கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பைத் துவங்கியது. சிறிது நேரம் கழித்து, இரான் இஸ்ரேலை நோக்கி 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது.
காஸாவில் போர் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் ஒரு முழுமையான பிராந்திய மோதல் ஏற்படும் என்ற அச்சம் பரவலாக உள்ளது.
அதிகரிக்கும் இந்த அச்சுறுத்தல் எவ்வளவு பெரிய ஆபத்து? மோதல் ஏன் அதிகரித்தது? அடுத்து என்ன நடக்கலாம்?
லெபனானில் இஸ்ரேலின் நீண்டகாலத் திட்டம் என்ன?
இஸ்ரேலின் நோக்கம் முதலில், ஹெஸ்பொலாவை வலுவிழக்கச் செய்வதாக இருந்தது எனக் கூறும் லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்கத் துறைகளுக்கான பள்ளியின் (School of Oriental and African Studies) பேராசிரியர் லினா கதீப், "ஆனால் இப்போது, இஸ்ரேலின் வடக்குப் பகுதியைப் பாதுகாக்கும் வகையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதும், ஹெஸ்பொலாவை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்வதும் இஸ்ரேலின் இலக்குகளாக மாறிவிட்டதாகத் தெரிகிறது," என்கிறார்.
இஸ்ரேலின் இலக்கு இப்படி இருந்தாலும்கூட, “ஹெஸ்பொலாவுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்த முடிந்தாலும், இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலால் ஹெஸ்பொலாவை முற்றிலுமாக அழித்துவிட முடியாது,” என்கிறார் அவர்.
எழுத்தாளரும், ‘செஞ்சுரி இண்டர்நேஷனல்’ ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினருமான டாலியா ஷிண்ட்லின் இஸ்ரேல் தனது பரப்பளவை விரிவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறார்.
முதலில் வடக்கு இஸ்ரேல் மக்களை இடம்பெயர வைத்த ஹெஸ்பொலாவின் தாக்குதலை எதிர்த்து, அந்தப் பிரச்னையைச் சரி செய்வதன் மூலம், அப்பகுதி மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த இஸ்ரேல் நினைத்தது என்கிறார் அவர்.
ஆனால் “இப்போது இஸ்ரேல் அரசு மதக் குழுக்களையும் அங்கு அனுப்புகிறது. எனவே அதன் எல்லையை விரிவுபடுத்துவதும் நோக்கமாகக்கூட இது இருக்கலாம்,” என்கிறார்.
சிரியா மற்றும் இராக்கிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் எஸ் ஃபோர்ட், ஹெஸ்பொலா மீது லெபனான் அரசு தனது அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புவதாகச் சொல்கிறார்.
ஆனால், இது மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
“இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக தரைவழிப் போரை 1982இல் முன்னெடுத்தது. பாலத்தீனிய விடுதலை அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்தப் போர், லெபனான் எல்லையில் வசிக்கும் இஸ்ரேலிய குடிமக்களை நீண்டகாலத்திற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
ஆகவே தற்போதைக்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமே இஸ்ரேலின் நோக்கமாக இருந்தால், வடக்கு இஸ்ரேலில் இடம்பெயர்ந்த 60,000 மக்கள் வீடு திரும்ப வாய்ப்பு உண்டு,” என்று அறிவுறுத்துஅறிவுறுத்துகிறார்.
அப்படி உடனடியாகச் சொல்லிவிட முடியாது என்றாலும், ஆனால் கண்டிப்பாக மத்தியக் கிழக்கின் அரசியல் அதிகாரச் சமன்பாடுகள் மாறி வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மத்தியக் கிழக்கில் இரானின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் மத்தியக் கிழக்கின் அதிகாரச் சமநிலை மாறி வருவதாகக் கூறுகிறார் பேராசிரியர் லினா கதீப்.
ஆனால் அது முழுதாக நடப்பதற்கு நெடுங்காலம் ஆகும் என்கிறார் அவர்.
