மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற
29 Sep,2024
பண்ணையாளர்: தாய்லாந்தில் விநோதம்
: மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தனது 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற தாய்லாந்து பண்ணையாளர் நத்தபாக்கை பலரும் பாராட்டி வருகின்றனர். தாய்லாந்து நாட்டின் பாங்காக் பகுதியை சேர்ந்த நத்தபாக் குன்காட் (37) என்பவர், கடந்த 17 ஆண்டுகளாக சியாம் முதலைகளை வளர்த்து வருகிறார். இறைச்சிக்காக முதலைகளை வளர்த்து வரும் நிலையில், தாய்லாந்தின் வடக்குப் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. இவற்றில் நத்தபாக்கின் முதலை பண்ணையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. பண்ணையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தால், அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வயல்களுக்குள் முதலைகள் புகுந்து மக்களை கொன்றுவிடும் அபாயம் இருப்பதாக புகார்கள் சென்றன.
உடனடியாக பண்ணையில் இருந்த முதலைகளும் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவ்வாறு செய்ய முடியவில்லை. எனவே மக்களுக்கு தீங்கு ஏற்படக் கூடாது என்பதற்காக, வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி பண்ணையில் இருந்த 125 முதலைகளை கொல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி 125 முதலைகளின் மீதும் மின்சாரத்தை பாய்ச்சி கொன்றனர். இந்நிலையில் அந்த பண்ணையில் இன்னும் 500 குட்டி முதலைகள் உள்ளன. அவை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக வனத்துறையினர் கூறினர். மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தனது 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற பண்ணையாளர் நத்தபாக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.