•“அபி பிரபா போட்டிருந்த யூனிஃபாமில் வலது பக்கம் வைக்க வேண்டிய பெயரை இடது பக்கம் வைத்திருந்தார். ஸ்டார்கள் இடம் மாற்றி வைத்திருந்தார். அவர் தப்புத் தப்பாக யூனிஃபாம் அணிந்திருந்ததை வைத்தே அவர் போலி எஸ்.ஐ என்பதை கண்டறிந்தோம்ஸ”
போலி சப் இன்ஸ்பெக்டர் அபி பிரபா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண் ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் எனக்கூறி நகரில் பைக்கில் வலம்வந்தார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த போலீஸ் அதிகாரிகள் அவர் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். அதில் சில இளைஞர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வாட்ஸ் அப் ஸ்டேட்டாக வைத்ததுடன், ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்தனர்.
அந்த போட்டோக்களைப் பார்த்ததும் அவர் போலி என்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து. சப் இன்ஸ்பெக்டர் சீருடையில் பைக்கில் சுற்றிக்கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பெயர் அபி பிரபா (34) எனவும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அபி பிரபா(34), ரயில் பயணத்தின்போது நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த சிவா(24) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நட்பு காதலாக மலர்ந்துள்ளது.
தனக்கு 24 வயது ஆவதாக கூறி 24 வயதான சிவாவை காதலித்து வந்துள்ளார் 34 வயது ஆன அபி பிரபா.
இதற்கிடையே தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிவாவை வற்புறுத்தியுள்ளார் அபி பிரபா. அதற்கு, அரசு பணியில் இருக்கும் பெண்தான் வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துவதாக சிவா தெரிவித்ததுடன் ஒரு திட்டமும் வகுத்துக்கொடுத்துள்ளார்.
அதன் படி, அபி பிரபாவுக்கு போலீஸ் எஸ்.ஐ-க்கான சீருடைகளை தைத்துக்கொடுத்ததுடன் எஸ்.ஐ-யாக நடிக்கும்படி ஐடியா கொடுத்துள்ளார்.
நாகர்கோவிலுக்கு எஸ்.ஐ கெட்டப்பில் வந்த அபி பிரபா பள்ளிவிளை பகுதியில் உள்ளவர்களிடம் தான் சென்னை குற்றப்பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பதாகவும், விரைவில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பணி மாறுதலாகி வர உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் அபி பிரபாவுடன் நின்று செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்தனர்.
அபி பிரபா போட்டிருந்த யூனிஃபாமில் வலது பக்கம் வைக்க வேண்டிய பெயரை இடது பக்கம் வைத்திருந்தார்.
ஸ்டார்கள் இடம் மாற்றி வைத்திருந்தார். அவர் தப்புத் தப்பாக யூனிஃபாம் அணிந்திருந்ததை வைத்தே அவர் போலி எஸ்.ஐ என்பதை கண்டறிந்தோம்
. இப்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். எஸ்.ஐ எனக்கூறி பணம் வசூல் செய்துள்ளாரா அல்லது வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.