இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கு முன்பாகப் பல சவால்கள் காத்திருக்கின்றன.
புதிய ஜனாதிபதி மீது மக்கள் பெரும் நம்பிக்கையையும், பெரும் எதிர்பார்ப்பையும் வைத்திருக்கும் நிலையில், அவர் முன்பாக இருக்கும் பொருளாதார ரீதியிலான சவால்கள், மிகக் கடுமையானவை.
சிக்கலான பொருளாதார நிலையில் உள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிருக்கும் பொருளாதார சவால்கள் என்னென்ன? அதனை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?
2022-ஆம் ஆண்டில் இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வெகுவாகக் குறைந்ததால், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் பெட்ரோல், மண்ணெண்ணெய், எரிவாயு உருளைகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருந்தது.
இதையடுத்து ஏற்பட்ட மக்கள் போரட்டத்திற்குப் பிறகு, ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகி, இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.
இதைத் தொடர்ந்து அந்நாடு சர்வதேச நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) பேச்சு வார்த்தைகளை நடத்த ஆரம்பித்தது. முடிவில் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 25,000 கோடி ரூபாய்) கடனாக வழங்கச் சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்தது. இதற்காகச் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி வரிகள், கட்டணங்கள் ஆகியவை பெரிய அளவில் உயர்த்தப்பட்டன.
கடனுதவிக்குப் பிறகு, பெட்ரோல் போன்ற பொருட்களுக்கு இருந்த தட்டுப்பாடு நீங்கியது என்றாலும், விலைவாசி உயர்வும் கட்டண உயர்வுகளும் தாங்க முடியாத உயரத்தை எட்டின.
உச்சத்தில் விலைவாசி
ஐ.எம்.எஃப்-இன் கடன் மீட்சித் திட்டத்திற்குப் பிறகு, இலங்கைப் பொருளாதாரம் சிறிய அளவில் மேம்பட்டிருக்கிறது. நெருக்கடியின் உச்சத்தில் 70% அளவுக்கு இருந்த பணவீக்கம் இப்போது வெகுவாகக் குறைந்திருக்கிறது.
2022-ஆம் ஆண்டில் – 7.3% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டு – 2.3% ஆக உள்ளது (Annual Economic Review 2023-இன் படி). இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியிலிருந்து வெளிப்பட்டு, மேல்நோக்கி பயணிக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், மத்தியதர அடித்தட்டு மக்களைப் பொறுத்தவரை நிலைமை இன்னும் மோசமாகவே நீடிக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும் நிலை மாறியிருக்கிறது என்றாலும், பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்திருக்கின்றன. மின் கட்டண உயர்வால், மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத பல வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே, புதிய ஜனாதிபதியாகத் தேர்வாகியிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவிற்கு ஒரு சிக்கலான பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையே கிடைத்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரங்களின்போது தான் ஜனாதிபதியானால், சர்வதேச நிதியத்துடன் பேசி வரிவிதிப்பில் சில மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாகவும் மருந்து, கல்வி, உணவுப் பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை நீக்குவதாகவும் சொல்லிவந்தார்.
இப்போது அவர் ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், அரசு உடனடியாக ஏதாவது செய்யும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் இருக்கிறது. ஆகவே ஒரு சவால் மிகுந்த காலத்தையே எதிர்கொள்கிறார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜெயதேவா உய்யங்கொட சர்வேதச நிதியத்துடனான பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தி, பிற கடன் அளிக்கும் சக்திகளுடன் ஒப்பந்தங்களை முடிவுசெய்ய வேண்டும், என்கிறார்.
“இந்த அரசுக்கு வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் தங்கள் சிரமத்திற்கு ஒரு விடிவை இந்த அரசிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். ஐ.எம்.எஃப்-உடனான ஒப்பந்தம் இந்த மக்களை நிதி ரீதியாகக் கடுமையாக பாதித்திருக்கிறது. அதனால்தான் ரணில் தோல்வியடைந்தார். ஆகவே, வரிகளைக் குறைக்க அநுர முயற்சியெடுக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியிடம் வளர்ச்சிக்கான நீண்ட கால, குறுகிய கால திட்டங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனைச் செயல்படுத்த வேண்டும்,” என்கிறார் ஜெயதேவா.
கடந்த மூன்று ஆண்டுகளில் வறுமை வெகுவாக அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டும் ஜெயதேவா, இலங்கைக்கு நிறைய அந்நியச் செலாவணி தேவை என்றும், ஆனால் அதற்கான வழிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன என்கிறார். “அதற்கு, சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். அந்நிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும்,” என்றார் அவர்.
