ஸ்பாவில் பாலியல் தொழில்! நிற்க வைத்து ‘செலக்சன்’
27 Nov,2024
கரூரில் அரசு பள்ளி அருகில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக பகீர் புகார் எழுந்துள்ளது. போனில் பேச வேண்டாம் நேரில் வாங்க என அழைக்கும் ஸ்பாவில் இருக்கும் பெண், பெண்களை வரிசையில் நிற்க வைத்து செலக்ட் செய்து கொள்ளுமாறு பேசிய வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வரும் கும்பலை கொத்துக் கொத்தாக கைது செய்தனர் சென்னை காவல்துறையினர். இது தொடர்பாக 55 மசாஜ் சென்டர்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் அனைவருமே கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள், சிலர் 18 வயதுக்குட்பட்ட மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்பா என்ற பெயரில் வேலைக்கு அழைத்து வரும் பெண்களுக்கு சம்பளம் தவிர்த்து கூடுதலாக பணம் வேண்டுமென்றால் வாடிக்கையாளர்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் நிறைய பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதோடு தொடர்ந்து அவர்கள் தனிமையில் இருக்கும் வீடியோவை எடுத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் போலீசாரின் அதிரடி ஆக்சனால் சென்னையில் இந்த கும்பலின் நடமாட்டம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கரூர், திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில், கரூரில் அரசு பள்ளி அருகில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக பகீர் புகார் எழுந்துள்ளது. மேலும், இதுதொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
" கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் நீலம் ரகுவரன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த அவர் கரூரில் ஸ்பா என்ற பெயரில் அரசுப் பள்ளி அருகிலும் பல்வேறு இடங்களிலும் பாலியல் தொழில் நடைபெறுவதாக புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் லோட்டஸ் ஸ்பா இயங்கி வருகிறது. அங்கு செல்லும் ஆண்களிடம் அங்கு பணியில் இருக்கும் பெண்கள் மசாஜ்க்கு 1000 ரூபாயும், பாலியல் தொழிலுக்கு 1000 ரூபாயும் வசூலித்து வருகின்றனர். பாலியல் தொழிலுக்கான தொகை ரூமுக்குள் சென்றவுடன் அங்குள்ள பெண்ணிடம் கொடுக்க வேண்டும். அது குறித்து வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், அங்கு 4 இளம் பெண்கள் உள்ளனர். அந்த பெண்களை அங்கு வரும் ஆண்கள் முன் நிறுத்தி, எந்த பெண் பிடிக்குமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. மேலும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாலை பள்ளி முடித்து வரும் போது, அங்கு வரும் ஆண்கள் ஸ்பாவில் இருந்து, மாணவிகளை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். "
ஸ்பா அமைந்துள்ள இடம் கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்து மிக அருகில் அமைந்துள்ளது. ஆனால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போன்ற ஸ்பா கரூர் மாநகருக்கு உட்பட்ட எல்லையில் நான்கு அமைந்துள்ளது. அனுமதி பெற்ற ஸ்பாவில் கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தெரப்பி படித்து பயிற்சி பெற்றவர்கள் பணி புரிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால், இங்கு சட்டவிரோதமாக ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வருகிறது. சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பாவை இழுத்து மூடி, அதை நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கண்டுகொள்ளாத காவல்துறையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.