நவம்பர் 21-ஆம் தேதி அன்று அதிகாலை யுக்ரேன் நகரமான டினிப்ரோவை ரஷ்யா தாக்கியது. ஆரம்பத்தில், இந்த தாக்குதலில் ரஷ்யா பயன்படுத்திய ஆயுதம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அது எந்த வகையான ஏவுகணை என்பது கூட தெரியவில்லை.
பிபிசி ரஷ்ய சேவையின் ராணுவ விவகாரங்கள் தொடர்பான செய்தியாளர் பாவெல் அக்செனோவ் இந்த ஏவுகணையை பற்றிய ஆதாரங்களையும், இதனை பயன்படுத்த முடிவு செய்ததன் மூலம் யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு புதின் என்ன சமிக்ஞையை அனுப்ப முயற்சிக்கிறார் என்பதையும் பற்றி ஆய்வு செய்தார்.
யுக்ரேனில் கிழக்கு பகுதியில் உள்ள நகரமான டினிப்ரோவின் மீது ஒரு புதிய நடுத்தர வகை ஏவுகணையான ஒராஷ்னிக்கை பயன்படுத்தியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.
யுக்ரேன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது கேடர் ஏவுகணை என்று அந்நாடு கூறி வருகிறது. இந்த ஆயுதம் என்னவாக இருக்கும் என்பதை அறிய சாத்தியகூறுகள் குறைவாகவே உள்ளன.
குறிப்பாக, பல புலனாய்வு அமைப்புகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் ஒரு பிராந்தியத்தில், இவ்வளவு தூரத்தில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதை கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.
ஏவுகணைகள் வானில் பறந்து வரும்போது தெளிவாகத் தெரியும், குறிப்பாக அதன் ராக்கெட்டின் எஞ்ஜினிலிருந்து வெளியேறும் நெருப்பினை செயற்கைக்கோள்கள் மற்றும் உளவு விமானங்களால் கூட பார்க்க இயலும்.
சோதனை முயற்சிகளின்போதோ அல்லது பயிற்சியின் போதோ ஏவுகணைகள் வெளியிடும் நெருப்பின் விதத்தை வைத்தே அதை பற்றி பல விஷயங்கள் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு புதிய ஏவுகணை ஏவப்பட்டது குறித்த தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் அதை பற்றி நிறைய கண்டுபிடிக்கலாம்.
மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் இந்த ஏவுகணையின் வகையை பற்றி மிகவும் துல்லியமான கண்டுபிடிப்புகளை வைத்திருந்தாலும், அந்த தரவுகளை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை.
பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் உள்ள வர்ணனையாளர்களும், நிபுணர்களும் இந்த ஏவுகணை பற்றி தங்களது சொந்த கணிப்புகளை தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை ஏவுகணையான ரூபேஸை (Rubezh) நடுத்தர வகை தாக்குதலுக்கு பயன்படுத்தியது என்பதே பலரும் தெரிவித்த கருத்தாகும்.
இந்த ஏவுகணையில் அணு ஆயுதம் அல்லாத வெடிபொருட்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அது மாக் 10 வேகத்தில் அதாவது விநாடிக்கு சுமார் 2.5 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடும் என்று அதிபர் புதின் கூறினார்.
இந்த ஏவுகணையில் தனியாக பிரிந்து சென்று வெடிக்கும் குண்டு பகுதி பொருத்தப்பட்டிருந்தன. இதுவே வர்ணனையாளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
டினிப்ரோவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ, ஆறு கூட்டு பொருட்கள் தரையில் விழுவதை காட்டுகிறது. அதில் ஒவ்வொன்றிலும் சுமார் ஆறு ஒளிரும் தன்மை கொண்ட பொருட்களும் இருந்தன.
இதுபோன்ற ஏவுகணைக்கு இது மிகப் பெரிய எண்ணிக்கை. எனினும், தரையில் வெடிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த ஒளிரும் தன்மை கொண்ட பொருட்கள் கைனடிக் (kinetic) குண்டுகளாக இருக்கலாம் என்பதை குறிக்கிறது.
