எம்மில் சிலருக்கு அவர்களுடைய மணிக்கட்டு பகுதியில் வட்ட வடிவத்தில் கட்டி போல் நீர்க்கட்டி ஏற்பட்டிருக்கும். இத்தகைய கட்டி ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் உண்டாகும்.
அழகாகவும், பொலிவாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்பதில் பெரு விருப்பம் கொண்ட பெண்களும், பெண்மணிகளும் அவர்களுடைய மணிக்கட்டு பகுதியில் நீர்க்கட்டி ஏற்பட்டிருப்பதை விரும்புவதில்லை.
இதற்காக அவர்கள் பிரத்யேக வைத்திய நிபுணர்களிடம் சிகிச்சைக்காக செல்வதுண்டு. மருத்துவ மொழியில் கேங்க்லியன் நீர்க்கட்டி என குறிப்பிடப்படும் இந்த நீர்க்கட்டி பாதிப்பிற்கு முழுமையாக நிவாரணமளிக்கும் வகையில் நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
கைகளின் மணிக்கட்டு பகுதி, கைகளின் தசை நாண் பகுதி, கைகளில் உள்ள மூட்டு பகுதி , கணுக்கால் மற்றும் கால் பகுதியில் இத்தகைய கேங்க்லியன் நீர்க்கட்டிகள் ஏற்படக்கூடும்.
பொதுவாக இவை வலி உள்ளிட்ட எந்த அசௌகரியத்தையும் வழங்குவதில்லை. ஆனால் சிலருக்கு இத்தகைய கட்டி வலியை உண்டாக்கும்.
வேறு சிலருக்கு கட்டி ஏற்பட்டிருக்கும் கைகளை இயக்குவதில் பாரிய துயரம் ஏற்படக்கூடும். மேலும் சிலர் இத்தகைய கட்டி ஏற்பட்டவுடன் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ! என்ற அச்சத்தையும் கொண்டிருப்பர்.
ஆனால் இது புற்றுநோய் கட்டி அல்ல.
இந்த நீர்க்கட்டி துல்லியமாக விவரிக்க இயலாத காரணங்களால் சிலருக்கு ஏற்படுகிறது. சிலருக்கு கைகளை இயல்பான அளவை விட கூடுதலாக பாவிப்பதாலும் இத்தகைய நீர்க்கட்டிகள் உண்டாகக்கூடும். சிலருக்கு மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படும் இத்தகைய நீர்க்கட்டி விரைவாக வளர்ச்சி அடைந்து பயத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய நீர்க்கட்டி எங்கு ஏற்பட்டிருக்கிறது? அதன் வடிவமும், அளவையும் பொருத்தும் சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது.
இத்தகைய நீர்க்கட்டி பாதிப்பு உள்ளவர்களுக்கு வைத்தியர்கள் எக்ஸ்ரே , அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைக்க கூடும். இத்தகைய கட்டி முதன் முதலாக ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு பிரத்யேக உறையை அணிந்து கொள்ளுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்துவார்கள்.
இந்த பிரத்யேக உறையை அணிந்து கொள்வதால் நீர்க்கட்டி பாதிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
வேறு சிலருக்கு இத்தகைய கேங்க்லியன் நீர்க்கட்டி பாதிப்பிற்கு நிவாரணம் தருவதற்கு அல்ட்ராசோனிக் எனும் லேசர் கருவி மூலம் மசாஜ் தெரபி வழங்குவர்.
சிலருக்கு இத்தகைய நீர்க்கட்டி பாதிப்பு மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடும். இதனால் பெண்களும், பெண்மணிகளும் இத்தகைய கேங்க்லியன் நீர்க்கட்டி தோற்றத்தில் வேறுபாட்டை ஏற்படுத்துவதால் உளவியல் ரீதியாக பாதிப்பை உணர்வார்கள்.
மேலும் அந்த நீர்க்கட்டி வலியை ஏற்படுத்தக்கூடும். இவர்களுக்கு நவீன சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் முழுமையான நிவாரணம் வழங்குவார்கள்.