ரூ.84,000 பணம், பீருக்காக குழந்தையை விற்க முயன்ற அமெரிக்க தம்பதி கைது
30 Sep,2024
அமெரிக்காவின் வடமேற்கு அர்கான்சாஸ் பகுதியைச் சேர்ந்ததம்பதியர் ரூ.84,000 பணம் (1,000டாலர்) மற்றும் பீருக்காக பெற்றகுழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த தம்பதிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரோஜர்ஸ் நகரத்தின் கேம்ப்கிரவுண்ட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. டெரைன் அர்பன் (21) மற்றும் ஷலினி எக்லர்ஸ் (20) என்ற தம்பதி கேம்ப்கிரவுண்டில் மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளனர். ஒக்லஹோமா மற்றும் மிஸோரி எல்லைப்பகுதியின் அருகேயுள்ள ஓஸார்க்ஸில் ரோஜர் நகரம் அமைந்துள்ளது. பெவர் லேக் ஹைட் அவே கேம்ப்கிரவுண்ட் பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களது குழந்தையை பணத்துக்காகவும், பீருக்காகவும் விற்க முயல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, டெரைன்-ஷலினி தம்பதி தங்களது குழந்தையை விற்க ஒப்பந்தம் மேற்கொண்டு இருவரும் கையெழுத்திட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர். மைனர் குழந்தையை சட்டவிரோதமாக விற்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அந்த தம்பதி மீதுவழக்குப் பதிவு செய்த போலீஸார்அவர்களை சிறையில் அடைத்தனர். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர்கள் அக்டோபர் 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.