விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. எப்படி இருக்கிறார்? -
18 Nov,2024
பிரபல விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள நிலையில் அவர் உடல்நிலை குறித்த தவறான தகவல்கள் வெளியான நிலையில் அவரது புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் விண்வெளிக்கு பலமுறை பயணித்துள்ளார். கடந்த ஜூன் 5 அன்று சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சில நாட்கள் பணிகள் தொடர்பாக சென்றிருந்தனர். அதன்பின்னர் அவர்களை அழைக்க போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அனுப்பப்பட்ட நிலையில் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வீரர்களை அழைக்காமலே விண்கலம் பூமிக்கு திரும்பியது.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் பூமிக்கு திரும்ப முடியும் என பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தபடியே தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். சுனிதா வில்லியம்ஸின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவர் உடல் எடை குறைந்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸின் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள நாசா அவருக்கு அங்கு சரியான மருத்துவ உதவிகள் உள்ளதாகவும், அவர் எடை குறைவு ஏதுமின்றி நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.