இஸ்ரேல் ராணுவம் கடந்த 17-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் ஒரு ஆப்ரேஷனை செய்தது. அதில், ஹமாஸ் படையின் முக்கிய தலைவரான யஹ்யா சின்வர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரது மறைவுக்கு பிறகு இன்று இஸ்ரேல் ராணுவம் இன்று இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. ஒன்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக காசாவில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஹமாஸ் தலைவரான யஹ்யா சின்வர் தனது குடும்பத்தினருடன் செல்லும் வீடியோவும், மற்றொன்று யஹ்யா சின்வர் கொல்லப்பட்ட 17-ம் தேதி அவர் மரணத்திற்கு முன்பான இறுதி நிமிட வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக சுரங்கத்தில் சின்வர் இருக்கும் வீடியோவில், யஹ்யா சின்வர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் நடந்து செல்வது இருக்கிறது. மேலும், அந்த வீடியோவில் அவர்கள், டி.வி., தண்ணீர், தலையணை, படுக்கை உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் அட்மிரல் டேனியல் ஹகாரி, “ஹமாஸ் தலைவர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக தனக்கு தேவையான அனைத்தையும் சேமித்தும், பாதுகாத்தும் வைத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சுரங்கப்பாதையும் அறையும், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இருக்கும் அவரது குடும்ப வீட்டின் கீழ் இருக்கிறது. அந்த அறையில் கழிவறை, குளியலறை, சமையல் அறை உள்ளிட்டவை இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஆப்ரேஷனில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் மரணமடைந்தார். அதேசமயம், இறந்தது அவரா என முதலில் சந்தேகம் எழுப்பட்டது. மேலும், ஹமாஸ் படையினர் யஹ்யா சின்வர் மரணம் பற்றி எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இஸ்ரேல் ராணுவம் “தாங்கள் காசாவில், யஹ்யா சின்வர் உள்ளிட்ட மூவர் பதுங்கியிருந்த வீட்டினுள் தாக்குதல் நடத்தினோம் அதில் மூவரும் பலியாகியுள்ளனர். அதில் ஒருவர் யஹ்யா சின்வராக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தது.
இதனால், சின்வர் மரணம் தொடர்பாக தொடர்ந்து மர்மம் நீடித்துவந்தது. அந்த சமயத்தில் தான், இஸ்ரேல் இறந்தவர்களின் உடலில் சின்வர் உடல் என அடையாளம் காட்டிய உடலின் பிரேத பரிசோதனை முடிவை வெளியிட்டு “அவர் தலையில் குண்டடி பட்டு இறந்தார்” எனத் தெரிவித்தது. மேலும், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர், “டி.என்.ஏ. பரிசோதனை மூலம், இறந்தது சின்வர் தான்” என உறுதி செய்தது.
அதேபோல், இஸ்ரேல் தடயவியல் துறை, ‘ஹமாஸ் தலைவர் சின்வர் உடல் பரிசோதனைக்கு கொண்டுவரும் போதே அவரது ஒரு விரல் துண்டிக்கப்பட்டு இருந்தது’ என்று தெரிவித்திருந்தது.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகாக பலமுறை சின்வரை நெருங்க முயற்சித்தும் அவர் தப்பினார். ஆனால், இறுதியாக கடந்த 17-ம் தேதி காசாவில் அவரை அடையாளம் கண்டோம். மேலும் இஸ்ரேல் ராணுவம், “சின்வர் மூக்கை துடைக்க உபயோகித்த டிஷ்யூவை கைப்பற்றியது. அதன் மூலம் இறந்தது சின்வர் தான்” என உறுதி செய்தது என்றும் இஸ்ரேல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி யஹ்யா சின்வர் இறப்பதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட அவரின் இறுதி நிமிட வீடியோவையும் இஸ்ரேலிய படை வெளியிட்டுள்ளது. ட்ரோன் உதவியுடன் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், காசாவில் உள்ள இஸ்ரேல் ராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளான வீட்டின் உள்ளே சோபாவில் யஹ்யா சின்வர் அமர்ந்திருக்கிறார். மேலும், அவரது வலது கையில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்த ட்ரோனை பார்க்கும் அவர் திடீரென அருகில் இருந்த ஒரு கம்பை தனது இடது கையால் தூக்கி அதன் மீது வீசுகிறார்.