நண்பரின் காதலிக்கு மது கொடுத்து பலாத்காரம்: வாலிபருக்கு போலீஸ் வலை
12 Oct,2024
திருவனந்தபுரத்தில் நண்பரின் காதலியான ஐஏஎஸ் படிக்கும் மாணவிக்கு மது கொடுத்து மயக்கி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் குறவன்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் தீபு (30). பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கூப்பர் தீபு என்ற ஒரு பெயரும் உண்டு. இந்த நிலையில் தீபுவின் நண்பருடைய காதலி ஒருவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.
இந்த மாணவி திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தன்னுடைய தோழியுடன் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு 11 மணியளவில் மாணவியை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய தீபு, அவரது காதலனை குறித்து சில ரகசிய விஷயங்களை பேசவேண்டும் எனக்கூறினார்.
இதனை நம்பிய மாணவி தான் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு தீபுவிடம் கூறினார். இதன்படி தீபு அங்கு சென்றார். அப்போது மாணவியின் தோழி அங்கு இல்லை என கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட தீபு அந்த மாணவிக்கு மது வாங்கி கொடுத்து மயக்கி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த மாணவியை ஆபாசமாகவும் வீடியோ எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவியிடம் இந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று தீபு மிரட்டியுள்ளார்.
ஆனாலும் தீபு தன்னை பலாத்காரம் செய்தது குறித்து மாணவி தன்னுடைய காதலனிடம் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் நேற்று கழக்கூட்டம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் உடனடியாக இந்த சம்பவம் குறித்து தீபு மீது வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதையறிந்த தீபு தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.