இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது?
50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?
இலங்கையின் மஸ்கெலிய மாவட்டத்தில் அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். 1970களின் மத்திய காலம் அது.
வீட்டை காலி செய்யும் போது, வேலைகளை செய்ய உதவியாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த பதின்வயது சிறுவனான ரஞ்சித்தின் உதவியை அந்த தம்பதியினர் நாடியுள்ளனர்.
பொருட்களை பழைய வீட்டிலிருந்து மாற்றி, புதிய வீட்டில் வைக்கும் வேலை பரபரப்பாக நடந்தது. பொருட்களை மாற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ரஞ்சித்.
அப்போது பழைய வீட்டில் இருந்த ஒரு தலையணையைப் புரட்டியபோது, அதற்கு அடியில் ஒரு சிறு தொகை இருந்தது. அந்த தொகை அவருடைய வாழ்க்கையை மாற்றும் என்று அன்று அவர் எதிர்பார்க்கவில்லை.
தலையணையின் அடியில் மொத்தமாக ரூ. 37.50 இருந்தது. வேலை ஏதும் இல்லாமல் இருந்த ரஞ்சித், அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டார்.
வீடு மாறும் மும்முரத்தில் இருந்த எழுவாய்க்கு தலையணைக்கு அடியில் பணம் வைத்திருந்தது வெகு நேரத்திற்குப் பிறகே நினைவுக்கு வந்தது.
வீடு மாறிய பிறகு, பணத்தைத் தேடியவர், தயக்கத்துடன் ரஞ்சித்திடம் அந்தப் பணத்தைப் பற்றிக் கேட்டுள்ளார். ஆனால், அப்படி பணம் எதையும் தான் பார்க்கவில்லையென ரஞ்சித் மறுத்துவிட்டார். அந்த காலகட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களின் வறுமைச் சூழலில் 37 ரூபாய் என்பது சற்றுப் பெரிய தொகைதான்.
இதையடுத்து, கோவிலுக்குப் போய் சாமியிடம் முறையிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார் எழுவாய். இதைக் கேட்டு சற்று அதிர்ந்து போனாலும், இவரும் எழுவாயுடன் கோவிலுக்கு சென்றுள்ளார் ரஞ்சித்.
எழுவாய், கடவுளிடம் முறையிட்டுவிட்டுச் சென்றவுடன் இவரும் கடவுள் சிலை முன்பு நின்று, "அந்தப் பணத்தை நான்தான் எடுத்தேன் என்னை ஒன்றும் செய்துவிடாதே" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.
ரஞ்சித்தின் தாய் மாரியம்மாள், தந்தை பழனிச்சாமி ஆகிய இருவருமே இலங்கையின் மலையகத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்கள்.
ரஞ்சித்திற்கு மூன்று அண்ணன்கள், இரண்டு மூத்த சகோதரிகள் என பெரிய குடும்பம். வறுமை காரணமாக, அவரால் இரண்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை.
1977ஆம் ஆண்டில், ரஞ்சித்திற்கு 17 வயதான போது தமிழ்நாட்டிற்குச் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார். இதையடுத்து வீட்டிலிருந்து கொஞ்சம் நகைகளை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு புறப்பட்டு விட்டார்.
தமிழ்நாட்டிற்கு சென்ற பிறகு ஆரம்பம் அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும் போகப்போக நிலைமை மாறியது என்று நினைவுகூர்கிறார் ரஞ்சித்.
"வீட்டில் திருடிக் கொண்டு வந்த நகையை விற்று, ஒரு பெட்டிக் கடையை வைத்தேன். அதில் திவாலாகி தெருவுக்கு வந்து விட்டேன். அதன்பின் உணவகங்களில் டேபிள் துடைக்கும் வேலை, ரூம் பாய் வேலைகளைப் பார்த்தேன். பிறகு, பேருந்து நிலையத்தில் முறுக்கு விற்பது, மூட்டை தூக்குவது போன்ற வேலைகளையும் செய்தேன். நான் செய்யாத வேலையே கிடையாது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனக்குச் சீக்கிரமே அது கைவந்த கலையாகிவிட்டது. பிறகு சிறிய அளவில் ஒரு கேட்டரிங் நிறுவனத்தை துவங்கினேன். தற்போது அந்த நிறுவனம் 125 பேர் பணியாற்றக் கூடிய பெரிய அளவிலான நிறுவனமாகியிருக்கிறது" என்கிறார் ரஞ்சித்.
