இலக்கை அடைந்த பிறகே இந்த போர் முடிவுக்கு வரும்,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதென்யாகு
08 Oct,2024
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் ஹமாஸ், இஸ்ரேலின் மக்கள் சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். அதன்பின், போர் நிறுத்த அடிப்படையில் சிலரை ஹமாஸ் விடுவித்தாலும், மீதம் உள்ள பணயக்கைதிகளை மீட்கும் போராட்டத்தில் இஸ்ரேல் தற்போது இருந்து வருகிறது. இப்படி தொடங்கிய இந்த தாக்குதல், தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான தாக்குதலாக மாறி இருக்கிறது. நேற்றுடன் (அக்-7) இந்த தாக்குதல் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்தது.
இந்த நிலையில், நேற்று ஹமாஸ் நடத்திய தாக்குதல்களின் முதல் ஆண்டு நினைவைக் குறிக்கும் சிறப்பு இரங்கல் கூட்டம் இஸ்ரேலில் நடைபெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதென்யாகு, ‘இஸ்ரேலின் நோக்கங்கள் நடந்தால் மட்டுமே இந்த போர் முடிவுக்கும் வரும்’ என கூறியிருந்தார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், “ஹமாசின் தீய ஆட்சியை தூக்கியெறிவது, காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு வரப்போகும் தாக்குதல்களை முறியடிப்பது, எங்களுடைய குடிமக்களைத் திருப்பி அனுப்புவது என நாங்கள் நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் முடித்தவுடன் தான் போரை முடிப்போம். ஒரு வருடத்திற்கு முன்பு, இதே நாள் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்கு எதிராக, இஸ்ரேல் குடிமக்களுக்கு எதிராக ஒரு கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்தப் படுகொலைக்குப் பின், ‘இதுவரை அவர்கள் அறிந்திராத ஒரு சக்தியுடன் நாம் எதிர்த்துப் போரிடுவோம் எனவும் நாங்கள் கண்டிப்பாக வெல்வோம்’ எனவும் கூறி இருந்தேன். நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாப்பாக மாற்றுகிறோம். எங்கள் நாட்டின் குழந்தைகளுக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காகவும் அக்- 7 தேதி, அன்று நடந்தது மீண்டும் இங்கு நடக்காது என்பதை உறுதி செய்கிறேன். மேலும், இலக்கை அடைந்த பிறகே இஸ்ரேலின் இந்த போர் முடிவுக்கு வரும். இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இந்த போர் முடிவுக்கு வரும். இஸ்ரேலின் பாதுகாப்புக்காக ஈரானுடன் எதிர்தாக்குதல் நடத்துவது அவசியம் தான்”, என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசி இருந்தார்.