ஈரானுக்கு எப்போதும் ஆதரவுக்கரம் நீட்டி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. லெபனானை தலைமையிடமாகக் கொண்டு இது இயங்குகிறது. லெபனானின் அரசியல் அதிகாரத்திலும், நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்கிறது. ஹமாஸின் கூட்டாளியாக, போராளிக் குழுவாகவும் ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது.
எப்போதெல்லாம் காஸாவின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது ஹிஸ்புல்லா. யார் இந்த ஹிஸ்புல்லா? என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஈரானுக்கு எப்போதும் ஆதரவுக்கரம் நீட்டி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. லெபனானை தலைமையிடமாகக் கொண்டு இது இயங்குகிறது. லெபனானின் அரசியல் அதிகாரத்திலும், நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்கிறது. ஹமாஸின் கூட்டாளியாக, போராளிக் குழுவாகவும் ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது.
1982 ஆண்டு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் லெபனானை ஆக்கிரமித்தன. இதனை எதிர்த்துக்கும் வகையில் ஷியா முஸ்லீம்கள் குழு இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது.
அரபு நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக ஈரானும் அதன் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையும், அப்பொழுது வளர்ந்து வந்த போராளிகளுக்கு நிதி மற்றும் பயிற்சி அளித்தன. அந்த குழுதான் “கடவுளின் கட்சி” என்று பொருள்படும் ’ஹிஸ்புல்லா’வாக உருவெடுத்தது.
பின்னர், இஸ்ரேலுக்கு எதிராகச் சக்தி வாய்ந்த அமைப்பாக வளர்ச்சியடைந்த ஹிஸ்புல்லாவுக்கு ஈரானின் முழு ஆதரவும் கிடைத்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் அன்று முதல், பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்கள் வழங்குவதிலும் ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் உதவி வருகிறது.
இதனால் தனது படை பலத்தையும் ஆயுத பலத்தையும் மேம்படுத்திக் கொண்ட ஹிஸ்புல்லா, தெற்கு லெபனான் உட்பட நாட்டின் சில பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
2013 ஆம் ஆண்டு சிரியா உள்நாட்டுப் போரில் ஈடுபடுவதாக ஹிஸ்புல்லா அமைப்பு பகிரங்கமாக அறிவித்தது. சன்னி கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக சிரியா அரசாங்கத்தை ஆதரிப்பதில், ஈரானிய மற்றும் ரஷ்ய படைகளுக்கு உதவ போராளிகளை அனுப்பியது.
அப்போது, அசாத் ஆட்சியின் இராணுவ வெற்றிக்கு ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு வலுவான ராணுவ சக்தியாக மாறியது.
சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வைத்திருக்கும் ஹிஸ்புல்லா, 2006 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு எதிராக போரை நடத்தியது. பெரும்பாலானா நாடுகள் வைத்திருக்கும் அதிநவீன பீரங்கிகளின் ஹிஸ்புல்லாவிடம் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
உலகின் திறன்மிக்க ஏவுகணைகளைக் கொண்டிருப்பதால் உலக நாடுகளில் அரசை சார்ந்திராத பெரிய ஆயுதக்குழு அமைப்பாக ஹிஸ்புல்லா அறியப்படுகிறது.
1983 இல் அமெரிக்கத் தூதரக தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்றுக் கொண்டது. 1994 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் யூத சமூக மையத்தின் மீது கார் குண்டுவெடிப்பு, லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் மீது குண்டுவெடிப்பு என ஹிஸ்புல்லா அமைப்பு வெளிநாடுகளில் உள்ள யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதனால், இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஹிஸ்புல்லாவை ஒரு பயங்கரவாத அமைப்பாகவே பார்க்கின்றன.