இவை அளவில் மாறுபடலாம். தாக்குதலின் சமயத்தில் ஏவப்படும்போது உருவாகும் கைனடிக் ஆற்றலை பயன்படுத்தி அவை இலக்கை அழிக்க முயற்சி செய்கின்றன. அதிக வேகத்தை பொறுத்து இதன் ஆற்றல் அதிகமாக இருக்கும்.
ரஷ்யாவின் அஸ்ட்ராகான் பகுதியில் உள்ள கபுஸ்டின் யார் சோதனை தளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படியானால், இந்த ஏவுகணை சுமார் 800 முதல் 850 கிமீ தூரத்தில் இருந்துதான் எவப்பட்டுள்ளது.
விளாடிமிர் புதின் ஒராஷ்னிக்கை நடுத்தர வகை ஏவுகணை என குறிப்பிட்டார். அத்தகைய ஏவுகணைகள் சுமார் 1,000 முதல் 5,500 கிமீ வரை சென்று தாக்கும். இது வெறும் அதிகாரப்பூர்வ தரவுகளே. இதனை குறைந்த தூர இலக்குகளை குறிவைத்து கூட ஏவலாம்.
ரஷ்யாவில் இந்த வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இரண்டு நிறுவனங்களே இருக்கின்றன: மேக்யேவ் ராக்கெட் மையம் மற்றும் மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் தெர்மல் டெக்னாலஜி.
இதில் மேக்யேவ் ராக்கெட் மையம் திரவ எரிபொருட்களின் உதவிகொண்டு இயங்கும் ஏவுகணைகளை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மேலும் இவை கனமானவை மற்றும் மிக நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடியவை.
உதாரணமாக சர்மட் ஏவுகணை 18,000 கிமீ தூரம் வரை செல்லும் என்று அதிகாரப்பூர்வமாக தரவுகள் உள்ளன.
மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆப் தெர்மல் டெக்னாலஜி, நகரும் ஏவுதளங்களில் இருந்து ஏவப்படும் திட-எரிபொருள் கொண்டு இயங்கும் இயந்திரங்களைக் கொண்ட சிறிய ஏவுகணைகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது.
இந்த ஏவுகணைகள் இலகுவானவை, சிறிய குண்டுகளை கொண்டு செல்லக்கூடியவை. இவை குறைந்த தூரம் மட்டுமே செல்லும். உதாரணமாக யார்ஸ் ஏவுகணை 12,000 கி.மீ. தூரம் வரை பறக்கும் .
டினிப்ரோவை தாக்கிய ஏவுகணை பெரும்பாலும் மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆப் தெர்மல் டெக்னாலஜியால் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே ஏற்படுத்தப்பட்ட நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை தடை செய்யும் ஒப்பந்தம் (INF) 1988-ஆம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு வரை இந்த RSD-10 Pioneer ஏவுகணை பயன்பாட்டில் இருந்தது.
அந்த நேரத்தில், சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் உள்ள அனைத்து நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்கள் அழிக்கப்பட்டன. மேலும் வருங்காலத்தில் அத்தகைய ஏவுகணைகளை தயாரிக்கவோ, சோதிக்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
INF ஒப்பந்தம் 2019-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. எனவே அத்தகைய ஏவுகணைகளின் வளர்ச்சி இதற்கு பிறகு மட்டும்தான் தொடங்கியிருக்க முடியும்.
அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷாய்கு, 2020-ஆம் ஆண்டிற்குள் நடுத்தர வகை ஏவுகணை அமைப்பை உருவாக்க ரஷ்யா உத்தேசித்துள்ளதாக அறிவித்தார். இது நடைபெறவில்லை, ஆனால் அத்தகைய ஏவுகணைகளை உருவாக்க வேலை நடைபெற்று வந்தது.
மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் தெர்மல் டெக்னாலஜியின் சமீபத்திய கண்டுபிடிப்புகளுள் ஒன்று RS-26 ரூபேஸ் எனும் கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை ஆகும்.
இது 2,000 முதல் 6,000 கிமீ வரை சென்று தாக்கக்கூடியது என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. இது INF ஒப்பந்தத்தின் தூர வரம்புகளை சற்று மீறும் வகையில் இருந்து இருந்தது.