மேற்கொண்டு பேசிய ஜெயதேவா, “இலங்கையில் சுமார் 24% பேர் ஏழைகளாக இருப்பதாகச் சில புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. 2022-க்குப் பிறகு ஏழைகள் இன்னும் ஏழைகளானார்கள். 2023-க்குப் பிறகு மத்தியதர வர்க்கத்தினரும் ஏழைகளானார்கள். பொருளாதார நெருக்கடியால் சுமார் 75% பேர் பாதிக்கப்பட்டார்கள். இது அதிருப்தியை நோக்கி இட்டுச் செல்லும். அரசியல் ரீதியான சவால்களை ஏற்படுத்தும்,” என்று மேற்கோள்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில், பொதுத் துறை நிறுவனங்களை லாபகரமாக்கப் போவதாகவும் புதிதாக ஆசிரியப் பணியில் 20,000 பேரை சேர்த்துக்கொள்ளப் போவதாகவும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தப்போவதாகவும் சமூக நலத் திட்டங்களை விஸ்தரிக்கப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறுமா?
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிர்தலிங்கம், ஜனாதிபதிக்கு இருக்கும் முதல் சவால் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுவருவதுதான் என்கிறார். “அடுத்ததாக, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அரசாங்கம், வணிகர்கள், அதிகாரிகள், மக்கள் வித்தியாசத்தை எதிர்பார்க்கிறார்கள். பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும்,” என்கிறார்.
மேலும், “இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் முழு நேர யுத்தம் எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம். பெட்ரோலின் விலை கூடினால் எங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படும். உள்நாட்டுப் பொருளாதாரமும் சிக்கலான சூழலில் இருக்கிறது,” என்கிறார் அமிர்தலிங்கம்.
புதிய ஜனாதிபதி அரசின் நிதி ஒதுக்கீட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிறார் கொழும்புவிலிருந்து செயல்படும் சிந்தனைக் குழுவான ‘சென்டர் ஃபார் ஸ்மார்ட் பியூச்சரின்’ செயல் இயக்குநரான இரோமி பெரெய்ரா.
“கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில் அரசு எவ்வித சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மின்சாரக் கட்டணங்கள் 2022-2023-இல் வெகுவாக உயர்த்தப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடன் சுமை வெகுவாக அதிகரித்திருக்கிறது. குழந்தைகளின் கற்றலில் ஏற்பட்ட இழப்பு மிக மோசமாக இருக்கிறது. அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இதனை எதிர்கொள்ளப் போதுமானவையாக இல்லை. அதற்கு முன்னுரிமை தர வேண்டும்,” என்கிறார் இரோமி.
“ஜனாதிபதி முன்பாக சில வாய்ப்புகள் இருக்கின்றன. ஐ.எம்.எஃப்-உடனான பேச்சு வார்த்தைகளை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பது முக்கியம். சரியான நிபுணத்துவம் கொண்டவர்களோடு பேச ஐ.எம்.எஃப்-உம் விரும்பும். அப்படிப் பேச்சு வார்த்தை நடத்தினால், வருவாய் இலக்குகளைப் பூர்த்திசெய்வதோடு, முக்கியத் துறைகளுக்கான நிதியை எப்படி ஒதுக்குவது என்பதையும் பார்க்கலாம்,” என்கிறார் இரோமி.
இதற்கிடையில், இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது. நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றால் மட்டுமே, புதிய ஜனாதிபதியால் நிர்வாகத்தைச் சுமூகமாக எடுத்துச்செல்ல முடியும்.
“நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் தகுதியான ஆட்களை நிறுத்தினால் தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மை பெறமுடியும். சிறப்பான ஆலோசகர் குழு ஒன்றை அமைத்து, அதன்படி நடந்தால் எல்லாவற்றையும் கையாள முடியும்,” என்கிறார் அமிர்தலிங்கம்.
அநுரவுக்கு என்ன சிக்கல்?
ஆனால், தோல்வியடைந்த பிரிவினர் ஒன்றிணைந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க முயல்வார்கள் என்ற கருத்தும் இருக்கிறது.
“இது தேசிய மக்கள் சக்திக்கும் தெரியும். ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாக இருக்கிறார். பொதுவாக நாடாளுமன்றத் தேர்தல்களில், ஜனாதிபதி தேர்தலில் வென்றவர் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம். இல்லாவிட்டால் சில இடங்களைப் பெற்ற கட்சிகளை வெளியில் இருந்து ஆதரிக்கச் சொல்லலாம்,” என்கிறார் ஜெயதேவா.
ஜனாதிபதியான பிறகு நாட்டு மக்களிடம் நிகழ்த்திய முதல் உரையில், “எமக்கு வரலாற்றில் நழுவவிட முடியாத சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது,” என்று குறிப்பிட்டிருக்கிறார் அநுர குமார திஸாநாயக்க.
சவால்மிக்க இந்தச் சந்தர்ப்பம் குறித்து, அவருக்கு மட்டுமல்ல இலங்கை மக்களுக்கும் பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.