இதே கருத்தைப் பிரதிபலிக்கிறார் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் முன்னாள் ஆலோசகர் பிலால் சாப். “மத்தியக் கிழக்கில் இரானின் கூட்டணி நாடுகள் வலுவிழந்து வருகின்றன. இஸ்ரேலுக்கு ராஜ்ஜீயரீதியாகச் சில ஆதாயங்கள் கிடைத்துள்ளன. இவை மூலோபாய ஆதாயங்களாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதில் இருந்தே, இஸ்ரேல்-இரானின் சமநிலை தகர்ந்து இஸ்ரேலின் கை ஓங்கி வருவதாக மத்தியக் கிழக்கு இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பால் சலேம் தெரிவித்தார்.
அயதுல்லா அலி கமேனியை பொறுத்தவரை, இஸ்ரேலை அழிக்கும் திட்டம் மிகவும் முக்கியமானது.
இதற்கு பதிலளித்த எழுத்தாளரும், பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியருமான அராஷ் அஸிஸி, ஹமாஸ், ஹெஸ்பொலா ஆகிய தடுப்பான்களை இழந்த இரான், அணு ஆயுதத்தை உருவாக்க விரும்பும், என்கிறார்.
“ஒருவேளை இரான் இதைச் செய்தால், அதன்மூலம் அந்நாடு மிகவும் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், இஸ்ரேலுடன் ஒப்பிட்டால் இரானின் ராணுவ திறன்கள் பலவீனமானது. இதன் காரணமாக, இரான் ஆயுதக்குழுக்களைச் சார்ந்திருப்பது என்ற வியூகத்தைப் பின்பற்றி வருகிறது. இருப்பினும், இந்த அணுகுமுறை மிகச் சிறிய பயனையே அளித்துள்ளது," என்று விளக்குகிறார் அஸிஸி.
இஸ்ரேல் எதிர்ப்பு உணர்வு இரான் ஆட்சியின் மையமாக இருப்பதால், இரானின் அணுசக்திக் கனவுகள் இஸ்ரேலுக்கு கவலை அளிப்பதாகக் கூறுகிறார் அஸிஸி.
அதற்குக் காரணம், “அயதுல்லா அலி கமேனியை பொறுத்தவரை, இஸ்ரேலை அழிக்கும் திட்டம் மிகவும் முக்கியமானது. அவர் முன்னெடுத்துச் செல்ல முடிந்த ஒரே திட்டம் இதுதான். இஸ்ரேலுக்கு எதிரான திட்டம்தான், இஸ்லாமிய குடியரசு தலைமை வகிக்கும் ஒரே விஷயம். உலகில் இஸ்ரேலை தாக்கும் ஒரே நாடு இரான்தான்,” என்கிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், "தனது அணுசக்தி கட்டமைப்புகள் மீதான இஸ்ரேலிய தாக்குதல் அபாயம் இருப்பதை உணர்ந்துள்ள இரான், அவற்றைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்யும்" என்கிறார் லினா கதீப்.
மோதல் பரவினால் இஸ்ரேலிய படைகள் பரவலாகப் பிரிய வேண்டிய நிலை வரும்
காஸாவில் கடந்த ஓர் ஆண்டாக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே பெருமளவிலான உயிரிழப்புகளும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால், "காஸாவில் இஸ்ரேலின் நோக்கங்கள் நிறிவேறுவதில் உள்ள மிகப்பெரிய பிரச்னை, ஹமாஸுக்கு மாற்றாக இஸ்ரேலிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதுதான்," என்கிறார் டாலியா ஷிண்ட்லின்.
“[மோதல் பரவினால்] இஸ்ரேலிய படைகள் பரவலாகப் பிரிய வேண்டிய நிலை வரும். ஆனால் அதுவல்ல பிரச்னை. பாலத்தீன சுயநிர்ணய உரிமைக்கு வழிவகுக்கும், சர்வதேச மற்றும் பாலத்தீன் வரவேற்பைப் பெறும் அரசாங்கக் கட்டமைப்பிற்கான அரசியல் உத்தி இஸ்ரேலுக்கு தேவை. அது இல்லாமல் போனால், இஸ்ரேலுக்கு ஓர் அச்சுறுத்தலாகவும், இஸ்ரேல் ராணுவத்தைச் சோர்வடையைச் செய்வதாகவுமே காஸா இருக்கும்,” என்கிறார் அவர்.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள், மத்தியக் கிழக்கு மக்களுக்கு இஸ்ரேல் மீது கோபத்தை அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் பேராசிரியர் லினா கதீப். “மத்தியக் கிழக்கின் மக்கள் பாலத்தீனம் மீது கரிசனம் கொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். இது அந்தப் பகுதியில் அமைதி ஏற்படுவதைக் கடினமாக்குகிறது,” என்கிறார்.
, இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதில், ஜோ பைடனைவிட கமலா ஹாரிஸுக்கு நீண்ட கால நிர்பந்தங்கள் குறைவு என்கிறார் டாலியா ஷிண்ட்லின்.
எந்தவொரு அமெரிக்க அதிபரும் விரும்பினால் பெஞ்சமின் நெதன்யாகு மீது செல்வாக்கு செலுத்த முடியும், என்கிறார் டாலியா ஷிண்ட்லின்.
“ஆனால் அது ஆதாயமானது என்று யாரும் நினைக்கவில்லை. இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதில், ஜோ பைடனைவிட கமலா ஹாரிஸுக்கு நீண்ட கால நிர்பந்தங்கள் குறைவே. ஆனால் அவரது கட்சிக்குள் இதுகுறித்து ஒரு பிளவு உள்ளது. ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவு உள்ளது, மறுபுறம், ஒரு சிலர் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத் தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ளனர்,” என்கிறார் அவர்.
“ஆனால் எப்படியாவது இஸ்ரேலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஜனநாயகக் குரல்கள் கணிசமாக வளர்ந்து வருகின்றன. டிரம்ப் பெரிதாகப் பேசுவார், ஆனால் அமெரிக்கா போர்களுக்குள் இழுக்கப்படுவதை அவர் விரும்பமாட்டார்,” என்கிறார் அவர்.
சிரியா மற்றும் இராக்கிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் எஸ் ஃபோர்ட், "பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியாக 10 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 84,000 கோடி ரூபாய்) வழங்கும் எந்தவொரு அமெரிக்க நிர்வாகமும், அதன்மீது ஆதிக்கம் செலுத்தும்," என்கிறார்.
ஆனால், "ஆனால், அதன் விளைவாக உள்நாட்டில் ஏற்படும் அரசியல் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு அமெரிக்க அரசியல்வாதி அதிகாரப் பதவியில் இருக்கிறாரா என்பதுதான் கேள்வி. ஆனால், ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ் போன்றவர்கள் இப்போதைக்கு அப்படி ஒருவர் எந்தக் கட்சியிலும் இல்லை,” என்கிறார் அவர்.
ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களில் படைகளைப் பின்வாங்கச் செய்து மனிதாபிமான உதவிகளை அனுப்புவது ஒரு தீர்வாக இருக்கும் என்கிறார் ராபர்ட் எஸ் ஃபோர்ட்.
முன்னாள் மூத்த எஃப்.பி.ஐ உறுப்பினர் ஜாவேத் அலி, போர் தடுக்கப்படும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார்.
“இஸ்ரேல் ராணுவமும் சரி, அரசியல்ரீதியாக நெதன்யாகுவின் போர்க்குழுவும் சரி, தங்கள் கை ஓங்கியிருப்பதாக நினைக்கிறார்கள். போர்ச்சூழலில் ஒரு தரப்பு தனது கை ஓங்கியிருப்பதாக நினைக்கும் சூழலில், போர் தடுக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஏனெனில், தங்கள் கை ஓங்கியிருக்கும்போது எதிரி மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்க முடியும் என்று நினைப்பார்கள்,” என்கிறார் அவர்.
ராபர்ட் எஸ் ஃபோர்ட், இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளது என்கிறார்.
“முதலாவது, இஸ்ரேல் காஸாவில் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வது. ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களில் படைகளைப் பின்வாங்கச் செய்து மனிதாபிமான உதவிகளை அனுப்புவது. இஸ்ரேலியர்களோ, அமெரிக்கர்களோ அல்ல, பாலத்தீனர்கள் தேர்ந்தெடுக்கும் புதிய பாலத்தீன அதிகாரத்தை அனுமதிப்பது.
இரண்டாவதாக, லெபனானில் ஒரு போர்நிறுத்தம். இஸ்ரேல் தனது விமானத் தாக்குதல்கள் மற்றும் தரைவழிப் படையெடுப்புகளை நிறுத்த வேண்டும். அதற்கு ஈடாக இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா ராக்கெட்/ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்,” என்கிறார் ராபர்ட் எஸ் ஃபோர்ட்.