ஒரு முறை உடல்நலம் சரியில்லாமல் போன போது ரஞ்சித் பைபிளைப் படித்துள்ளார் . பைபிளில் இருந்த 'துன்மார்க்கர்கன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் போகிறான். நீதிமான் இறங்கிச் சென்று திரும்பக் கொடுக்கிறான்’ என்ற வாசகம் அவரை மிகவும் யோசிக்க வைத்துள்ளது.
"இதற்குப் பிறகு, எங்கெங்கு யார் யாரிடமெல்லாம் சின்னச் சின்னக் கடன்களை வாங்கினேனோ, அவற்றையெல்லாம் தேடித்தேடிப் போய்த் திரும்பக் கொடுத்தேன். வங்கியில் செலுத்தாமல் இருந்த 1500 ரூபாயையும் கூட, பல ஆண்டுகள் கழித்துப்போய்ச் செலுத்திவிட்டேன். ஆனால் அந்த எழுவாய் பாட்டியிடம் திருடிய 37 ரூபாயைத் திருப்பிக் கொடுக்கவில்லையே என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது." என்கிறார் ரஞ்சித்.
மேலும் தொடர்ந்த அவர், "அந்த பாட்டி இறந்திருப்பார் என்று தெரியும். ஆனால், அவருடைய வாரிசுகளைத் தேடிக் கண்டு பிடித்தாவது, அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தேன். இலங்கையிலுள்ள என்னுடைய நண்பர்கள் மூலமாக அவர்களைத் தேட ஆரம்பித்தேன். நீண்ட காலத் தேடுதல்களுக்குப் பின், அந்தப் பாட்டியின் மகன்கள் வசிக்கும் இடத்தை கடந்த ஆண்டில் வாங்கி விட்டேன். அந்தப் பாட்டிக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். மகன்களில் ஒருவர் இறந்து விட்டார். மகள், தமிழ்நாட்டிற்கு வந்து விட்டதாகத் தகவல் கூறினார்கள்" என்று விவரித்தார்.
சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதிக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் என மூன்று ஆண் குழந்தைகளும் வீரம்மாள், அழகம்மாள், செல்லம்மாள் என மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர்.
இதில் முருகையா இறந்துவிட்டார். அவருக்கு மனைவியும் நான்கு மகன்களும் இருந்தனர். பழனியாண்டி கொழும்பு நகரத்திற்கு அருகிலும் கிருஷ்ணன் நுவரேலியாவுக்கு அருகில் உள்ள தலவாக்கலையிலும் வசித்துவந்தனர்.
இவர்களைத் தொடர்புகொண்ட ரஞ்சித், சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதியின் குழந்தைகளுக்கான தனது கடனைத் தீர்க்க விரும்புவதாகக் கூறினார்.
அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று கொழும்பு நகருக்கு சென்ற ரஞ்சித், சுப்பிரமணியன் குடும்பத்தாரை உணவகம் ஒன்றில் சந்தித்தார்.
அவர்களிடம் 1970களில் நடந்த சம்பவத்தை விவரித்த ரஞ்சித், அவர்களுக்கென எடுத்துவந்த புதிய ஆடைகளைப் பரிசளித்தார். அதற்குப் பிறகு, தான் திருடிய ரூ.37.50-க்குப் பதிலாக முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் ஆகியோரின் குடும்பத்திற்கு இலங்கை மதிப்பில் தலா 70,000 ரூபாயை பரிசளித்தார்.
இந்த நிகழ்வு, சுப்பிரமணியன் - எழுவாய் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்தத் தம்பதியின் இரு மகன்களான பழனியாண்டியும் கிருஷ்ணனும் இன்னமும் ஆச்சரியம் விலகாமல் இருக்கின்றனர்.
