நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்த 3 இளம்பெண்கள்.. ! மங்களூரில் ஷாக்
17 Nov,2024
கர்நாடக மாநிலம் மங்களூரில் நீச்சல் குளத்தில் குளிக்க சென்ற 3 இளம்பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது. நீச்சல் குளத்தில் இறங்கி விளையாடிய போது, ஆழமான பகுதிக்கு ஒரு பெண் சென்றதாகவும் , அவரை மீட்க மற்ற இரண்டு பெண்கள் சென்ற நிலையில் மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே சோமேஸ்வரா உச்சில்லா பகுதி உள்ளது. கடற்கரை நகரமான இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தருவது வழக்கம். இதனால்,
அங்கு ஏராளமான சொகுசு விடுதிகளும் அமைந்துள்ளன. இந்த சூழலில், நேற்று அங்குள்ள ரிசார்ட் ஒன்றுக்கு நிஷிதா (வயது 21), பார்வதி(20), கீர்த்தனா ( 21) ஆகிய மூன்று பெண்களும் வந்துள்ளனர். மைசூருவை சேர்ந்த மூன்று இளம்பெண்களும் தாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளம் அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். நீச்சல் குளத்தில் இறங்கி விளையாடிய போது, ஒரு பெண் 6 அடி ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறி பெண் உயிருக்கு போராடியதால், அவரை காப்பாற்ற ஏனைய இருவரும் உள்ளே சென்றுள்ளனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மூன்று பெண்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சில நிமிடங்களில் இந்த ஒட்டுமொத்த சம்பவமும் நடைபெற்றுள்ளதால் யாராலும் காப்பாற்றவும் முடியாமல் போனது என்று சொல்லப்படுகிறது. நீச்சல் குளத்தில் இறங்கும் முன்பாக தங்களது ஐபோன் கேமராவில் பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
முன்னதாக மூன்று பெண்கள் நீச்சல் குளத்தில் உயிரிழந்ததை ரிசார்ட் உரிமையாளர் முதலில் பார்த்துள்ளார். உடனடியாக அவர் அளித்த தகவலை அடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், மூன்று பெண்களின் சடலங்களையும் மீட்டுள்ளனர். ரிசார்ட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். கர்நாடகாவில் நீச்சல் குளத்தில் மூழ்கி மூன்று இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.