உலகெங்கும் பல லட்சம் பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். பல நாடுகளில் பாலியல் தொழில் என்பது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகக் கூட இருக்கிறது. ஆனால், இங்கே ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் அதை தாண்டி ஒரு படி சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு, இன்சூரன்ஸ் கூட வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பாலியல் தொழில் என்பது உலகில் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபடுவோருக்குப் பொதுவெளியில் வைத்து மரண தண்டனை தரும் நாடுகளும் கூட உள்ளன. அதேநேரம் ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரைப் பலவற்றில் பாலியல் தொழில் என்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இந்தச் சூழலில் பெல்ஜியம் நாட்டில் பாலியல் தொழிலாளிகளுக்குப் பல முக்கிய உரிமைகளை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. பெல்ஜியம் நாட்டில் புதிய சட்டம்: மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கடந்த 2022ம் ஆண்டில் பாலியல் தொழில் தடை செய்யப்பட்டது இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இப்போது 2 ஆண்டுகள் கழித்து பாலியல் தொழிலாளிகளுக்கு பெல்ஜியம் அரசு பல உரிமைகளை வழங்கியுள்ளது. ஜெர்மனி, கிரீஸ், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் அதற்கு முன்பு இருந்தே பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட போதிலும்,
இதுபோல உரிமைகளை வழங்கும் முதல் நாடு என்ற சிறப்பை பெல்ஜியம் பெற்றுள்ளது. பாலியல் தொழிலாளிகளை மற்ற தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களைப் போலவே கருதப்பட்டு அவர்களின் உரிமையை பெல்ஜியம் அரசு அங்கீகரித்துள்ளது.
அதன்படி பாலியல் தொழிலாளிகளுக்கு மகப்பேறு விடுப்பு, ஓய்வூதியம், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அதற்குத் தனியாக விடுப்பு என மற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள் வழங்கப்படும் என பெல்ஜியம் அறிவித்துள்ளது. பாலியல் தொழிலாளிகளுக்கு இதுபோன்ற சலுகைகளை அறிவிக்கும் முதல் நாடாக பெல்ஜியம் இருக்கிறது.
இது தொடர்பாக அங்கு பாலியல் தொழில் செய்யும் சோஃபி என்ற பெண் கூறுகையில், "நாங்கள் இங்குப் பெரிய சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், எங்களுக்கு இந்த விதிகள் ஓரளவுக்கு உதவும். பொருளாதார சிக்கல் காரணமாக நான் கர்ப்பமாக இருந்த போதும் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டி இருந்தது. பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை கூட என்னால் விடுப்பு எடுக்க முடியவில்லை" என்று கூறுகிறார். மனித உரிமை ஆர்வலர்கள் இந்தச் சட்டத்தை வரவேற்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்,
"பாலியல் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை தீவிரமானது. இதன் காரணமாகவே அடிப்படை உரிமைகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். உலகளவில் பாலியல் தொழிலாளிகளின் நலன்களைக் காக்க எடுக்கப்பட்ட மிகச் சிறந்த நடவடிக்கை இது" என்றார்.
ஒழுங்குபடுத்த முடியும்: இந்த புதிய விதிகள் பாலியல் தொழிலை நடத்தும் முதலாளிகளை ஒழுங்குபடுத்தவும் செய்கிறது. இதன் மூலம் குற்ற வழக்குகள் இருப்போரால் பாலியல் தொழிலாளிகளிடம் வர முடியாது. மேலும், ஆபத்தாக உணர்ந்தால் பாலியல் தொழிலாளிகள் பயன்படுத்த எச்சரிக்கை பட்டன்களையும் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெல்ஜிய பாலியல் தொழிலாளர்
சங்கத்தின் தலைவர் விக்டோரியா கூறுகையில், "எங்களுக்கு இந்த சட்டம் ரொம்பவே முக்கியமானது. பொதுவாகவே உங்கள் வேலை சட்டவிரோதமானது என்றால், உங்களைப் பாதுகாக்க எந்த நெறிமுறைகளும் இல்லை. இப்போது சட்டம் வந்துள்ளதால் எங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று கூறினார். அதேநேரம் சிலர் பாலியல் தொழில் என்பது பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் சுரண்டல் என்றும் அதைத் தடை செய்ய வேண்டும் என் குறிப்பிடுகிறார்கள். மற்ற தொழிலாளர்களைப் போல அதை அங்கீகரிப்பது இந்த சுரண்டலை அதிகரிக்கவே செய்யும் என்பது அவர்கள் வாதமாக இருக்கிறது.