ஆச்சர்யத்தில் ஆழ்ந்த எழுவாய் - சுப்ரமணியம் தம்பதியின் மகன்கள்
தற்போது கொழும்பு நகரில் வசிக்கும் பழனியாண்டி, "ரஞ்சித் செய்த காரியம் எங்களை நெகிழ வைத்தது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதர் இருக்கிறாரா என்று தோன்றியது. அறியாப் பருவத்தில் செய்த செயலுக்காக திரும்பவும் வந்து பணத்தைக் கொடுத்தது, சந்தோஷத்தை அளித்தது. இந்த நேரத்தில் இந்தக் காசு வந்தது எல்லோருக்குமே உதவியாகத்தான் இருந்தது. குறிப்பாக என்னுடைய தம்பிக்கும் அண்ணனின் மனைவிக்கும் மிகுந்த உதவியாக இருந்தது. அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்" என்கிறார்.
பழனியாண்டிக்கு இப்படி பணம் திருடுபோனது தெரியாது. "நான் 12 - 13 வயதிலேயே கொழும்பு நகருக்கு வந்துவிட்டேன். அம்மாவும் அப்பாவும் ஊரில் இருந்தார்கள். அந்த நேரத்தில் என்ன நடந்ததென்பது எனக்குத் தெரியாது. அம்மாவுக்கும் இவர்தான் எடுத்தார் என உறுதியாகத் தெரியாது. இப்போது இவர் சொல்லாவிட்டால் யாருக்குமே இதைப் பற்றித் தெரிந்திருக்காது" என்கிறார் பழனியாண்டி.
எழுவாயின் இரண்டாவது மகன் பழனியாண்டியின் மகள் பவானி, கொழும்புக்கு அருகில் உள்ள வத்தலையில் வசிக்கிறார். "எங்கள் பாட்டியை நான் பார்த்ததுகூட கிடையாது. இத்தனை வருடங்கள் கழித்து, எனது பாட்டி வழியில் இப்படியொரு தொகை எங்களுக்கு வரும் என்று துளியும்கூட நாங்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை. இந்தக் காலத்தில் இவ்வளவு நன்றியுடன் இருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது, நேர்மையும், மனிதநேயமும் இன்னும் மரணிக்கவில்லை என்று தெரிகிறது. இலங்கையில் இப்போது விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரச் சூழல் மிக மோசமாக இருக்கிறது. இந்த நேரத்தில் கிடைத்த இந்தத் தொகை எங்களுக்கு பெரிய உதவிதான்" என பிபிசியிடம் தெரிவித்தார் பவானி.
தற்போது இவர்களது குடும்பத்தினர் யாருமே, பழைய ஊரில் வசிக்கவில்லை. கிருஷ்ணனின் குடும்பத்தினர் நுவரேலியா தலவாக்கலை அருகில் உள்ள செயின்ட் கோம்ஸ் என்ற இடத்தில் வசிக்கின்றனர். அலகொல பகுதியில் சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதி வசித்த வீடு இருந்த பகுதி தற்போது தரைமட்டமாகக் காட்சியளிக்கிறது.
அந்த இடத்தில் நின்றபடி பிபிசியிடம் பேசிய கிருஷ்ணன், "எனக்குக் கொடுத்த பணத்தை என் பிள்ளைகள் நான்கு பேருக்கும் பத்தாயிரம், பத்தாயிரம் என கொடுத்துவிட்டேன். சரியான சந்தோஷம். அவ்வளவு கஷ்டத்தில் இருந்தோம். இப்போது அம்மா இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்கள்" என நெகிழ்ந்துபோய் பேசுகிறார்.
எழுவாயின் ஒரு மகளான செல்லம்மாளின் குடும்பம், திருச்சிக்கு அருகில் இருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில்அந்த குடும்பத்தினருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க முயற்சி செய்து வருவதாக கூறுகிறார் ரஞ்சித்.
"இந்தப் பணத்தைத் திரும்பக் கொடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது" என்கிறார் ரஞ்சித்.