ரஷ்யாவின் ஏவுகணைப் படைகளின் தளபதியான கர்னல் ஜெனரல் செர்கே கரகாயேவ், 2013-ஆம் ஆண்டே இந்த ஏவுகணையின் சில அம்சங்களை பற்றி குறிப்பிட்டதாக அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.
''RS-26 ரூபேஸ் ஏவுகணை 120 டன்களுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கும். ஆனால் இதன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையை நாம் 80 டன்களாக குறைத்து இலகுவாக்க முடியும்'' என்றார் அவர்.
வேறு விதமாக கூற வேண்டும் என்றால், ரஷ்யா தொடக்கத்தில் யார்ஸ் ஏவுகணையை அடிப்படையாக கொண்டு ஒரு இலகுவான ஏவுகணையை உருவாக்கியது. இந்த ஏவுகணை INF ஒப்பந்தத்தின் வரம்புகளை 500 கிலோமீட்டர் மீறுவதாக இருந்தது
இதன் விளைவாக, புதின் குறிப்பிட்டுள்ள ஒராஷ்னிக் ஏவுகணை, பெரும்பாலும் 800 கிலோமீட்டர் வரை செல்லும் ஒரு ஏவுகணை அமைப்பாகவோ அல்லது இன்னும் குறுகிய தூரம் சென்று தாக்க அந்த அமைப்பில் ஒரு மேம்பாடாகவோ இருக்கலாம் என்று வர்ணனையாளர்கள் கருதுகின்றனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஏவப்பட்டால் எச்சரிக்கை அமைப்புகளால் கண்டறிய முடியும், மேலும் இது எதிர் தாக்குதல் நடத்த போதுமான நேரத்தை வழங்குகிறது.
ஆனால் ஒரு ஏவுகணை நிமிடங்களில் பறந்து வந்து இலக்கை தாக்கினால் அப்போது தடுப்பு அமைப்புகள் பலன் அளிக்காது.
அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை தடுக்கும் உத்திக்கு எதிரான பல விஷயங்களில், குறுகிய மற்றும் நடுத்தர தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் அடங்கும்.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளை இடைமறிக்கவோ அழிக்கவோ சாத்தியமற்றது. எனவே எதிர் தாக்குதல் நடத்த போதுமான நேரமில்லாததால், அதற்கும் வாய்ப்பில்லை.
கூடுதலாக இந்த ஏவுகணையின் நகரும் ஏவுதளங்களை கண்டறிந்து முதல் தாக்குதலிலே அழிப்பது மிகவும் கடினமாக இருந்தன.
எல்லைகளுக்கு அருகே குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் இருப்பது ராணுவ மோதலை தூண்டலாம்.
ஏன் என்றால் எந்நேரம் வேண்டுமானாலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற ஒரு அச்சுறுத்தலாக அவை இருந்தன. அதிலிருந்து தற்காத்துகொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது.
டினிப்ரோ நகரின் மீது நடந்த தாக்குதலே, இந்த வகை ஏவுகணைகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட முதல் தாக்குதலாகும்
இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான எச்சரிக்கைகளை ரஷ்யா வழங்கும் என்று புதின் தெரிவித்துள்ளார்.
ஒராஷ்னிக் ஏவப்படுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்பு, அணு ஆயுத ஆபத்து குறைப்பு மையம் வழியாக ரஷ்யா அமெரிக்காவிற்கு ஒரு தானியங்கி அறிவிப்பை அனுப்பியது என்று அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.
இந்த ஏவுகணை ஏவப்படுவதற்கு முந்தைய நாள், 'ஒரு குறிப்பிடத்தக்க வான்வழித் தாக்குதல் பற்றிய தகவல்' காரணமாக, யுக்ரேனில் உள்ள தனது தூதரகத்தை அமெரிக்கா மூடியது.
மேலும் ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளின் தூதரகங்களும் மூடப்பட்டன, ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தூதரகங்கள் திறந்திருந்தன. தங்கள் குடிமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தின.
இந்த ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பே யுக்ரேனுக்கு எதிராக ரூபேஸ் ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி யுக்ரேனின் டெலிகிராம் செயலி சேனல்களில் செய்திகள் வெளியாகின.
இருப்பினும், ஒரு புதிய ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஏற்கனவே ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையின் சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின் அறிவித்திருந்தார்.