முதுகு வலிக்கான நிவாரணம் தரும் அங்கியை தொடர்ந்து அணியலாமா..?
09 Nov,2024
இன்றைய போட்டிகள் நிறைந்த வாழ்க்கை சூழலில் இளைய தலைமுறையினர் அலுவலகத்தில் பணியாற்றுவதற்காக வீட்டிலிருந்து பல கிலோ மீற்றர் தூரம் வரை துவி சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்கள்.
சாலைகளின் தரம் மேம்படாததால் நாளாந்தம் மேற்கொள்ளும் பயணத்தின் காரணமாக இளம் வயதிலேயே முதுகு வலிக்கு ஆளாகிறார்கள். மேலும் சிலருக்கு முதுகு தண்டுவடத்தில் வலியுடன் கூடிய பாதிப்பும் ஏற்படக்கூடும்.
இவர்களுக்கு வைத்தியர்கள் லும்போசாக்ரல் எனும் பெல்டினை அதாவது பிரத்யேக அங்கியை அணிந்து கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள். இந்த அங்கி முதுகு வலிக்கு நிவாரணத்தை வழங்குகிறது.
இதன் காரணமாக எம்மில் பலரும் முதுகு வலி ஏற்படும் போதும் அல்லது பயணம் மேற்கொள்ளும் போதும் இத்தகைய பிரத்யேக அங்கியினை அணிந்து கொள்கிறார்கள்.
மேலும் வேறு சிலர் அலுவலகத்தில் பணியாற்றும் போதும் இத்தகைய பிரத்யேக அங்கியை அணிந்து கொண்டு பணியாற்றுகிறார்கள்.
முதுகு வலிக்கான நிவாரணத்திற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த பிரத்தியேக அங்கியை தொடர்ச்சியாக ஆறு மணி தியாலத்திற்கு மேல் பாவிக்க கூடாது என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
மேலும் பயணத்தை மேற்கொள்ளும் போது அதிலும் குறுகிய தூரத்திலான பயணத்தை மேற்கொள்ளும் போது உங்களுடைய முதுகு தண்டில் அதிர்வு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், அதன் காரணமாக வலி ஏற்படக்கூடாது என்பதற்காகவும், இத்தகைய பிரத்யேக அங்கியை அணிந்து கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
மேலும் இந்த அங்கியை தொடர்ச்சியாக பாவிக்கும் போது.. ரத்த உறைவு மற்றும் கால் பகுதி செயலிழப்பு உள்ளிட்ட வேறு பாரிய பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால்... இதனை தொடர்ச்சியாக பாவிக்க கூடாது என அறிவுறுத்துகிறார்கள்.
அத்துடன் இத்தகைய பிரத்யேக அங்கியை அணியும் போது வைத்தியர்கள் கற்பிக்கும் முறையில் தான் அணிய வேண்டும். அப்போதுதான் அவை வலிக்கு நிவாரணத்தை வழங்கும்.
அதே தருணத்தில் இந்த பிரத்யேக அங்கி என்பது முதுகு வலிக்கான தற்காலிக நிவாரணி என்பதனையும் பயனாளிகள் மனதில் உறுதியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் இதன் போது வைத்தியர்கள் பரிந்துரைக்கும் இயன்முறை சிகிச்சையையும், மருந்தியல் சிகிச்சையையும், முறையாக மேற்கொண்டால்... முதுகு வலி பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறலாம்.