தியஸ்தம் செய்து போர்நிறுத்தம் கொண்டு வந்தன. ஆங்காங்கே சண்டைகள் நடந்தாலும் போர்நிறுத்தம் பெரும்பாலும் நீடித்தது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்கள் நவம்பர் 27ஆம் தேதியன்று “ஆக்கிரமிப்பைத் தடுக்க” ஒரு தாக்குதலைத் தொடங்கியதாகக் கூறினர். அரசாங்கமும், அதன் நட்பு நாடான இரான் ஆதரவு ஆயுதப் படைகளும் வடமேற்கில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினர்.
ஆனால், பல வருடகால யுத்தம், பொருளாதாரத் தடைகள் மற்றும் ஊழலால் அரசாங்கம் பலவீனமடைந்து, அதன் ஆதரவாளர்கள் மற்ற மோதல்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இரான் ஆதரவு பெற்ற லெபனான் குழுவான ஹெஸ்பொலா, போரின் ஆரம்ப ஆண்டுகளில் கிளர்ச்சியாளர்களை பின்னுக்குத் தள்ளுவதில் முக்கியப் பங்கு வகித்தது. ஆனால், சமீபத்தில் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதலால் ஹெஸ்பொலா பாதிக்கப்பட்டது.
இஸ்ரேலிய தாக்குதல்கள் சிரியாவில் இரானிய ராணுவ தளபதிகளை அகற்றியது மட்டுமின்றி அங்குள்ள அரசாங்க சார்பு ஆயுதக்குழுவினரின் விநியோக வழிகளைச் சிதைத்தது. யுக்ரேனில் நடந்த போரால் ரஷ்யாவும் திசைதிருப்பப்பட்டது. அவர்கள் இல்லாமல், அசாத்தின் படைகள் பலவீனமடைந்தன.
கிளர்ச்சிக் குழுக்கள் அதிபர் அசாத்தை வீழ்த்தியது எப்படி?
அலெப்போ நகரை நோக்கி முன்னேறிய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆயுதக்குழுவினர்
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் பெரும்பகுதியை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் நவம்பர் 30 அன்று கைப்பற்றினர். தங்களது முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கிய மூன்று நாட்களில் இது நடந்தது.
அரசாங்கம் தனது துருப்புகள் மற்றும் பாதுகாப்புப் படைகளை விரைவாகத் திரும்பப் பெற்ற பின்னர் அவர்கள் அங்கு சிறியளவிலான எதிர்ப்பை மட்டுமே எதிர்கொண்டதாக அவர்கள் கூறினர்.
அசாத் தனது ஆதரவாளர்களின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை “நசுக்க” சபதம் செய்தார். ரஷ்ய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின.
இரான் ஆதரவு ஆயுதக்குழுவினர் அலெப்போ-டமாஸ்கஸ் நெடுஞ்சாலையில் தெற்கே உள்ள அடுத்த நகரமான ஹமாவை சுற்றி ராணுவத்தின் தற்காப்புக் கோடுகளை வலுப்படுத்த படைகளை அனுப்பியது. இருப்பினும், ஹமா வியாழக்கிழமை அன்று கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.
சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸை கைப்பற்றுவதே தங்களது அடுத்த இலக்கு என்று கிளர்ச்சியாளர்கள் உடனடியாக அறிவித்தனர். மேலும் ஒருநாள் மோதலுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு அதைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
அதேநேரத்தில், சிரியாவின் தென்மேற்கில், ஜோர்டான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் மற்ற கிளர்ச்சிப் பிரிவுகள், 24 மணிநேரத்திற்குள் டெரா, சுவைடா நகரங்களைக் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை அவர்கள் அடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸுக்குள் நுழைந்து, நாட்டின் மிகவும் மோசமான ராணுவ சிறை என்று கூறப்படும் சைட்னாயாவில் இருந்த கைதிகளை விடுவித்ததாக அறிவித்தனர்.
இரண்டு மணிநேரத்திற்குள், அவர்கள்: “கொடுங்கோல் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத் தப்பி ஓடிவிட்டார்” என்று அறிவித்தனர்.
“அவர் ஆட்சியின் கீழ் 50 வருட அடக்குமுறை, 13 வருட குற்றங்கள், கொடுங்கோன்மை மற்றும் கட்டாய இடப்பெயர்வுக்குப் பிறகு, இருண்ட காலத்தின் முடிவையும் சிரியாவின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் நாங்கள் இன்று அறிவிக்கிறோம்,” என்று அவர்கள் கூறினர்.
கிளர்ச்சியாளர்கள் வருவதற்கு சற்று முன்னர் அதிபர் தலைநகரில் இருந்து விமானம் மூலம் எங்கோ ரகசிய இடத்திற்குச் சென்றதாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாத்தின் பிரதமர் முகமது அல்-ஜலாலி, “சிரிய மக்களால் தேர்வு செய்யப்பட்ட “எந்தவொரு தலைமையுடனும் ஒத்துழைக்கத் தயார்” என்று ஒரு வீடியோவில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து சிரியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கும் சிரிய குடிமக்கள், அதிபர் அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததைக் கொண்டாடி வருகின்றனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள உமையாத் சதுக்கம் அப்பகுதி மக்களின் கொண்டாட்டத்திற்கான மையமாக இருக்கிறது.