வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபிய பாலைவனத்தில் பனிப்பொழிவு! காரணம் என்ன
07 Nov,2024
சவுதி அரேபிய (Saudi Arabia) பாலைவனத்தில் வரலாற்றில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வறண்ட பாலைவன நிலப்பரப்பில் இவ்வாறு குளிர்கால நிகழ்வுகள் இடம்பெறுவது அதிசயமாக பார்க்கப்படுகின்றது.
அரபிக் கடலில் இருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிபொழிவிற்கு காரணம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த பாலைவனத்தில் தற்போது பனிப்பொழிவும் நிகழ்ந்துள்ளது.
சவூதி அரேபியாவின் வானிலை திணைக்களம் எதிர்வரும் நாட்களுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
நீண்ட கால பாதகமான நிலைமைகளுக்கு தயாராகுமாறு மக்களை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசாதாரண காலநிலை காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.