ஹிஸ்புல்லாவை மொத்தமாக அழிக்க திட்டம்?
31 Oct,2024
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா இஸ்ரேல் தாக்குதலில் கடந்த மாதம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நைம் காசிம் என்பவர் இப்போது ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். மத்திய கிழக்கில் போர் நிறுத்ததிற்கு உலக நாடுகள் முயலும் நிலையில், ஹிஸ்புல்லா புதிய தலைவருக்கு இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. கடந்தாண்டு அக்.
மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் படை நடத்திய தாக்குதல் தான் இது எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்தது. ஹமாஸ் நடத்திய அந்தத் தாக்குதலில் பல நூறு இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், பல நூறு பேரை ஹமாஸ் படை பணைய கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. இது அப்போது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது.
கொடூர தாக்குதல்: இதையடுத்து காசாவில் உள்ள ஹமாஸ் மீது போரைத் தொடங்குவதாக இஸ்ரேல் அறிவித்தது. காசாவில் சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது. அங்குப் பதுங்கி இருந்த ஹமாஸ் படையினர் தேடி தேடித் தீர்த்துக் கட்டியது. அதேநேரம் இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதல் காரணமாக அங்கிருந்த அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இது லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.
காசாவில் இஸ்ரேலின் நிறுத்த வேண்டும் எனப் பலமுறை வலியுறுத்தின இருப்பினும், இஸ்ரேல் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதனால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாவும் தனது தாக்குதலைத் தொடங்கியது. முதலில் எல்லையில் சிறு துப்பாக்கிச் சூடுகளாக இருந்த இந்தத் தாக்குதல்கள் பிறகு பெரிதாக மாறியது. இதையடுத்து ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.
புதிய தலைவர்: அப்படிக் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் தான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த நஸ்ரல்லா கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா அமைப்பைப் பல ஆண்டுகள் வழிநடத்திய நஸ்ரல்லாவை ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் கொன்றது. இது மத்திய கிழக்கில் நிலவிய பதற்றத்தை மேலும் மோசமாக்கியது. இந்தச் சூழலில் ஹிஸ்புல்லா அமைப்பும் தனது புதிய தலைவரை அறிவித்துள்ளது. நைம் காசிம் ஹிஸ்புல்லா தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எச்சரிக்கும் இஸ்ரேல்: அவர் இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவரான நைம் காசிமை எச்சரிக்கும் வகையில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோசவ் கல்லன்ட் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் சில ட்வீட்களை பதிவிட்டுள்ளார். முதல் ட்வீட்டில், "இந்த நியமனம் தற்காலிகமானது. கவுண்டவுன் தொடங்கிவிட்டது"
என்று எச்சரித்துப் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்றே பலரும் எதிர்பார்த்த நிலையில், ஹிஸ்புல்லா தலைவரை எச்சரிக்கும் வகையில் இஸ்ரேல் பதிவிட்டுள்ள இந்த ட்வீட் சர்ச்சையாகியுள்ளது. ஹிஸ்புல்லா மீதான தங்கள் தாக்குதல் தொடரும் என்பதை அறிவிக்கும் வகையிலேயே இந்த ட்வீட் இருக்கிறது. இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டு வர உலக நாடுகள் முயன்று வரும் நிலையில், அதை கை கொடுக்குமா இல்லை.. ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்துமா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லப் போகிறது.