!
செயற்கை வைரம் (Synthetic diamond) பல இடங்களில் தொழில்நுட்ப முறையில் செயற்கையாக தயாரிக்கப்படுகிறது. ஆனால் மாணிக்கம் (Ruby) செயற்கையாக தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக மாணிக்க கற்கள் இயற்கையான சூழலில் உருவாக நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் அதே செயல்முறையை ஆய்வகத்தில் வேகமாக செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு பிளாட்டின மோதிரத்தின் மீது சிறிய மாணிக்க துகளை வைத்து வளர்த்தெடுக்கும் வேதியியல் செயல்முறையை ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்டுபிடித்துள்ளார். உலகில் இவ்வாறு செய்யப்படுவது இதுவே முதல் முறை.
இந்த செயல்முறை வெற்றிகரமாக செய்த ஆய்வாளரின் பெயர் சோஃபி பூன்ஸ். அவர் இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரிஸ்டலின் வெஸ்ட் ஆஃப் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் (UWE) நகை வடிவமைப்பில் மூத்த பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார்.
சோஃபி பூன்ஸ் ஆய்வகத்தில் ஒரு வேதியியல் செயல்முறையை உருவாக்கியுள்ளார். இது மாணிக்க கல்லின் வளர்ச்சி செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
இந்த செயல்முறையின் மூலம், உண்மையான ரத்தினத்தின் ஒரு சிறிய துகள் பல மடங்கு பெரிதாகிறது.
இதுபோன்ற செயல்முறை ஆய்வகத்தில் இதுவரை நடந்ததில்லை என்று இங்கிலாந்து மேற்குப் பல்கலைக்கழகம் கூறுகிறது.
சோஃபி மாணிக்கத்தை பட்டை தீட்டும் போது விழும் நுண்ணிய துகள்களைப் பயன்படுத்தி மற்றொரு மாணிக்கத்தை உருவாக்கினார்.
ஃப்ளக்ஸ் செயல்முறை என்றால் என்ன?
மாணிக்க கற்கள் வெட்டப்படும் போது அதில் இருந்து கழிவாக சிதறும் துகள்களை வைத்து சோஃபி பூன்ஸ் ஒரு புதிய மாணிக்கத்தை வளர்த்தெடுக்கிறார். அந்த கழிவு துகளை மாணிக்க `விதை’ என்கிறார்.
அந்த மாணிக்க துகளை மோதிரம் போன்ற ஒரு பிளாட்டினம் அமைப்பில் வைத்தார். பின்னர் "ஃப்ளக்ஸ்" (flux) எனப்படும் வேதிப் பொருளைப் பயன்படுத்தினார். இது பிளாட்டினம் அமைப்பின் மீது மாணிக்க கல்லின் வளர்ச்சியை செயல்படுத்துகிறது. அவற்றின் வெப்பநிலையை குறைக்கிறது.
ஆய்வகத்தில் புதிதாக வளர்க்கப்படும் மாணிக்கம் அல்லது பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மாணிக்க கற்கள் ஆற்றல் அல்லது வெப்பநிலைக்கு உணர்திறன் கொண்டவை.
ஆனால், ஃப்ளக்ஸ் உதவியுடன் உருவாகும் இந்த மாணிக்க கற்கள் `கழிவு’ மாணிக்க துகள்களிலிருந்து சூளையில் (furnace) வளர்த்தெடுக்கப்படுகிறது. ஒரு சில நாட்களில் இது முழுமையாக உருவாகிறது.
பூன்ஸ் தனது சோதனைகளைப் பற்றி பேசுகையில், "நான் மாணிக்க கற்களை 5 முதல் 50 மணி நேரம் வரை சூளையில் வைத்து வளர்க்கும் செயல்முறையை பரிசோதித்து வருகிறேன். இந்த மாணிக்கங்கள் சூளையில் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அவ்வளவு பெரிதாகவும், தெளிவாகவும் இருக்கும்." என்றார்.
"இந்த செயல்முறையை விரைவாக்க முயற்சி செய்து வருகிறேன். குறைந்த நேரத்தில் நீடித்த மாணிக்க கற்களை உருவாக்க வேண்டும்."
"இந்த புதிய முறையானது மனிதனால் உருவாக்கப்பட்ட மாணிக்க கற்கள் செயற்கையானவை என்ற கருத்தை சவால் செய்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.
"இந்த மாணிக்க கற்கள் எந்தளவுக்கு வளரும் என்பதை உங்களால் கணிக்க முடியாது. சூளையில் மாணிக்க கற்களை உருவாக்கும் அம்சம் அது இயற்கையான முறையில் வளர்வது போன்ற உணர்வைத் தருகிறது, ஒரு நகை வடிவமைப்பாளராக அதை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஒரு சிறிய மாணிக்க துகள் அல்லது மாணிக்கத்தின் ஒரு பகுதி இருந்தால் ஆய்வகத்தில் ஒரு முழு மாணிக்க கல்லை உருவாக்க முடியும்.
ரெபேக்கா எண்டர்பி என்பவர் பிரிஸ்டலில் உள்ள நகை வடிவமைப்பாளர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்கள் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்களைப் பற்றிய கருத்து அல்லது மக்களின் அணுகுமுறை மாறிவருகிறது என்கிறார்.
"ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்படும் மாணிக்க கற்கள் செயற்கையானவை அல்ல. அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் இயற்கையாக நிகழும் அதே செயல்முறைகளின் பிரதி அல்லது பிரதிபலிப்பு "
"எனவே ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மாணிக்க கற்கள் சுரங்கத்தில் இருந்து வெட்டப்பட்ட மாணிக்க கற்களை விட மலிவானவை. ஒரு வகையில், விலையுயர்ந்த மாணிக்க கற்களுக்கு ஒப்பீட்டளவில் மலிவான ஒரு மாற்றாகும்."
ஏனெனில் சுரங்கத்தில் இருந்து மாணிக்கத்தை பிரித்தெடுக்கும் முழு செயல்முறையும், விலை உயர்ந்தது. அதனுடன் ஒப்பிடும் போது, ஆய்வக மாணிக்க கற்களின் உருவாக்கம் அதிக செலவு பிடிக்காது. எனவே அவற்றில் விலை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மாணிக்க கற்கள் 'சுற்றுச்சூழலுக்கு சிறந்ததாக' இருக்கும் என்றும் எண்டர்பி கூறினார்.
"ஆனால் இந்த மாணிக்க கற்களை உற்பத்தி செய்வதற்கு சூளையில் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி தயாரிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.
பிஎச்டி மேற்கொள்ளும் பூன்ஸ், ஆய்வகத்தில் மாணிக்க கற்களை உருவாக்கும் இந்த செயல்முறையை தான் ஆய்வு செய்து வருகிறார். அவரின் ஆய்வறிக்கையும் இதை பற்றியது தான். இத்திட்டத்தின் வெற்றியானது இப்போது இங்கிலாந்து மேற்கு பல்கலைக்கழகத்தின் (UWE) இரண்டாம் சுற்று நிதியுதவிக்கு வழிவகுத்துள்ளது.
பிரிஸ்டல் பல்கலைக்கழகமும் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளது, இதனால் மாணிக்க கற்கள் பற்றிய ஆராய்ச்சிகள் விரிவுபடுத்தப்படும்.